விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நானோ யூரியா!

Farmers Income
Nano Urea
Published on

மக்கள் தொகை அதிகரித்து வரும் இன்றைய சூழலில், உணவின் தேவையும் அதிகமாக உள்ளது. இதற்காக விவசாயத்தில் விளைச்சலை உயர்த்த யூரியா போன்ற பல செய்றகை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் இந்த உரங்கள் சுற்றுச்சூழலுக்கும், நிலத்திற்கும் அதிகளவில் தீங்கை விளைவிக்கின்றன. இதனைத் தடுத்து, அதே வேளையில் விளைச்சலை அதிகப்படுத்தும் முயற்சியில் கண்டறியப்பட்டது தான் திரவ நானோ யூரியா.

விவசாயிகளின் விளைச்சலை அதிகரித்து, வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் உதவியுடன் கொண்டு வரப்பட்டது தான் திரவ நானோ யூரியா ஆலை. இந்த ஆலை கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத்தின் காந்தி நகர் மாவட்டத்தில் கலோல் நகரத்திற்கு அருகில், இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. விளைச்சலில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும் என்பதை மையமாகக் கொண்டு திரவ நானோ யூரியா ஆலை நிறுவப்பட்டுள்ளது. நானோ யூரியா குறித்த ஆராய்ச்சி 2015 ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. நான்கு ஆண்டு தொடர் முயற்சிக்குப் பிறகு 2019 ஆண்டில் நாடு முழுவதும் நானோ யூரியா சோதனைச் செய்யப்பட்டு, 2022 ஆம் ஆண்டில் தான் ஆலை அமைக்கப்பட்டது.

திரவ நானோ யூரியாவானது அதிகளவு ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளது. விவசாயிகள் இதனைப் பயன்படுத்துவதன் மூலம், செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம். திரவ நானோ யூரியா மண், காற்று மற்றும் நீர் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் கிடங்கு மற்றும் தளவாடங்களின் செலவை வெகுவாக குறைக்கும். பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்துகளை உரிய நேரத்தில் அளிக்கிறது திரவ நானோ யூரியா.

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை உர பயன்பாட்டின் மூலம் நிலத்தில் யூரியாவின் தன்மை அதிகரித்துள்ளது. இந்தத் தன்மையை மாற்றி மண் வளத்தைப் பாதுகாக்க திரவ நானோ யூரியா உதவும். திரவ நிலையில் இருப்பதால், ட்ரோன்களைப் பயன்படுத்தி பயிர்களின் மீது நானோ யூரியாவைத் தெளிக்கலாம். இது பயிர்களின் ஊட்டச்சத்து தரத்தினை அதிகப்படுத்தி, நோய் மற்றும் பூச்சித் தாக்குதலைக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளே! DAP உரத்திற்கு மாற்று உரம் எது தெரியுமா!
Farmers Income

திரவ நானோ யூரியா உரம் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. சுற்றுச்சூழலின் தரம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் ஆகியவற்றை உயர்த்துவதிலும் திரவ நானோ யூரியா பெரும்பங்கு வகிக்கிறது. நானோ அளவில் 4% நைட்ரஜன் துகள்களை உள்ளடக்கியுள்ளது நானோ யூரியா. இதில் இருக்கும் நைடர்ஜன் துகள்கள் ஒவ்வொன்றும் 30nm முதல் 50nm என்ற அளவில் இருக்கும். பொதுவாக விவசாயிகள் பயன்படுத்தும் யூரியா உரங்களை விடவும், நானோ யூரியா அதிக பரப்பளவில் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும். இனிவரும் காலங்களில் விவசாயிகளின் முன்னேற்றத்தில் நானோ யூரியா பெரும்பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்வான செயல்திறன் மற்றும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் விளைவுகளுடன் விவசாயத் துறையில் மிகப்பெரும் புரட்சியை நானோ யூரியா ஏற்படுத்தும். இந்த உர மாற்றானது, விவசாயத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, குறைவான செலவில் அதிக மகசூலைக் கொடுத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com