200 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இயங்கிய இயற்கை அணு உலை... ஆப்பிரிக்காவில் சிக்கிய பகீர் ஆதாரம்!

Natural Nuclear Reactor
Natural Nuclear Reactor
Published on

அணு உலை, நியூக்ளியர் எனர்ஜி என்றாலே அது இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் விஞ்ஞானிகளின் மூளையில் உதித்த நவீன தொழில்நுட்பம் என்றுதான் நாம் பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதர்கள் என்ற ஒரு இனம் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, இயற்கை தனது சொந்த அணு உலையை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

1970-களில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதாரண கல், ஒட்டுமொத்த அறிவியல் உலகத்தின் பார்வையையும் முற்றிலுமாக மாற்றி அமைத்தது. அந்த இயற்கையான அணு உலை எப்படிச் செயல்பட்டது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

குழப்பத்தை ஏற்படுத்திய யுரேனியம்!

1972 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆப்பிரிக்க நாடான காபோனில் உள்ள 'ஓக்லோ' என்ற இடத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட யுரேனியம் தாதுக்களை இயற்பியல் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்தனர். பொதுவாக பூமியில் மட்டுமின்றி, நிலவில் எடுக்கப்படும் யுரேனியத்தில் கூட 'யுரேனியம்-235' எனப்படும் முக்கிய ஐசோடோப்பின் அளவு சரியாக 0.720 சதவீதம் மட்டுமே இருக்கும்.

இந்த குறிப்பிட்ட ஐசோடோப்தான் அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் மிக முக்கியமான எரிபொருளாகும். ஆனால், ஓக்லோ சுரங்கத்தில் கிடைத்த அந்த தாதுவில் மட்டும் இதன் அளவு 0.717 சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது. பார்ப்பதற்கு இது மிகச் சிறிய வித்தியாசமாகத் தெரிந்தாலும், இயற்பியல் விதிகளின்படி இது ஒரு மிகப்பெரிய முரண்பாடாகும்.

இதையும் படியுங்கள்:
யாராவது உங்களை விமர்சனம் செய்கிறார்களா? இந்தக்கதை உங்களுக்குத்தான்!
Natural Nuclear Reactor

இதை வைத்து யாராவது ரகசியமாக அணு உலை நடத்துகிறார்களா என்று ஆரம்பத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்த பாறைகளை முழுமையாக ஆராய்ந்த போதுதான் அது மனிதர்களால் உருவாக்கப்படாத முற்றிலும் இயற்கையான பாறை என்பது உறுதியானது. சுமார் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பாறைகளுக்குள் இயற்கையாகவே அணுப்பிளவு ஏற்பட்டு, ஒரு பெரிய நியூக்ளியர் ரியாக்சன் நடந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடித்தனர். அதாவது, மனிதர்களின் எந்த ஒரு தலையீடும் இல்லாமல் இயற்கை தானாகவே ஒரு மினி அணு உலையை அங்கே உருவாக்கியுள்ளது.

இது எப்படி சாத்தியம்?

பொதுவாக ஒரு அணு உலை செயல்பட வேண்டும் என்றால், அதிக அளவிலான யுரேனியம் தேவை. அதேபோல, அணுக்கள் பிளவுபடும்போது வெளியாகும் நியூட்ரான்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஒரு 'மாடரேட்டர்' அவசியம் தேவைப்படும். நவீன அணு உலைகளில் இதற்காக கிராஃபைட் அல்லது தண்ணீரைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஓக்லோ சுரங்கத்தில் எந்த ஒரு இயந்திரமும் இல்லாமல் இது மிக நேர்த்தியாக நடந்துள்ளது. அங்கு பெருமளவில் இருந்த யுரேனியமும், நிலத்தடி நீருமே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
மினரல் வாட்டராக மாறும் நிலத்தடி நீரின் பின்னணி! –தெரிஞ்சுக்கலாமா?
Natural Nuclear Reactor

நிலத்தடி நீர் இயற்கையான ஒரு மாடரேட்டராகச் செயல்பட்டு நியூட்ரான்களின் வேகத்தைக் குறைத்து இந்தச் சங்கிலித் தொடர் வினையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. அதிக வெப்பத்தால் நீர் ஆவியானதும் இந்த வினை தானாகவே நின்றுவிடும். பின்னர் மீண்டும் நீர் சுரந்தவுடன் அணுப்பிளவு தொடங்கும். இப்படியே பல லட்சம் வருடங்கள் அந்த இயற்கை அணு உலை எந்த விபத்தும் இல்லாமல் பாதுகாப்பாக இயங்கியுள்ளது.

மனிதர்களாகிய நாம் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் கடினமான விஷயங்களை, இயற்கை தனது சாதாரண தட்பவெப்ப நிலைகளை வைத்தே மிக எளிதாகச் சாதித்து விடுகிறது. இதை நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com