பேப்பர் பிளேட்டுகள் Vs பாக்கு மட்டை தட்டுகள்: எது சிறந்தது?

Paper plates and gourd bat plates
Paper plates and gourd bat plates
Published on

விருந்து என்றதும் நம் கண் முன்னே வருவது வாழை இலைதான். பச்சை பசேல் என்று இருக்கும் தலைவாழை  இலையில் உணவை சூடாக பரிமாறும்பொழுது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதிலுள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை கிடைக்கின்றன. இவை கண்களை பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடற்புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

வாழையிலை தட்டுப்பாட்டின் காரணமாக உணவு சாப்பிடுவதற்கு பேப்பர் இலைகள், தட்டுகள் இப்பொழுது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பிளாஸ்டிக் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. விலை குறைவாகவும், புழக்கத்திற்கு ஏற்றதாகவும் இருந்ததால் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் பயன்பாட்டில் இருந்தன. இவற்றினால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகளையும், ஆபத்துகளையும் தெரிந்து கொண்டதும் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து பேப்பர் தட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

செய்தித்தாள்கள் மூலம் தயாரிக்கப்படும் பேப்பர் பிளேட்டுகளில் உணவுப் பொருட்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடப்படும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரிகளின் தாக்குதலும் குடல் புற்று நோயை உருவாக்கும். எனவே, உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கும் இவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

பேப்பர் தட்டுகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றில் சூடான உணவு மற்றும் டீ, காபி போன்ற பானங்களை எடுத்துக்கொள்வதால் அதில் உள்ள மெழுகு கரைந்து நம் உடலுக்குள் சென்று கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, அல்சர், குடல் புற்றுநோய் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கு மாற்றாக பாக்கு மட்டை தட்டுகளை பயன்படுத்தலாம். பாக்கு மட்டை தட்டுகள் பக்க விளைவுகள் அற்றவை. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காகித பிளேட்டுகளுக்கு சிறந்த மாற்றாக இவை உள்ளன. இவை எளிதில் மக்கக்கூடியவை.

இதையும் படியுங்கள்:
கௌச்சர் நோய் தரும் சிக்கல்கள் பற்றி தெரியுமா?
Paper plates and gourd bat plates

பாக்கு மட்டைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவை. அத்துடன் இவை உதிர்ந்த இலைகளில் இருந்து பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கப்படுவதால் செலவும் அதிகம் ஆவதில்லை. பிளாஸ்டிக் தட்டுகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இவை எளிதில் மக்கக்கூடியவை அல்ல. பாக்கு மட்டை தட்டுகளோ பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியப்பட்டாலும் மண்ணோடு மண்ணாக மக்கி விடுகின்றன. இதனால் இவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாக்கு மரத்திலிருந்து உதிரும் இலைகளை நீரில் ஊற வைத்து நன்கு காய வைத்து பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை தயாரிக்க முதலீடு என்பது மிகவும் குறைவாக உள்ளதால் லாபம் ஈட்டும் தொழிலாகவும் உள்ளது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் பாக்கு மட்டை விற்பனை வியாபாரம் அதிகரித்துள்ளது. பாக்கு மட்டைத் தட்டுகள் எல்லா வடிவங்களிலும், சிறியது முதல் பெரியது வரை எல்லா வகைகளிலும் கிடைக்கின்றன. பாக்கு மட்டையில் ஸ்பூன் முதல் தட்டு, சிறு சிறு கிண்ணங்கள், தொன்னை என அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் தட்டுகளை ஒதுக்கி, சுற்றுச்சூழலின் நண்பனான பாக்கு மட்டை தட்டுகளை, வாழை இலைகள் கிடைக்காத சமயங்களில் பயன்படுத்தி ஆரோக்கியமாக இருப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com