
ஆடை உற்பத்தியில் அகில உலக அளவில் முன்னிற்பது நமது திருப்பூர் என்பதை அனைவரும் அறிவோம். ஜவுளித் துணியாகட்டும்; 'ரெடி மேட்’ என்றழைக்கப்படும் ஆயத்த ஆடைகளாகட்டும்; விதம் விதமான உள்ளாடைகளாகட்டும் எல்லாவற்றுக்கும் தாயகம் நம் திருப்பூர்தான்!
அதனால்தான் டெல்டா மாவட்டங்களில் விவசாயக் கூலி வேலை செய்த பலரும் திருப்பூருக்கு வேலைக்கு வந்து விட்டனர்.விவசாய வேலை ஆண்டு முழுவதும் இருப்பதில்லை. எனவே வருடத்தின் பன்னிரண்டு மாதங்களும் வேலை தருகின்ற திருப்பூரைத் தஞ்சம் அடைந்து,டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டனர். நமது வட இந்தியச் சகோதரர்கள் பெரும் அளவில் பணியாற்றுவதும் ஆடை மாவட்டமான திருப்பூரில்தான்!
"என்ன மேன்? உலகிலேயே முதன்முறை என்று சொல்லி விட்டு வேறு ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறீர்?" என்று நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. எப்பொழுதும், எல்லாவற்றிலும் அடிப்படை ஸ்ட்ராங்காக இருந்தால்தான் வெற்றி எளிதாகும்!அப்படி உடைகள் விஷயத்தில் திருப்பூர் உறுதி பெற்று நிலைத்து நிற்பதால்தான் உலகிலேயே முதன் முறையாக இந்த அதிசயத்தை நிகழ்த்த முடிகிறது!
அதிசயம் இதுதாங்க! இனி ஆடை தயாரிக்க ‘டைலர்’ என்றழைக்கப்படும் தையற்காரர் வேண்டாம்! ‘கட்டர்’என்று பெயர் சொல்லிக்கொண்டு நமது அளவுகளுடன் துணியைப் பெரிய மேஜையில் போட்டு, பெரிய கத்தரிக் கோலை வைத்துக் கொண்டு, வண்ணச் சிலப்பங்களால் ஸ்கேலின் உதவியுடன் துணிகளில் கோடு போட்டு, அக்கத்தரிக்கோலால் ‘சரக்… சரக்’ என்று வெட்டித்தள்ளும் கட்டர்களும் வேண்டாம்! தீபாவளி நேரங்களில் இரவு, பகல் பாராது மெஷின்களை ஓட்டும் அவசியம் இனி இருக்காது!
உங்களுக்குப் பிடித்தமான துணியை செலக்ட் செய்து,உங்கள் அளவுகளை உட்புகுத்தி, என்ன டிசைனில் சர்ட் வேண்டும் என்பதைக் கம்ப்யூட்டரில் ‘பீட்’ செய்து விட்டால் போதும். தையல் இல்லாமல், ஜாயிண்ட் இல்லாமல், வேண்டிய பாக்கட்டுகளுடன், எந்த டிசைனில் நீங்கள் கேட்டீர்களோ அந்த டிசைனில் உங்கள் ஆடையைத் தயாரித்துத் தருகிறது இந்த மெஷின்.
இதை நிறுவியுள்ளவர்கள் கூறுவது யாதெனில், ஒரு பிட் துணி கூட வேஸ்ட் செய்யாமல் ஆடை தயாரிப்பதே இந்த எந்திரத்தின் முக்கியப் பணியாம்! உலகிலேயே முதன்முறையாக இங்குதான் இந்த எந்திரம் நிறுவப்பட்டு, தயாரிப்பு தொடங்கியுள்ளதாம்!இதற்கென தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘சாப்ட் வேர்’ இப்பணிகளைச் செவ்வனே செய்ய உதவுகிறதாம்!
உண்மையில் பெருமையாகவும், மிகுந்த ஆச்சரியமாகவும் உள்ளது. அதே சமயம் அதிசயமாகவும் தோன்றுகிறது! விஞ்ஞானம் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்தி வருவது கண்கூடாகத் தெரிகிறது.
இப்படி ஒவ்வொரு துறையையும் எந்திரங்களே ஆள ஆரம்பித்து விட்டால்,நமது சந்ததியினருக்கு எந்த வேலையுமே இருக்காது போல் தோன்றுகிறது! ஐ பேடைத் திறந்தாலே, நீ கடந்த வருடம் இதே நாளில் எங்கிருந்தாய் என்பதையும் அதற்கு முந்தைய வருடங்களிலும் எங்கே, என்ன செய்து கொண்டிருந்தாய் என்பதையும் ஒப்பிக்கையில், ஒரு விதப் பயம்கூடத் தோன்றுகிறது. நமது பிரைவசிக்கு இவையெல்லாம் வேட்டு வைத்து விடும் போல! இன்னும் ஏஐ டெவலப் ஆகி விட்டால் என்னென்ன நடக்குமோ தெரியவில்லை!
சரி!பயத்தை ஓரங்கட்டி விட்டு, புது ட்ரசைப் போடத் தயாராவோமே! மேலேயுள்ள பொம்மைப் பெண்ணின் மேலாடையும், உள்ளாடையும் அவ்வாறு தயார் செய்யப்பட்டதுதானாம்!