

நீலகிரி தார் எனப்படும் வரையாடு, மனிதர்களின் குறுக்கீடு, புல்வெளி அழிப்பு, காய்கறித் தோட்டங்கள், மரவெட்டுகள் காரணமாக அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டது. ஆனால் கேரளாவின் இடுக்கி மாவட்ட வரையாட்டுமுடி மலை உச்சியில் மனித தலையீடு குறைந்து, பசுமை, நீர், காற்றோட்டம், பாதுகாப்பான இனப்பெருக்க சூழல் உறுதி செய்யப்பட்டதால், இவ்வினம் மீண்டும் பல மடங்கு அதிகரித்து, சூழல் சமநிலையின் வெற்றிக் கதையாக மாறியுள்ளது.
நீலகிரி தார் (Nilgiri Tahr) என்பது ஆட்டினத்தில் (Goat) ஒரு வகையாகும். இது கேரளா மற்றும் தமிழ் நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென் கோடிப் பகுதிகளில் வசித்து வருபவை. இதை 'வரையாடு' என்றும் அழைப்பதுண்டு. கடந்த பல ஆண்டுகளாக வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டு வந்த நிலையில், தற்போது கேரளாவின் இடுக்கி என்ற மாவட்டத்தில், வரையாட்டுமுடி என்ற மலை உச்சிப் பகுதியில் இவை எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
பொதுவாக, ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் தாங்கள் வாழும் இடங்களில் வாழ்வாதாரம் சீர்குலையும்போதும், மனிதர்களின் குறுக்கீட்டால் மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச் சூழலில் சமநிலைத் தன்மை இல்லாமல் போகும்போதும், அவை அழிவின் விளிம்பை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். அப்படியானதொரு வருந்தக்தக்க நிலைமைக்கு தள்ளப்பட்ட நீலகிரி தார் மீண்டு வந்த வெற்றிக் கதையை இப்பதிவில் பார்க்கலாம்.
ஓர் உயிரினம் முற்றிலுமாக அழிந்துவிடாமல் பாதுகாக்க அவற்றின் வாழ்வாதாரம் கொஞ்சமும் குறைவின்றி சிறப்பாக அமைந்து நல்ல முறையில் பராமரிக்கப்படுவது அவசியம். அம்மாதிரியான சூழலில் அவை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, தம்மை விட வலுவான சந்ததியரை உருவாக்க முடியும் என்கிறார் சுற்றுச் சூழல் ஆர்வலரும் புகைப்பட நிபுணருமான இந்திரஜித் கோர்படே (Indrajit Ghorpade). நீலகிரி தார், அதன் பெயருக்கு ஏற்ப, நீலகிரி மலையின் மிக உயரமான பகுதியில், உயிர் மண்டலம் எனப்படும் குறைவற்ற நிலப் பரப்பு, நீர் வளம், நிறைந்த காற்றோட்டம், மற்றும் புல் வெளிகள் நிறைந்த இயற்கை வனப்புடைய இடங்களில் வாழ்வதற்காகவே பிறவி எடுத்த விலங்கு என்கிறார் இந்திரஜித்.
மிகவும் சிறப்பான சுற்றுச் சூழல் சமநிலைத் தன்மையுடைய மலைப் பிரதேசமே வரையாடுகளின் முதல் தேர்வு. சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்வியலை மாற்றியமைத்துக் கொண்டு, செழித்து வாழும் மற்ற விலங்குகளைப் போல் இல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிகளில் சோலை போல, பசுமையான புல் தரைகள், நடு நடுவே பச்சைப் பசேலென்று நிற்கும் குள்ளமான மரங்கள், உண்ண உணவு, வசிப்பதற்கும் இனப் பெருக்கம் செய்வதற்கும் தோதான இடங்கள், எதிரிகளிடமிருந்து தப்பி ஓட சமமான நிலப்பரப்பு ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்த மலைப் பகுதியே வரையாடுகள் அதிகளவில் வாழ்ந்து வரும் இடங்களாகும்.
நீலகிரி தார், எண்ணிக்கையில் குறைந்ததற்கான காரணங்கள்: இவற்றின் வாழ்வாதார இடங்கள் மனிதர்களால் கூறுபோடப்பட்டன. புல் வெளிகள் நீக்கப்பட்டு காய்கறித் தோட்டங்கள் உருவாகின. ஓய்வெடுக்க ஆடுகள் பயன்படுத்திய பசுமையான குள்ள மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டன. ஆடுகளுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மிகவும் குறுகலாகிப் போனது.
சுதந்திரமாக சுற்றித் திரிந்த இவ்வினத்தின் மனநிலை பாதிக்கப்பட்டது. அதன் விளைவாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாயின. இனப் பெருக்க செயல்பாடுகளிலும் ஆர்வம் குறைந்தது. அதன் பின் இயற்கையாகவே அவற்றின் எண்ணிக்கையும் படிப்படியாக குறையத் தொடங்கியது.
வரையாட்டுமுடியில் மனிதர்களின் குறுக்கீடு தென்படவில்லை. வாழ்வாதாரம் குறைவின்றி நிறைந்திருந்தது. இனப்பெருக்கத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இருந்தன. சுற்றுப்புற சூழலில் சமநிலைத் தன்மை இருந்தது. இந்த இன விலங்குகளின் மீட்டெழுச்சிக்கு இவை யாவுமே அடிப்படைக் காரணங்கள் என்கிறார் கோர்படே.
வரையாடு மட்டுமின்றி, மற்ற அனைத்து வன விலங்குகளுக்குமே வாழ்வாதாரப் பாதுகாப்பு அவசியம்.
"வளர்ச்சிப் பணிகள், வாழ்வாதாரப் பாதுகாப்பு, வேட்டையாடும் விலங்குகள் மற்றும் அவற்றின் இரைகளுக்கு இடையேயான உறவு மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றிற்கு இடையே சம நிலை இருக்குமானால், இயற்கைப் பாதுகாப்பிற்கு தேவையான நிதியை சுற்றுலாத் துறை உருவாக்கித் தரும் வாய்ப்பு உண்டு" என்றும் இந்திரஜித் கோர்படே கூறுகிறார்.
இயற்கை பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார சீரமைப்பு எவ்வாறு அருகிவரும் வனவிலங்குகளை மீட்டெடுக்க உதவுகிறது என்பதைப் புரிந்து கொண்டு, நமது சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கும் விழிப்புணர்வைப் பெறலாம்.