
எரிமலை என்பது இயற்கையின் வெடி குண்டு என்று எளிமையாகக் கூறலாம். இந்தியாவில் இருப்பவர்களுக்கு எரிமலை பற்றி அதிக அனுபவங்கள் இருக்காது. காரணம், இந்திய தீபகற்பம் முழுக்க எந்த எரிமலையும் செயல்பாட்டில் இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் தீவில் செயல்பாடு இல்லாத ஒரு எரிமலை உள்ளது. ஆயினும், வரலாற்றில் அந்த எரிமலையின் செயல்பாடு பற்றி எந்த ஒரு குறிப்பும் கிடையாது.
எரிமலை என்றால் என்ன?
சில மலைகளின் நடுவில் பெரிய கிணறு போன்ற ஆழமான பிரம்மாண்டமான துளை இருக்கும். அந்த நீண்ட பெரிய துளையின் அடியில் மூடிய தட்டுகளுக்கு அடியில் சூடாக உருகிய நிலை பாறைக் குழம்புகள் இருக்கும். உள்ளே உருவாகும் வாயுக்கள், பூமி தகடுகள் நகரும்போது அழுத்தப்பட்டு பெரிய அளவில் வெடிக்கத் தொடங்குகிறது. இந்த வெடிப்பில் எரியும் பாறைக் குழம்புகள் மலையின் துளைகளில் இருந்து வெளியேறி நெருப்பு ஆறாக அருகில் உள்ள பகுதிகளில் வழிந்து செல்கிறது. இந்த வெடிப்பின்போது புகை மண்டலமும் சாம்பலும் பல கி.மீ. தூரம் வரை பரவும்.
எரிமலை வெடிப்புகள் அருகில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. கடலுக்கு அடியிலும் எரிமலைகள் உள்ளன. இவையும் வெடிக்கும்போது சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும். சில சமயங்களில் கடலுக்குள் அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பில் பாறைக் குழம்புகள் வெளியேறி இறுகி, கடலுக்கு நடுவில் தீவுகளை உருவாக்கியும் உள்ளன. பல நாடுகளில் எரிமலை வெடிப்பு என்பது சாதாரணமான விஷயமாக உள்ளது. செயல்பாட்டில் உள்ள அதிக எரிமலைகள் கொண்ட 5 நாடுகளின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.
1. இந்தோனேசியா - 130 எரிமலைகள்: தீவுக் கூட்ட நாடான இந்தோனேசியாவில் மட்டும் 130 எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. அங்கு யூரேசிய, பசிபிக் மற்றும் இந்தோ- ஆஸ்திரேலிய தகடுகள் இணைகின்றன. இதனால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு எரிமலைகள் வெடிப்பதும் பூகம்பம் ஏற்படுவதும் இயல்பான விஷயமாக உள்ளது. மவுண்ட் மெராபி, மவுண்ட் சினாபங் மற்றும் மவுண்ட் க்ரகடோவா போன்ற எரிமலைகள் இந்தோனேசியாவில் மிகவும் பிரபலமான எரிமலைகளாக உள்ளன.
2. ஜப்பான் - 111 எரிமலைகள்: ஜப்பானில் மட்டும் உலகின் செயலில் உள்ள எரிமலைகளில் சுமார் 10 சதவிகிதம் உள்ளது. இது பசிபிக் நெருப்பு வளையத்தில், 111 செயலில் உள்ள எரிமலைகளைக் கொண்டுள்ளது. ஜப்பான், சுனாமி மற்றும் பூகம்பம் ஆகியவற்றிற்கு பெயர்போன நாடு. பல நகரும் தட்டுகளின் மீது இந்த நாடு அமைந்துள்ளதால் தொடர்ச்சியாக சுனாமி மற்றும் புவியியல் பேரிடர்களால் பாதிக்கப்படும் நாடாக உள்ளது. மவுண்ட் ஃபுஜி, மவுண்ட் சகுராஜிமா மற்றும் மவுண்ட் அசோ ஆகியவை அதன் மூன்று குறிப்பிடத்தக்க எரிமலைகள். தனது அழகிய தோற்றத்தால் மவுண்ட் ஃபுஜி எரிமலை அந்த நாட்டின் தேசிய அடையாளமாக உள்ளது. இது கடைசியாக 1707ல் வெடித்த ஒரு செயலற்ற எரிமலை ஆகும். மவுண்ட் அசோ உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை ஆகும்.
3. அமெரிக்கா - 169 எரிமலைகள்: எண்ணிக்கையின்படி அமெரிக்காவில் 169 செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் இருந்தாலும், அவற்றினால் அமெரிக்காவில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. அதனடிப்படையில் பட்டியலில் முதலிடம் அமெரிக்காவிற்கு தரப்படவில்லை. இதில் 130 எரிமலைகள் அமெரிக்காவின் முக்கிய நிலத்தில் இல்லாமல் அலாஸ்கா மற்றும் ஹாவாயில் உள்ளன. எரிமலையின் பாதிப்புகள் அமெரிக்காவில் இருந்து தள்ளி இருக்கும் இந்த பிரதேசங்களைத்தான் பாதிக்கின்றன. மௌனா லோவா, மவுண்ட் செயின்ட் ஹெலன்ஸ், மவுண்ட் கிலாவியா ஆகியவை பிரபலமான எரிமலைகளாக உள்ளன.
4. ரஷ்யா - 120 எரிமலைகள்: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் பெரும்பாலான எரிமலைகள் உள்ளன. இது பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. கிளைச்செவ்ஸ்கயா சோப்கா, ஷிவெலுச் மற்றும் டோல்பாச்சிக் ஆகியவை கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகவும் பிரபலமான எரிமலைகளாகும். பல எரிமலைகளைக் கொண்ட இப்பகுதி இயற்கை அழகு காரணமாக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
5. சிலி - 90 எரிமலைகள்: சிலி நாட்டின் நீண்ட பரப்பைக் கொண்டுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில்தான் பெரும்பாலான எரிமலைகள் அமைந்துள்ளன. மொத்தமாக சிலி நாட்டில் 90 செயல் எரிமலைகள் உள்ளன. தென் அமெரிக்கத் தட்டுக்கு அடியில் உள்ள நாஸ்கா தட்டு அழுத்தத்தை உணரும்போது சிலியில் எரிமலை வெடிக்கிறது. இங்குள்ள புகழ் பெற்ற மவுண்ட் கல்புகோ, மவுண்ட் லைமா மற்றும் மவுண்ட் வில்லாரிகா எரிமலைகள் அனைத்தும் சமீபத்தில் வெடித்து தங்கள் இருப்பைக் காட்டியுள்ளன.