
பல வகையான வன விலங்குகள் தங்களுக்குத் தேவையான உணவைத் தேடவும், தங்குவதற்காகவும் காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வேறு சில வகை மிருகங்கள், அதிவேகமாக நீருக்குள் நீந்துவதிலும், இரை பிடிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளன. அவற்றில் திறமை மிக்க 6 விலங்குகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1.டைகர் (Tiger): தண்ணீரைக் கண்டாலே பயந்து ஓடும் சில வன விலங்குகள் போல் இல்லாமல் டைகர் ஏரி மற்றும் ஆறுகளைக் கண்டால் விருப்பதுடன் உள்ளே குதித்து பல மைல்கள் நீந்தி வரவும் தயங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் கோடையில் தன் உடலைக் குளிர்விக்கவும் இரை பிடிக்கவும் எனலாம். இதன் கட்டுமஸ்தான உடலும் செமி வெப்ட் (Semi webbed) பாதங்களும் நீந்துவதற்கு உறுதுணையாகின்றன. சுந்தரவனக் காடுகளிலுள்ள பெங்கால் டைகர் தினமும் நீரில் நீந்தி அருகில் உள்ள தீவுகளில் வேட்டையாடிவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
2.யானை (Elephants): யானைகள் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், உடலை சுத்தப்படுத்தவும் நீருக்குள் செல்கின்றன. இவைகளால் மணிக்கணக்கில் நீண்ட தூரம் சோர்வின்றி நீந்த முடியும். இவற்றின் வலிமையான பாதங்களும், இயற்கையாக தும்பிக்கைக்குள் அமைந்திருக்கும் ஸ்னோர்கெல்கள் (Snorkels) யானை நீந்துவதற்கு உதவுகின்றன. உடல் முழு பாகமும் நீரில் மூழ்கினாலும் தும்பிக்கையை நீருக்கு வெளியே நீட்டி மூச்சு விட்டபடி நீந்த முடியும்.
3.ஸ்லாத்ஸ் (Sloths): இவை ஆச்சர்யப்படும் வகையில், விரலசைவு மற்றும் உடற் கட்டுப்பாடுடன், வேகமாகவும் நேர்த்தியாகவும் நீந்தக்கூடியவை. தரையில் நகரும் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்துடன் நீரில் நீந்தும். இவை மரத்திலிருந்து நேரடியாக ஆற்று நீரில் குதித்து நீந்துகின்றன. தரை வழியாக ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு செல்ல அதிக நேரமாவதுடன், அதில் உயிருக்கு ஆபத்து நேருமென்ற அபாயம் உள்ளதாலும் நீச்சலுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
4.காட்டுப் பன்றி (Wild Boar): மிக வலிமையான மிருகம்.
நதிகளைக் கடக்கவும், ஒரு தீவிலிருந்து இன்னொன்றுக்கு செல்லவும் நீச்சலைப் பயன்படுத்துகிறது. அதிக எடை கொண்ட இப்பன்றி நீரில் மிதந்தபடி நீண்ட தூரம் நீந்துவதற்கு அதன் வலிமை மிக்க கால்கள் உதவுகின்றன. நீந்துவதில் இதற்குள்ள ஆர்வம், வேட்டையாடு பவர்களிடமிருந்து தப்பிக்கவும், வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரவும், உணவு தேடவும், பாதுகாப்பிற்கும் உதவுகிறது.
5.கங்காரூ (Kangaroo): ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுபவை. பொதுவாக கங்காரூ நீரில் நீந்துவதைக்காண முடியாதென்றாலும், வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும், வெள்ளம் ஏற்படும் நேரங்களில் தப்பி ஓடவும், நீச்சலுக்கு முன்னுரிமை தருகிறது. முன்னங்கால்களையும் வாலையும் உந்து சக்தியாக்கி சமநிலையில் நீந்துவதில் திறமைசாலி. எதிரியுடன் மோதல் ஏற்படும்போது, அதை நீருக்குள் இழுத்து முழுபலத்தையும் ஒருங்கிணைத்து, அமுக்கிவிட்டு, தான் தப்பித்து விடுவதில் கில்லாடி!
6.கரடி (Bear): கரடி நீச்சலில் மிக திறமையானது. ஓய்வின்றி 60 மைல் கூட நீந்தக்கூடியது. இது ஒரு சர்வ உண்ணி என்பதால் அடிக்கடி மீன் பிடிக்க நீருக்குள் செல்வதுண்டு. இதன் வலிமை மிக்க கால்களே நீந்து வதற்கு உதவுகின்றன. எதிரிகளிடமிருந்து உயிர் பிழைக்கவும், உணவு தேடியும் நீர் நிலைகளைக்கடந்து செல்ல வேண்டிய அவசியம் கரடிகளுக்கு ஏற்படுகிறது.