ஐயோ பாம்பு! மனிதர்கள் செல்ல முடியாத தீவு! தீவு முழுவதும் பாம்பு!

Snake Island
Snake Island
Published on

அதிகப் பாறைகள் கொண்ட நிலப்பரப்பாகவும், வெப்ப மண்டலப் பகுதியாகவும் இருப்பதால் இந்தத் தீவில் மனிதனோ அல்லது வேறு பாலூட்டிகளோ வாழ முடியாத நிலை உள்ளது. இதனால் தன்னை வேட்டையாடவோ, கொல்லவோ எந்த உயிரினமும் இல்லாத காரணத்தால் பாம்புகள் தங்கள் இனத்தை அந்த தீவில் பெருக்கி அதை தனக்கான தீவாக மாற்றிவிட்டன. அந்தத் தீவுக்கு ஓய்வெடுக்க வரும் இடம் பெயரும் பறவைகளை அங்கிருக்கும் பாம்புகள் உணவாகக் கொள்கின்றன. இந்த பாம்புத் தீவைப்பற்றிதான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் இல்ஹா டா குய்மாடா கிராண்டே (Ilha da Queimada Grande) எனும் தீவு இருக்கிறது. இத்தீவிற்கு பாம்புத் தீவு (Snake Island) என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. இத்தீவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு பாம்பு எனும் வீதத்தில் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகள் அதிகம் வாழ்கின்றன. பல்வேறு காலநிலைகளை கொண்ட இத்தீவில், பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும், பிரேசில் ராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தத் தீவுக்கே உரிய தனித்துவமான செய்தியாக ஒரு பாம்பு இனம் உள்ளது. அதன் பெயர், கோல்டன் லான்ஸ்ஹெட்ஸ். இந்தப் பாம்பு இனம் இல்ஹா தீவைத் தவிர, உலகில் வேறு எங்கும் இல்லை. பூமியிலுள்ள முக்கியமான விஷ உயிரினங்களில் இந்தப் பாம்பும் முக்கியமானதாக இருக்கிறது.

கோல்டன் லான்ஸ்ஹெட் என்பது லான்ஸ்ஹெட் என்னும் பாம்பு இனத்தின் ஒரு பகுதியாகும். உடலுக்குள் சென்று வேகமாகச் செயல்படும் விஷத்தை இந்த பாம்புகள் கொண்டிருக்கின்றன. அதனுடன் தொடர்புடைய இனமான ஜரராகா என்னும் இனத்தை விட கோல்டன் லான்ஸ்ஹெட் ஐந்து மடங்கு சக்தி வாய்ந்த விசத்தைக் கொண்டது.

இதனுடைய சக்தி வாய்ந்த விஷம் சதைப் பகுதியை தாண்டி சென்று ரத்த போக்கில் கலந்து உடலுறுப்பைச் செயலிலக்கச் செய்கிறது. கோல்டன் லான்ஸ்ஹெட் 70 சென்டிமீட்டர் வரை வளர கூடியது. ஆனால், அவற்றில் சில ஒரு மீட்டருக்கு மேல் வளரும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மூத்த குடிமக்களே, ஜாக்கிரதை! உங்கள் சொத்து உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்!
Snake Island

இவ்வகைப் பாம்புகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற காரணத்தால், பிரேசில் அரசாங்கம் அந்தத் தீவுக்கு மனிதர்கள் செல்லத் தடை விதித்துள்ளது. கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்பானது கொடிய விஷ உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று, அரிதான பாம்பு இனங்களை மனிதர்கள் கைப்பற்ற நினைப்பார்கள் என்பதால் அந்தத் தீவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் பாம்புகளைக் காப்பாற்ற முயற்சிகள் எடுத்திருக்கின்ற போதிலும், சில சட்ட விரோத வேட்டைக்காரர்கள் பாம்புகளைப் பிடித்து கறுப்பு சந்தையில் அதனை விற்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் தீவுக்கு சென்று வருவது சட்ட விரோதமான மற்றும் ஆபத்தான செயலாகும். இந்தத் தீவுக்குள் சென்று வர வேண்டும் என்றால், பிரேசிலின் கடற்படையின் அனுமதியைப் பெற வேண்டும். அந்தப் பாம்புகள் ஒரு வேளை கடித்துவிட்டால் அவற்றிற்கான மாற்று மருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவோ பாலோவினில் உள்ள புட்டாண்டே என்னும் நிறுவனத்தில் உள்ளது. எனவே, அங்கே ஒரு சின்ன பாம்பின் கடி கூட ஆபத்தானது. புட்டாண்டே நிறுவனம் கோல்டன் லான்ஸ்ஹெட்ஸை குறித்த ஆராய்ச்சி நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இல்ஹா டா குய்மாடா கிராண்டே உலகின் மிகவும் ஆபத்தான தீவுகளில் ஒன்றாகவும், மனிதர்கள் வாழவேத் தகுதியற்ற தீவாகவும் பார்க்கப்படுகிறது. உலகில் பல தீவுகள் இப்படி மனிதர்கள் வாழ தகுதியற்றதாக இருந்தாலும், பாம்புகளின் ஆதிக்கத்தால் மனிதர்கள் வாழ முடியாமல் போன தீவாக இல்ஹா டா குய்மாடா கிராண்டே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com