
‘பெற்ற பிள்ளைகள் காப்பாற்றவில்லை என்றாலும் பனை காப்பாற்றும்’ என்று ஒரு பழமொழி உண்டு. தமிழரின் தொன்மைக்கு ஓலைகளே சாட்சி. பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலம் உண்டு. ஓலை என்பது பொதுப் பெயராக இருந்தாலும், இளசாக முளைத்து வரும் பகுதியை 'குருத்தோலை' என்றும், பசுமையான ஓலைகளை 'சாரோலை' என்றும், காய்ந்துபோன ஓலைகளை 'காவோலை' என்றும் அழைப்பதுண்டு. கிராமப்புறங்களில் இன்றும் விழாக்களில் பனையோலைத் தோரணம் அலங்காரமாகக் கட்டப்படுகிறது.
ஓலையை சீராக வெட்டி ஒரு கட்டாக மாற்றி விட, அது நூல் வடிவம் எடுத்து விடும். அந்த நூல் வடிவத்தை 'ஏடு' என்று அழைப்பார்கள். பனை ஓலைச்சுவடிகள் மூலம் இலக்கியங்கள் கிடைத்துள்ளன. பனைமரம் புல் வகையைச் சேர்ந்தது. வெப்பமான பகுதிகளில் 30 முதல் 40 அடி வரை வளரக்கூடியது. பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, குடைப்பனை, திப்பிலிப்பனை, குண்டுப்பனை, காட்டுப்பனை என 34 வகைகள் உள்ளன.
‘கற்பகதரு’ என்று போற்றப்படும் பனைமரம் தமிழகத்தின் தேசிய மரம் என்ற சிறப்பான அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக, தென் தமிழகப் பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
பனை மரத்திலிருந்து பனை வெல்லம், பனங்கிழங்கு, பதநீர், நுங்கு, பனை ஓலை, பனம் பழம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனைநார் என ஏகப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. பனை மரத்தில் பெண் பனை மரங்கள்தான் பூத்து காய் காய்க்கும். இதிலிருந்துதான் நமக்கு நுங்கு, பதநீர் போன்றவை கிடைக்கும். ஆண் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஏகப்பட்ட கைவினைப் பொருட்கள் செய்ய முடியும். பனைமரம் விவசாயம், தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்கு பயன்படுகிறது.
பனையினால் பின்னப்பட்ட கட்டிலில் படுத்து உறங்குவது மிகவும் சுகமான அனுபவம். பனை நார் இயற்கையானது. காற்றோட்டம் மிக்கது. பனை நார் கொண்டு தயாரிக்கப்படும் கட்டில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதில் தூசி, பூஞ்சை போன்றவை படராது. இதனால் தூங்கும்பொழுது அலர்ஜி, ஆஸ்மா போன்ற பிரச்னைகள் வராது. பனைநார் கட்டில் காற்றோட்டம் உடையதாக உள்ளதால் வியர்வை, அரிப்பு போன்றவை ஏற்படாது.
பனைநார் கட்டிலில் நீண்ட நேரம் தூங்கினாலும், பனைநார் சேரில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலும் உடல் சூடாகாது. பனை ஓலைக்கு பின்புறம் இருக்கும் மட்டையை தண்ணீரில் ஊற வைத்து சில படிநிலைகளுக்குப் பிறகு நார் பிரித்தெடுக்கப்படுகிறது. பின்பு அவை கட்டிலாக உருவெடுக்கிறது.
பனை நார் கட்டில் உடலை தளர்வாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாது. உடல் சூடு தணியும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பனை நார் கட்டில் மென்மையாக இருப்பதால் உறங்குவதற்கும் வசதியாக இருக்கும். பனை நார் கட்டில் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. பனை மரங்களை வெட்டாமல் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.
இவ்வளவு சிறப்புகள் மிக்க பனைநார் தொழில் மிகவும் நலிந்து வருகிறது. பனை மரம் ஏறுபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. சிறப்புமிக்க பனை மரத்தை நம் வருங்கால சந்ததியினரும் தெரிந்து பயன் பெறும் வகையில் இதன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதற்கு பனை மரத்திலிருந்து பெறப்படும் பொருட்களை உபயோகிப்பதும், வாங்கி ஊக்குவிப்பதும் அவசியம். செய்வோமா?