ஜெர்மனியின் ஒரு நகரத்தில் புறாக்கள் மிகவும் தொல்லைக் கொடுப்பதாக சொல்லி, அத்தனை புறாக்களையும் கொல்லவுள்ளனர் என்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மத்திய ஜெர்மனியில் உள்ள லிம்பார்க் அண்டர் லானில் புறாக்கள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. அதாவது, புறாக்களின் கழிவுகள் உணவகங்களையும், சந்தைகளையும், அங்குள்ள குடியிருப்புகளையும் அசிங்கப்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போதுஅந்த ஊரில் சுமார் 700 புறாக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரில் புறாக்களின் எண்ணிக்கையை குறைக்க கடந்த நவம்பரில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கும் முடிவுக்கும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேபோல் அந்தப் பகுதியில் வாழ்ந்த சில பேரும் இந்த முடிவுகளை எதிர்த்தார்கள். இதனால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மாத வாக்கெடுப்புக்குப் பிறகு, லிம்பர்க் மேயர் மரியஸ் ஹான், வரும் இரண்டு ஆண்டுகளில் புறாக்களைக் கொல்லும் ஃபால்கனரைப் பயன்படுத்துவதன் மூலம் புறாக்களின் எண்ணிக்கையைக் குறைக்க குடிமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
புறாக்களைக் கொல்வதற்காக மக்கள் வாக்களித்தது விலங்கு உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அதை "மரண தண்டனை" என்று விவரித்தனர். ஆர்வலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக மிரட்டினர்.
காசெலில் உள்ள ஒரு நிர்வாக நீதிமன்றம், 2011 ஆம் ஆண்டில் ஒரு முடிவை எடுத்தது, புறாக்களைக் கொல்வது சுகாதார அபாயங்கள், கட்டிடங்களுக்கு சேதம் மற்றும் மக்கள்தொகை அளவு போன்ற நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
நிர்வாக அதிகாரிகளும் மேயரும் மிக நீண்ட காலமாக புறா நல ஆர்வலர்களிடமிருந்து மிரட்டல் கடிதங்கள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும் அவமானங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையில்தான், புறாக்களை முற்றிலுமாக அழிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டே வருடங்களில் முக்கால்வாசி புறாக்கள் அழிக்கப்பட்டுவிடும். பிறகு அந்த நகரத்தில் புறாக்களே இருக்காது என்று தரவுகள் கூறுகின்றன.
முதலில் கென்யாவின் ஒரு நகரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஜெர்மனியின் ஒரு நகரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மிருகங்களுக்கு மனிதன் தொந்தரவாக மாறும்போது, அவை நம்மை அழித்தால் குற்றம். இதுவே நாம் அவற்றை அழித்தால் சட்டம். போங்கயா!