
உலகின் சில பகுதிகள் மனிதர்கள் வசிக்க முடியாத இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பிரேசில் நாட்டின் அட்லாண்டிக் பெருங்கடலில் சாவோ பாலோவுக்கு வடக்கே கடற்கரையிலிருந்து சுமார் 93 மைல்கள் தொலைவில் உள்ளது ‘இல்ஹா டா குயிமாடா கிராண்டே’ என்னும் பாம்பு தீவு என அழைக்கப்படும் ஒரு தீவு. இந்த தீவு உலகின் மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகவும், ஆபத்தான விஷ பாம்புகளுக்கும் பெயர் பெற்றது. இந்த தீவில் கோல்டன் லான்ஸ்ஹெட் (போத்ராப்ஸ் இன்சுலாரிஸ்) என்ற விஷ பாம்புகள் அதிகம் காணப்படுவதால், இது "பாம்பு தீவு" என்றும் "மரணத் தீவு" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் சுமார் 4,000 பாம்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித தலையீடு இல்லாததால் பாம்புகள் தீவில் சிறப்பாக இனப்பெருக்கம் செய்ய முடிந்தது. சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் கூர்மையாக உயர்ந்தது.
இதன் விளைவாக, தீவு தனிமைப்படுத்தப்பட்டது, பாம்புகள் விரைவாகவும் அமைதியாகவும் இனப்பெருக்கம் செய்ய முடிந்தது. இதனால் தீவை பொதுமக்கள் வருகைக்கு ஆபத்தானதாக மாற்றியது.
இந்த தீவு சிறியது. இதன் மொத்த பரப்பளவு 106 (43 ஹெக்டேர் ) ஏக்கர் மட்டுமே. மேலும் மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த மண்ணில் எங்கு கால் வைத்தாலும் பாம்புகள் காணப்படுகின்றன. இந்த தீவில் தங்க நிற ஈட்டி முனை தலை குழி விரியன் பாம்புகளை தவிர வேறு உயிரினங்கள் அரிது. தங்க ஈட்டித் தலை கொண்ட ஜராராகா-இல்ஹோவா (போத்ரோப்ஸ் இன்சுலாரிஸ்), தீவில் மிகவும் பொதுவான பாம்பு. ஒரு சதுர மீட்டருக்கு 1 பாம்பு என்ற அளவில் எங்கு பார்த்தாலும் பாம்புகள் தான். இந்தத் தீவில் விஷமற்ற பாம்பு இனமான டிப்சாஸ் ஆல்பிஃப்ரான்களின் சிறிய எண்ணிக்கையும் உள்ளது.
உலகில் வேறு பகுதிகளில் வாழும் கட்டுவிரியன் பாம்புகளின் விஷத்தை விட 5 மடங்கு வீரியம் கொண்ட கொடூரமான விஷம் கொண்ட இந்த பாம்புகள் கடித்தால் கடும் வலி, வீக்கம், குமட்டல், குடல் ரத்தப்போக்கு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டு சில மணிநேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும்.
இதனால் பொதுமக்கள் இந்த பாம்பு தீவுக்கு செல்ல 1920-ம் ஆண்டில் இருந்தே பிரேசில் நாடு தடை விதித்துள்ளது. இந்த பாம்புகளை வேட்டையாட சரியான எதிர் வேட்டையாடி உயிரினங்கள் இந்த தீவில் இல்லாததால் தங்க ஈட்டி முனை தலை பாம்புகள் ஆயிரக்கணக்கில் பெருகி விட்டன. இங்கு 1909-ம் ஆண்டு ஒரு கலங்கரை விளக்கம் ராணுவத்தால் கட்டப்பட்டது. இதை பராமரிக்க ஒரு சிலர் பாம்புத்தீவில் வசித்து வந்ததாகவும், இவர்கள் பாம்பு கடியால் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கலங்கரை விளக்கம் தானியங்கி மயமாக்கப்பட்டு விட்டது.
அழகான காடு நிறைந்த இந்த தீவில் வாழும் தங்க ஈட்டி முனை தலை பாம்புகளை அரிதான இனமாக பாதுகாக்கிறது பிரேசில் நாடு. இந்த தீவுக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் பிரேசில் அரசாங்கத்தால் இது பாதுகாக்கப்பட்ட இடமாக உள்ளது. பிரேசிலிய கடற்படையின் வருடாந்திர பராமரிப்பு வருகை மற்றும் ஒரு சில ஆராய்ச்சி பயணங்களைத் தவிர, யாரும் தீவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.