
இயற்கையின் படைப்பில் அனைத்து உயிரினங்களுமே பல அற்புதங்களையும், அதிசயங்களையும் கொண்டுள்ளன. குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களை அதிசயத்தின் பிறப்பிடம் என்று கூடச் சொல்லலாம். பல அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்ற கடலில், நாம் இன்று பார்க்கப் போகும் ஓர் அற்புதம் தான் ஆமை.
ஆமையில் அப்படி என்ன அற்புதம் இருக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். 20 வருடங்கள் கழித்து பிறந்த இடத்திற்கே வந்து முட்டையிடும் பெண் ஆமைகள் அதிசயம் அல்லவா!
உலகில் உள்ள 7 கடல் ஆமைகளில், அதிக எண்ணிக்கையில் இருப்பவை ஆலிவ் ரிட்லி சிற்றாமைகள். பசுபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகளவில் காணப்படும் இந்த ஆமைகள், ஆலிவ் பச்சை நிறத்தில் இதய வடிவில் காணப்படும். இதில் பெண் ஆமைகளை மட்டும் ரிட்லி என்று அழைப்பார்கள்.
சென்னைக் கடற்கரையில் பல நூற்றாண்டுகளாக பங்குனி மாதத்தில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிக அளவிலான முட்டைகளை இடும். இதனால் தான் இவற்றிற்கு பங்குனி ஆமைகள் என்ற பெயர் வந்தது.
தனது 4 கால்கள் மற்றும் தலையை வலிமை மிகுந்த ஓட்டிற்குள் அடக்கிக் கொள்ளும் திறன் கொண்டவை. ஆண்டுக்கு 2 முறை முட்டையிடும் பெண் ஆமைகள், கரையோரத்தில் ஒவ்வொரு முறையும் 50 முதல் 190 முட்டைகள் வரை இடுமாம். பிறகு மீண்டும் கடலுக்குள் சென்று விடும். அடுத்த 60 நாட்களுக்குள் இந்த முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொரித்து விடும். குஞ்சு பொரித்த பிறகு வெளிவரும் ஆமைக் குஞ்சுகள் நிலவொளியின் வெளிச்சத்தில், கடலை நோக்கி தவழ்ந்து செல்லும் அழகே அழகு தான்.
பெண் ஆமைகள் முட்டையை இட்டு, மணலில் புதைத்து விட்டுச் சென்று விடுமாம். இந்த முட்டையை ஆண் ஆமை தான் அடைகாத்து பாதுகாக்கும் என சங்க நூல்கள் கூறுகின்றன.
ஒரு பெண் ஆமை இடும் 1,000 முட்டைகளில், ஒன்று மட்டும் தான் வளர்ந்த ஆமைப் பருவத்தை அடையும் என்று கூறப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் சுமார் 10 இலட்சம் ஆமைகள் இருந்துள்ளன. ஆனால், இன்றைய நிலையில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டன. மேலும் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் ஆமைகளும் இருப்பது, வருந்தத்தக்க விஷயமாகும்.
வெப்பம் குறைந்த காலநிலையில் ஆண் ஆமைகளும், வெப்பமான காலநிலையில் பெண் ஆமைகளும் உருவாகின்றன. புவி வெப்பமயமாதலின் காரணமாக காலநிலை மாறி வருவதால், ஆமைகளின் பாலினச் சமநிலை குறைந்து விட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஒரிசாவில் உள்ள கஹிர்மாதா கடற்கரை, ருசிகுல்யா நதி முகத்துவாரம் மற்றும் கோவாவில் உள்ள கல்கிபாகா ஆற்று முகத்துவாரத்தில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகளவில் முட்டையிடுகின்றன.
ஆமைகளை தெய்வமாக வழிபடும் மீனவர்கள், இந்த அதிசய கடல்வாழ் உயிரினத்தை ‘குட்டியம்மா’ என்ற பெயரில் அழைக்கின்றனர். மீனவர்கள் வலையில் ஆமைகள் சிக்கினால், வலையை அறுத்து அதன் உயிரைக் காப்பாற்றுவார்கள். இதனால் அவர்களுக்கு அன்றைய வருமானமே இல்லை என்றாலும் ஆமைகளை காப்பாற்றுவதற்குத் தான் முன்னுரிமை அளிப்பார்கள்.