
பருவ மழையை நம்பித்தான் நம் தமிழக விவசாயிகள் பலரும் பயிர்த் தொழில் செய்து வருகின்றனர். அதேநேரம், தற்போது பருவ மழை காலம் என்பதால் ஒருசில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விளைநிலங்களில் கூடுதலான மழை நீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
அது மட்டுமின்றி, மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களும் அதிக அளவு மழை நீரினால் அடித்துச் செல்லப்படுகின்றன. இந்த நிலையில், பருவ மழை காலங்களில் விவசாயிகள் முன்னெச்சரிக்கையோடு கவனமாக செயல்பட வேண்டும் என்று வேளாண் விரிவாக்க மையமும் அடிக்கடி தெரிவித்து வருகிறது. விவசாயிகள் விளைநிலங்களில் தேங்கும் அதிக அளவு மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ணை குட்டைகளில் நீரை சேகரித்து அவற்றை மீண்டும் விளை நிலங்களில் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதிக அளவு மழை நீரினால் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் வானிலை ஆராய்ச்சி மையத்தின் தகவல்களைப் பெற்று மழை பெய்ய வாய்ப்பு உள்ள பகுதிகளில் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை கூடுதலாக 25 சதவீதம் மண்ணில் சேர்க்க வேண்டும்.
அதிகப்படியான யூரியா மற்றும் பொட்டாசியம் உரங்களை நிலத்தில் பயன்படுத்துவதன் மூலம் அதிக அளவு மழை நீரால் விளை நிலங்களின் ஊட்டச்சத்து குறையாமல் பாதுகாக்கப்படும். பயிர் நுண்ணூட்ட சத்து குறைபாடு அறிகுறி தென்பட்டவுடன் யூரியா மற்றும் நுண்ணூட்ட உரங்களை இலைகளில் படும்படி தெளிக்க வேண்டும்.
மழைக் காலங்களில் அதிக பூச்சி மற்றும் நோய் தாக்கம் காணப்படும் என்பதால் விவசாயிகள் மிகுந்த விழிப்போடு செயல்பட வேண்டும். அறுவடை நிலங்களில் நீர் தேங்காத வண்ணம் வரப்புகளை வெட்டி பாதுகாக்க வேண்டும். நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, ஜிப்சம் 18 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
இளம் பயிர் மற்றும் தூர்கட்டும் பயிர்களுக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ துத்தநாத சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 மில்லி கிராம் நீரில் கலந்து இரவு நேரத்தில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் அதிகளவு நீரினால் ஊட்டச்சத்து குறையாமல் மண் வளம் பாதுகாக்கப்படும். இதனால் விளைச்சலும் அதிகரிக்கும்.