ஒரு பூவில் இருந்து ஒரு லட்சம் வாழைக்கன்று: திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!

ஒரு பூவில் இருந்து ஒரு லட்சம் வாழைக்கன்று: திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனம் சாதனை!

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி கழகத்தின் புதிய ஆராய்ச்சியின் மூலம் ஒரு பூவிலிருந்து ஒரு லட்சம் வாழைக்கன்றுகளை உற்பத்தி செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வாழை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் வாழை உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த நிலையில், வாழை விவசாயத்தின் நலன்களை பெருக்குவதற்காகவும், அது சம்பந்தமான ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்காகவும் திருச்சி மாவட்டத்தில் 1993ம் ஆண்டு தேசிய வாழை ஆராய்ச்சி கழகம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இங்கு வாழை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி கழகத்தின் கண்டுபிடிப்புகளால் இந்தியாவில் வாழை உற்பத்தி மேலும் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. இந்த நிலையில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி கழகத்தில் தற்போது ஒரு ஆண் வாழைப்பூவில் இருந்து திசுக்களை பிரித்தெடுத்து ஒரு லட்சம் வாழைக்கன்றுகளை உற்பத்தி செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மிகக் குறைந்த காலத்தில் அதிகமான விளைச்சலை, உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும், இது வாழை உற்பத்தியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த ஆராய்ச்சிக்கான காப்புரிமையை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி கழகத்துக்கு வழங்கி உள்ளது. இந்தக் காப்புரிமையின் மூலம் இந்திய வாழைகளின் தன்மை பாதுகாப்பு, உற்பத்தி பெருக்கம் அதிகரிப்பதோடு, நாட்டின் வாழை விவசாய வர்த்தகமும் பெருகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் குறுகிய காலத்தில் வாழை விளைச்சலை அதிகரிக்க செய்ய முடியும். இதனால் விவசாயிகளுக்கு நடவு முதல் அறுவடை வரையிலான காலம் குறையும், இதனால் கூடுதலான விளைச்சலை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வழி ஏற்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com