இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் அண்மையில் 109 புதிய பயிர் ரகங்களை கண்டுபிடித்துள்ளது. இவையனைத்தும் அனைத்துப் பருவங்களையும் தாங்கி வளரும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
விவசாயம் இன்று வரையிலும் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமே விவசாயிகள் தான். லாபம் கிடைக்காத சூழலிலும் கூட பலரும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். எந்தெந்த பருவத்தில் எந்தெந்தப் பயிர்கள் நன்றாக வளரும் என்பதை விவசாயிகள் அறிந்து கொண்டு, பருவ காலங்களுக்கு ஏற்ப பயிர்களை விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த விதமான காலநிலை நிலவினாலும், அதாவது அனைத்துப் பருவகாலங்களையும் எதிர்கொண்டு நல்ல மகசூலைத் தரும் 109 பயிர் இரகங்கள் தற்போது அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை குறித்த ஆராய்ச்சிகளையும், புதிய பயிர் இரகங்கள் குறித்த கண்டுபிடிப்புகளையும் இந்தக் கழகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பயிரும் ஒவ்வொரு காலநிலையில் நன்றாக வளரும் தன்மையைக் கொண்டவை. பயிர்களின் தன்மைக்கேற்ப விதைத்து, அறுவடை செய்தால் தான் மகசூல் கிடைக்கும். இந்நிலையில் இதனை மாற்றும் முயற்சியில் களமிறங்கிய இந்திய வேளாண் கழகம், தற்போது புதுமையான 109 வகையான பர்கர் விதைகளைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளது. இந்த இரகங்கள் அனைத்தும் எந்தக் காலநிலை நிலவினாலும், அனைத்தையும் எதிர்த்துப் போராடி அதிக மகசூலை அளிக்கும் தன்மை கொண்டவை.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி 109 புதிய பயர் இரகங்களை அறிமுகப்படுத்தினார். இதில் 34 சிறுதானியப் பயிர்களும், 27 தோட்டக்கலைப் பயிர்களும், 11 பயறு வகைகளும் மற்றும் 7 எண்ணெய் வித்துகளும் அடங்கும். மேலும் இவற்றில் புதிய பருப்பு வகைகள், கரும்பு, மூலிகைச் செடிகள் மற்றும் பருத்தியும் அடங்கும். இந்தப் பயிர்கள் அனைத்துமே மிகக் குறுகிய காலத்தில், குறைந்த செலவில் அதிக மகசூலை அளிக்கும் திறன் பெற்றவை.
புதிய பயிர் இரகங்களின் விதைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. விவசாயிகளின் பயிர் வளர்ச்சியை அதிகரிக்கவும், வருமானத்தைப் பெருக்கவும் இது உதவும். இந்த விதைகளை விவசாயிகள் சோதனை முயற்சியாக தங்களது நிலங்களில் சிறிய அளவில் பயிரிடலாம். அதில் திருப்தி அடைந்தால் மட்டும் தொடர்ந்து பயிரிடலாம் என இந்திய வேளாண் கழகம் தெரிவித்துள்ளது.
புதிய பயிர்களின் சிறப்பம்சங்கள்:
அறிமுகப்படுத்தப்பட்ட 109 பயிர்களில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பயிர் செய்ய துரம் என்ற புதுமையான கோதுமை ரகம் ஏற்றதாக இருக்கும். உப்பு நிலங்களிலும், கடலோரங்களிலும் எளிதாக வளரும் சிஆர் தன் 416 என்ற நெல் ரகம் டெல்லி விவசாயிகளுக்கு ஏற்றதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் RF-290 என்ற பெருஞ்சீரக இரகமும், மனுஶ்ரீ என்ற ஏலக்காய் இரகமும், அம்ரித் என்ற மாங்காய் இஞ்சி இரகமும் வறட்சியைத் தாங்கி நன்றாக வளரும். கல்ப சுவர்ணா மற்றும் கல்ப சதாப்தி ஆகிய 2 தென்னை ரகங்களும் மிகவும் முக்கியமானது. இதில் உயரம் குறைந்த கல்ப சுவர்ணா தேங்காய், கொப்பரை மற்றும் இளநீர் உற்பத்திக்கு ஏற்றது. உயரமான கல்ப சதாப்தி அளவில் பெரிய தேங்காய் உற்பத்திக்கு ஏற்றது.