ஹயாம் நோயால் பாதிக்கப்படும் ஒரு இன விலங்குக்கு மருந்தாக பாம்பைத் தருகிறார்களாம். அது எந்த விலங்கு? என்ன நோய்க்கு அந்த மருந்து போன்றவற்றைப் பார்ப்போம்.
பாம்பு என்றாலே பல அடி தூரம் தெரித்து ஓடுவோம். ஒவ்வொரு பாம்பு இனத்திற்கும் ஏற்றார் போல் விஷத்தின் தீவிரம் மாறும். பாம்பு ஊர்ந்து வரும் விதத்தைப் பார்த்தாலே சிலர் அலறி அடித்து ஓடுவார்கள். பாம்புக் கடித்து உலகில் எத்தனையோ பேர் இறக்கத்தான் செய்கிறார்கள். மனிதர்கள் மட்டுமல்ல சிங்கம், புலி, யானை போன்ற கொடூரமான விலங்குகளும் கூட பாம்புக் கடித்து இறக்கின்றன.
அப்படிப்பட்ட விஷப் பாம்பையே உண்ணும் ஒரு உயிரினம் உள்ளது. அதுவும் உயிரோடு என்றால் நம்ப முடிகிறதா?
அந்த விஷம் கொண்ட பாம்பு அந்த மிருகத்தின் மருந்தாகும். ஒருவேளை அந்த விலங்குக்கு அதனை சாப்பிட பிடிக்கவில்லை என்றாலும், அதற்கு கட்டாயப்படுத்தி கொடுக்கிறார்கள் என்பதுதான் மிகவும் ஆச்சர்யமான ஒன்று.
அந்த பாவப்பட்ட விலங்கு வேறு எதுவும் இல்லை, ஒட்டகம்தான். பாலைவனத்தில் அதிகம் காணப்படும் இந்த ஒட்டகம்தான் பாம்புகளை மருந்தாக சாப்பிடுகிறது. இது ஒட்டகத்தின் உணவு முறை அல்ல. ஒட்டகத்திற்கு நோய் தாக்கும் போது பாம்புகள் உணவாக அளிக்கப்படுகின்றன. ஒட்டகங்களை தாக்கும் இந்த நோய் hayam என்று அழைக்கப்படுகிறது.
இந்த நோய் பாதிப்பு ஏற்படும் போது, தண்ணீர் அல்லது பிற உணவு எடுத்துக் கொள்வதை ஒட்டகங்கள் நிறுத்தி விடுகின்றன. அந்த கடுமையான வெயிலில் நீர் அருந்துவதையும் உணவையும் தவிர்த்துவிடுவதால், ஒட்டகங்கள் விறைக்கத் தொடங்கிவிடும். இந்த தவிப்பிலிருந்து ஒட்டகத்தை காப்பாற்ற விஷப்பாம்பு கொடுத்தால் சரியாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
பாதிக்கப்பட்ட ஒட்டகத்தின் வாயைத் திறந்து பாம்பை கட்டாயப்படுத்தி உணவாக அளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. பாம்பு உள்ளே செல்லும் வகையில் ஒட்டகத்தின் வாயில் தண்ணீரும் ஊற்றப்படுகிறது. பாம்பை உண்பதால் அதன் விஷம் ஒட்டகத்தின் உடல் முழுவதும் பரவும் என நம்பப்படுகிறது.
அந்த விஷத்தின் தாக்கம் உடலிலிருந்து நீங்கிவிட்டால், ஒட்டகம் அந்த நோய் பாதிப்பில் இருந்து சரியாகிவிடுமாம். இது அதன் உடலில் ஆன்டிபாடிஸை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது. ஆகையால் இது நோயை எதிர்த்துப் போராட உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.