
குங்குமப்பூ ஆசிய நாடுகளில் அதன் மருத்துவக் குணத்திற்காகவும் , அதன் வாசனைக்கும் பெயர் பெற்றது. பானங்கள், இனிப்புகள், மசாலா உணவுகளில் மனத்திற்கும் நிறத்திற்கும் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் தினசரி பாலில் குங்குமப்பூ கலந்து சாப்பிட்டால் குழந்தை நிறமாகவும் அழகாகவும் பிறக்கும் என்பது பல நாடுகளில் நம்பிக்கையாக உள்ளது. உணவுகளில் குங்குமப்பூ சேர்க்காத நாடுகள் கூட இந்த ஒரு காரணத்திற்காக குங்குமப் பூவை பயன்படுத்துகின்றனர்.
குங்குமப் பூவில் சில மருத்துவக் குணங்களும் உள்ளன. உலகளவில் குங்குமப்பூ உற்பத்தியில் ஈரானும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலமும் முன்னணியில் உள்ளது.
மிஷன் கேசர் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு முதல் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் குங்குமப்பூ பயிரிட அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. இதனால் வடகிழக்கு இந்திய மாநிலங்கள், நாட்டின் புதிய குங்குமப்பூ உற்பத்தி மையமாக மாறி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மென்சுகா மற்றும் சிக்கிமில் உள்ள யூக்சோம் ஆகிய இடங்களில் குங்குமப்பூ அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு நாகாலாந்து மற்றும் மணிப்பூருக்கும் விரிவுபடுத்த உள்ளது.
இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாம்போர் குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு குங்குமப்பூ ஏற்றுமதி ஆகிவருகிறது. இது இந்தியாவின் குங்குமப்பூ உற்பத்தியின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய முயற்சிகளுக்கு பின் இந்தியாவின் இரண்டாவது பெரிய குங்குமப்பூ உற்பத்தியாளராக வட கிழக்கு மாநிலங்கள் உருவாகும்.
இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் ஷில்லாங்கில் வடகிழக்கு தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ரீச் மையத்தின் (NECTAR) நிரந்தர வளாகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிறுவனம் 2014 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் நிறுவப்பட்டது.
குங்குமப் பூ பயிரிடுதல், அதன் வளர்ச்சிக்கு ஆதரவு கொடுத்தல், பயிர் வளர்ச்சியை தொழில் நுட்பம் மூலம் கண்காணித்தல், தேவையான நேரத்தில் ஆலோசனை வழங்குதல் என அனைத்துற்கும் நெக்டர் உதவுகிறது.
மேலும் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள தரிசு நிலத்தில் குங்குமப்பூவை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கின்றனர். இதற்காக தரிசு நிலங்களை பயிரிட தகுந்த வகையில் மேம்படுத்த அரசு உதவுகிறது.இந்த பயிரினால் அவர்கள் தரிசு நிலங்களை மேம்படுத்திக் கொள்வதோடு அதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
வடகிழக்கு மாநிலங்களில் குங்குமப்பூ சாகுபடியை ஊக்குவிப்பதும், ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் சாகுபடியை ஊக்குவிப்பதும் நெக்டரின் முக்கிய செயல்பாடாக உள்ளது. இவை சுவாமித்வா என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறது.