
கடற்பாசி வளர்ப்பது மற்றும் அதை உணவாக உண்ணுவது பற்றி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இயற்கையாகவே கடற்பாசி நம் வாழ்வில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாமெல்லாம் அறிந்திருக்கிறோமா?
இன்றைய சுற்றுச்சூழலில் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் வெளியேறுகிறது. ஆனால் இந்த வாயுவை கடற்பாசி உள்வாங்குகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இது உண்மையிலேயே விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட தகவல்.
கடற்பாசி எப்படி கார்பன் டை ஆக்சைடை குறைக்கிறது?
கடலில் உள்ள பாசிகள் (மிகச் சிறிய நுண்ணுயிரினங்கள்) வலியுறுத்தப்பட்ட கார்பன் டை ஆக்சைடை உள்வாங்குகின்றன. மேலும் இது கடல் நீரின் மூலம் மீண்டும் காற்றில் கலந்துள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்து வாங்குகிறது. இது ஒரு சுழற்சி முறையில் நடைபெறும். இதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு காற்றில் அதிகப்படியாக சேருவதைக் குறைக்க முடிகிறது.
மீத்தேன் குறைக்கும் சிவப்பு கடற்பாசி
மாடுகள் உணவு உண்ணும்போது, அவற்றின் செரிமான செயல்முறையில் மீத்தேன் வாயு வெளியேறும். மீதேன் என்பது மிகவும் சக்திவாய்ந்த சூழல் மாசு வாயுவாகும். இது அதிகமாக வெளிவந்தால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து, வானிலை மாற்றம் ஏற்படும். அதன் விளைவாக பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரும் மற்றும் பல இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடும். ஆனால், சிவப்பு கடற்பாசியை மாடுகளின் உணவுடன் கலந்து கொடுத்தால், அந்த மீத்தேன் வெளியேறும் செயல்முறை குறைக்கப்படுகிறது. இது சமீபத்திய ஆராய்ச்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக கடல்பாசி
பல நிறுவனங்கள் கடற்பாசியை பயன்படுத்தி மக்கும் இயற்கை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கின்றன. இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. ஏனெனில், இது இயற்கையாகவே கிழிந்து அழியும் தன்மையைக் கொண்டது. இதன் பயன்பாடு முடிந்த பிறகு அதை குப்பையில் போட்டாலும், அது மண்ணோடு கலந்து அழிகிறது.
கார்பனை நீக்கும் சர்க்காசியம் பாசி
சர்க்காசியம் என்பது கடலின் மேற்பகுதியில் மிதக்கும் ஒரு வகை கடற்பாசி. இதில் "காற்றுப் பைகள்" உள்ளதால் தண்ணீரில் மிதக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலின், சர்க்காசியம் என்னும் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் பரவிக் காணப்படுவதால் , இந்த கடற்பாசிக்கு ''சர்க்காசியம்'' என்று பெயர். இது மீன், நண்டு, கடல் பறவைகள் , கடல் ஆமை போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும், இனப்பெருக்கத்திற்கும் மற்றும் அதன் வாழ்விடமாகவும் திகழ்கிறது.
சர்க்காசியம் கடற்பாசிக்கு ஒரு விசித்திர குணம் உண்டு. அது நீருக்குள் இருக்கும் போது கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. கடலில் கார்பன் குறையவும் உதவுகிறது. நிலத்துக்கு வந்ததும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. மேலும், சர்க்காசியம் அழுகி, சிதைவடையும்போதும் கார்பன் டை ஆக்சைடை வெளியே விடுகிறது. அதிக அளவில் மிதந்து கடற்கரை ஓரங்களை அடைகிறது. கடற்கரை அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதகமாக அமைகிறது.
ஆதலால், இந்த பாசியை சரியாக பராமரிக்க வேண்டும். தவறாக அகற்றினால் அது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து தரும். எனவே சர்க்காசியம் அழுகி, சிதைவடையும் முன்பாகவே அவற்றை சேகரித்து பாறைகளுடன் சேர்த்து கட்டி மீண்டும் கடலுக்குள் போட்டு விடுகிறார்கள் என்பது சுவாரசிய தகவல்.
இவ்வாறு பசுமை பாசி நம் பூமிக்கு ஒரு சூப்பர் ஹீரோவாக செயல்படுகிறது. தன்னைத் தந்து உலகத்தை காக்கும் இந்த சிறிய உயிரினம், இயற்கையின் அரிய பரிசாகவே பார்க்கப்பட வேண்டும்.