
நம் வீட்டிற்கு உள் அலங்காரம் செய்ய முற்படும்போது, குறைந்த அளவு பராமரிப்பிலேயே நன்கு வளரக்கூடிய, சில தாவரங்கள் நம் நினைவுக்கு வரத் தவறாது. வீட்டிற்கு உள்ளே தாவரங்களை வைத்து வளர்ப்பது கண்ணுக்குக் குளிர்ச்சி தருவதுடன், காற்றிலுள்ள மாசுக்களை நீக்கவும் உதவும். அந்த வகையில் லக்கி பாம்பூ, ஜேட், துளசி, சினேக் பிளான்ட் போன்றவை வீட்டிற்குள் நேர்மறை எனர்ஜியைத் தந்து, வீட்டில் உள்ளவர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவுவதாக கூறப்படுகிறது. அதற்கு மாறாக, வீட்டிற்குள் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணக் கூடிய 10 வகைத் தாவரங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
1. காக்டஸ்: காக்டஸ் தாவரத்தில் உள்ள கூர்மையான முட்கள் வீட்டிற்குள் எதிர்மறை எனர்ஜியை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது. அமைதியான சூழலை விரும்புபவர்கள் இதை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதைத் தவிர்ப்பது நலம்.
2. போன்சாய்: வாஸ்து சாஸ்திரப்படி போன்சாய் செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பது வீட்டில் உள்ளவர்களின் செழிப்பான வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவாது என கூறப்படுகிறது.
3. காய்ந்த செடி: காய்ந்து போன செடி, இறப்புடன் சம்பந்தமுள்ளதாகக் கருதப்படுகிறது. ஏதாவதொரு காரணமாக ஒரு செடி வளர்ச்சி அடையாமல் காய்ந்துபோய் விட்டால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நன்மை பயக்கும். இல்லையெனில், அந்த வீட்டில் உள்ளவர்களின் வளர்ச்சியும் நேர்மறை எனர்ஜியும் தடைபடக்கூடும் என வாஸ்து கூறுகிறது.
4. பருத்திச் செடி: பருத்திச் செடியை வீட்டிற்குள் வளர்ப்பதால் அந்த வீட்டில் எதிர்மறை எனர்ஜி உற்பத்தியாகவும் பேய்கள் நடமாடவும் வாய்ப்பு உண்டாகும் என நம்பப்படுகிறது.
5. அகாசியா: பாபுல் எனவும் அழைக்கப்படும் அகாசியாவை வீட்டிற்குள் வளர்ப்பதால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டாகி, தனிமையும் கவலைகளும் அதிகரிக்கும் என வாஸ்து கூறுகிறது. எனவே இந்த செடியை வீட்டிற்குள் வளர்ப்பதைத் தவிர்ப்பது நலம்.
6. மருதாணி: மருதாணி செடியை வீட்டிற்குள் வளர்ப்பதால் வீட்டில் எதிர்மறை எனர்ஜி உற்பத்தியாகும்; கெட்ட சம்பவம் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்; வீட்டிற்குள் ஓர் இணக்கமான சூழல் உருவாவதும் தடுக்கப்படும்.
7. புளியஞ் செடி: இந்த செடியை வீட்டிற்குள் வளர்த்தால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் கெடும்; எதிர்மறை எனர்ஜி உற்பத்தியாகும். எனவே, வீட்டில் ஆரோக்கியமும் நேர்மறை எனர்ஜியும் நிறைந்த சூழ்நிலை உருவாக இச்செடியை வீட்டிற்குள் வைக்காமல் இருப்பது நன்மை தரும்.
8. ஒலேன்டர்: இச்செடி விஷத் தன்மை கொண்டது. மேலும், அபாயகரமான விளைவுகளை உண்டுபண்ணவும் கூடும். வீட்டின் அமைதியான சூழலுக்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளதால் இதுவும் வீட்டில் இன்-டோர் பிளான்டாக வைத்து வளர்க்கத் தகுதியற்றதாகிறது.
9. முள் செடிகள்: ரோஜா செடி தவிர மற்ற முட்கள் நிறைந்த செடிகள் வீட்டில் உள்ளவர்களுக்கு டென்ஷன் தரவும், கருத்து வேறுபாடுகளை உண்டுபண்ணி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த உதவுவதாகவும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, இவற்றை வீட்டிற்குள் சேர்க்காமல் இருப்பது நலம்.
10. மில்க் வீட்: இந்த செடி எதிர்மறை சக்தியை உருவாக்கி, வீட்டில் உள்ளவர்களிடம் அதிர்ஷ்ட தேவதை அண்ட விடாமல் பார்த்துக் கொள்வதில் படு ஸ்மார்ட். வீட்டிற்குள் நேர்மறை எனர்ஜியுடன் கூடிய ஒரு தெய்வீகமான சூழ்நிலை உருவாக இந்த செடியையும் இன்-டோர் பிளாண்டாக வீட்டிற்குள் வளர்ப்பதைத் தவிர்ப்பது நலம்.