
.‘இன்றைய சூழலில் புயல், மழையை முன்கூட்டியே மிகச் சரியாகக் கணிப்பதற்கு முழுமையான அறிவியல் இல்லை; செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம். புயலுக்குள் விமானத்தைச் செலுத்தி அதில் பதிவாகும் விவரங்களை பெற்றுகூட கணிப்பு செய்யப்படுகிறது; அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது. தொழில்நுட்பம் மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க உதவாது; தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும்.‘
-இது சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு பாலச்சந்திரனின் கருத்து.
இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மிக முன்னேறிய நாடுகளிலும் இதே (வா)நிலைதான்! ஜப்பான் தொலைக்காட்சியில், ‘நேற்று மழை வரும் என்ற எங்கள் தகவலைக் கேட்டு பலபேர் குடைகளுடன் வீட்டை விட்டு வெளியே போயிருப்பீர்கள், இல்லையா, வீ ஆர் ஸாரி, மழை பெய்யவில்லை!‘ என்று அறிவிப்பு செய்வார்களாம்!
ஆனால் நம் தென்னாட்டு பஞ்சாங்க சாஸ்திர (அறிவியல்) முறை, ‘கர்ப்போட்டம்‘ எனப்படுகிறது. இது அடுத்த ஆண்டு பருவமழையின் நிலவரத்தை விவரிக்கும் சாஸ்திரிய சயன்ஸ்.
பொதுவாகவே நம் முன்னோர்கள் மேக ஓட்டத்தை மிகச் சரியாகக் கணித்தவர்கள், தோற்றம், விலகல், திரட்சி என்று மேகம் காட்டும் பலவகை வடிவங்களுக்கு அவர்கள் அர்த்தம் கண்டார்கள். பூகம்பத்தைக்கூட மேகங்கள் காட்டும் குறியீடுகளை வைத்தே அனுமானிக்க முடிந்திருக்கிறது.
சரி, கர்ப்போட்டம் என்பது என்ன?
ஒரு பெண் மணமாகி 10 மாதத்தில் குழந்தை பெறுவாள் என்றாலும் தொடக்க காலங்களிலே கரு நிலைத்துவிட்டதா என்பதை அறிவதுபோல, மார்கழி மாத பிற்பகுதியில் மேற்கொள்ளப்படும் கணிப்பு மூலம் அடுத்த 10ம் மாதம், அதாவது அடுத்த ஆண்டு ஐப்பசி - கார்த்திகையில் மழை நன்கு பெய்யுமா இல்லையா என்பதை உறுதி செய்யலாம்.
சூரியன், தனுர் ராசியில் நுழையும் மாதம் மார்கழி. இதன் முற்பாதி மூல நட்சத்திரமாகவும், பிற்பாதி பூராட நட்சத்திரமாகவும் அமைகின்றன. பூராடத்தின் அதிதேவதை வருண பகவான். பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரமும் 13 முதல் 20 பாகைகள் கொண்டது. ஒவ்வொரு நாளும் சூரியன் ஒவ்வொரு பாகையில் சஞ்சரிப்பார். அப்படி பூராட நட்சத்திரத்தில் 14 நாட்கள் சஞ்சரித்துவிட்டு, தை மாதம் மகர ராசிக்குள் நுழைவார்.
இவ்வாறு பூராட நட்சத்திரத்தில் சூரியன் நுழையும் காலமே கர்ப்போட்ட காலம். இந்த 14 நாட்கள் வானில் காணப்படும் அறிகுறிகளைக் கொண்டு அந்த ஆண்டு ஐப்பசி - கார்த்திகையில் மழை பெய்யுமா, இல்லையா என்று கணிக்கிறார்கள்.
மேகம், மின்னல், இடி, காற்று, தூறல் என இயற்கையின் ஐந்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். இக்காலங்களில் மேகம் திரண்டு, சூரியனை மறைக்க வேண்டும். மேக வடிவம் முதலை, ஆமை, மீன், அன்னம், வாத்து ஆகிய நீர்வாழ் பிராணிகளின் ஏதோ ஒரு வடிவில் இருந்தால், அதுவும் சூரியனை அடிக்கடி மறைத்தால், ஐப்பசி அடைமழைக்கு கியாரண்டி. அதேபோல காற்று மிக மெல்லியதாக வீச, மெல்லிய தூறலும், கூடவே மின்னலும் இடியும் இருக்குமானால் வெகு சிறப்பு. அதோடு சூரியன் காலையும் மாலையும் சிகப்பாகக் காட்சியளிக்க, அதை மேகங்கள் சூழ்ந்திருக்குமானால், எப்போதாவது இடி இடித்தால், கிழக்கே மின்னினால், இவையெல்லாம் எதிர்கால மழைக்கான நல்ல அறிகுறி.
ஆனால், இந்த 14 நாட்களில் பெரும் மழை, சூறாவளி அல்லது வெள்ளம் என்று ஏற்பட்டால், கரு கலைந்துவிட்டது, அதாவது அந்த வருடம் மழை பெய்யாது என்று பொருள்.
‘‘தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்
தூயமந் தாரம் தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக
காயும்வேற் கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே‘‘
-என்பது கர்ப்போட்டம் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்.
மார்கழியின் கடைசி 14 நாட்கள் அவ்வளவு முக்கியமானவை. இந்த நாட்களின் கர்ப்போட்டத்தை வைத்து ஐப்பசி-கார்த்திகை மழைப் பொழிவை பஞ்சாங்க விஞ்ஞானம் கணிக்கிறது என்பது வியக்க வைக்கும் தகவல்தானே!