வெளிநாடுகளில் பனை ஏறும் முறை பற்றி தெரியுமா?
தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வாழை மரங்களைப் போலவே, உச்சி முதல் அடி வரை, பனை மரங்கள் மனித குலத்திற்கு நன்மை பயக்குகின்றன. பனை மரங்கள் பொதுவாக அவற்றின் பல்நோக்கு பயன்பாட்டிற்காக மதிக்கப்படுகின்றன- பழங்கள், கள், இனிப்பு, கிழங்கு வகை மற்றும் அவற்றின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் அலங்காரப் பொருட்கள். இதனால் அவை ‘மரங்களின் இளவரசி’, ‘பூலோக கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்றன.
பனை மரங்கள் பல நாடுகளில் உள்ளன. ஆனாலும் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. உடல் உரமாக இருந்தால் மட்டுமே பனை ஏறுவது என்பது சாத்தியம்.
இந்தோனேசியாவில் பனைகளில் சிறு சிறு தடங்களை உருவாக்கி பனை ஏறும் வழக்கம் காணப்படுகிறது. மியான்மர் நாட்டில் ஏணிகளை கொண்டு பனை ஏறி வரும் பழக்கம் உள்ளது. சில நாடுகளில் தற்போது எந்திரங்கள் உதவியுடன் பனை ஏறும் முறை வந்துள்ளது.
குட்டையாக உள்ள பனை மற்றும் இளம் பனைகளில் ஏணி பயன்படுத்தி பனை ஏறுவது தமிழகத்திலும் வழக்கத்தில் இருந்தது. சம உயரம் கொண்ட பனைகள் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே ஏணிகள் பயன்படுத்த இயலும். வெளிநாடுகளில் பெரும்பாலும் பனை மரம் ஏறும் சாதனங்களின் மூலமாகவே பனை ஏறுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் பனை மரத்தில் ஏறி இறங்குவதற்கு முன்பு இரு கால்களையும் பிணைக்கும் நார் போட்டு ஏறுவார்கள். அதுமட்டுமின்றி பனை மரத்தையும், முதுகை சுற்றி மாட்டிக் கொள்ளும் தாங்கு கயிறு கொண்டு பனை ஏறும் முறையும் பரவலாக காணப்படுகிறது. நெஞ்சில் தழும்பு ஏற்படாமல் இருக்க நெஞ்சில் தோல் மாட்டுவார்கள்.
பனை மரத்தின் உச்சியில் தேள், பாம்பு உள்பட போன்றவையும் காணப்படும். இன்னும் சொல்வது என்றால், காற்று காலங்களில் பனை ஏறுவது மிகவும் கடினம். இதை எல்லாம் கடந்துதான் பனை தொழிலாளர்கள், பதநீர் இறக்கி மக்களுக்கு கொடுக்கிறார்கள். பதநீரை காய்ச்சி கருப்பட்டியாகவும் தருகிறார்கள்.
தற்போது ஆட்கள் கிடைக்காததால் பனை ஏறும் முறையை தற்போது மாற்றியுள்ளனர். பனை மரத்தில் கீழிருந்து உச்சி வரை தடுப்புகள் வைத்து கயிற்றினால் கட்டி ஒரு ஏணியை போல அமைந்து, அதில் மளமளவென ஏறி பதனீர் எடுக்கின்றனர். இப்படி ஏறுவதால் நெஞ்சில் காயம், தழும்புகள் ஏற்படாது.