கௌச்சர் நோய் தரும் சிக்கல்கள் பற்றி தெரியுமா?

அக்டோபர் 1, International Gaucher day
 International Gaucher day
International Gaucher day
Published on

கெளச்சர் நோய் என்பது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு பரம்பரையாக ஏற்படும் ஒரு அறிய மரபணு கோளாறு ஆகும். இது உடலில் உள்ள நொதிகளின் உற்பத்தியை பாதிக்கிறது. கல்லீரல், மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் சேரக்கூடிய குளுக்கோ செரிப்ரோசைடு எனப்படும் ஒருவகை கொழுப்பை உடலால் உடைக்க முடியாதபோது இந்தக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் கொழுப்புகள் உருவாகத் தொடங்குகின்றன.

இந்த நோயின் அறிகுறிகள்: மண்ணீரல் மற்றும் கல்லீரல் மிகவும் பெரியதாகி சாதாரணமாக வேலை செய்வதை நிறுத்தும். மேலும், நுரையீரல், மூளை, கண்கள் மற்றும் எலும்புகளை பாதிக்கும். இரத்த சோகை, சோர்வு, எலும்பு வலி, உடலில் அடிக்கடி ஏற்படும் சிராய்ப்புக் காயங்கள், எலும்பு முறிவுகள் உடலில் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, நடுக்கம், தசை பலவீனம், சமநிலை இழப்பு என்று நரம்பியல் அறிகுறிகள் ஏற்படும்.

கௌச்சர் நோய் மூன்று வகைப்படும்:

வகை ஒன்று: இது மிகவும் பொதுவான வகையாகும். இந்த நோயின் அறிகுறிகள் குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ தொடங்குகின்றன. சிலருக்கு முதுமை வயதிலும் தோன்றும். இரத்தத்தில் போதுமான பிளேட்லெட்டுகள் இல்லாத காரணத்தால் எளிதில் காயம்படும். மிக சோர்வாக உணர்வார்கள். இவர்களுக்கு சிறுநீரகம், நுரையீரல் அல்லது எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் இருக்கலாம். கல்லீரல் மற்றும் மண்ணீரலிலும் பிரச்னைகள் உண்டாகும்.

வகை இரண்டு: இது பெரும்பாலும் மூன்று முதல் ஐந்து மாதக் குழந்தைகளை பாதிக்கிறது. இந்த நோய் கண்ட குழந்தைகள் இரண்டு வயதுக்கு மேல் வாழ்வதில்லை என்பது சோகம்.

வகை மூன்று: பொதுவாக, குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகிறது. நரம்பியல் அறிகுறிகளை உண்டாக்கலாம். ஆனால், வகை இரண்டை விட இது கடுமை குறைவானதாக இருக்கும். எலும்புக் கோளாறுகள், கண் அசைவுக் கோளாறுகள், வலிப்புத்தாக்கங்கள், இரத்தக் கோளாறுகள், சுவாசப் பிரச்னைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல் விரிவடைதல் போன்றவை ஏற்படும்.

சிகிச்சை முறைகள்: இந்த நோய்க்கு மருந்து இல்லை. ஆனால், சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். மூன்று வகைகளில் எந்த வகை என்பதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். என்சைம் மாற்று சிகிச்சை, வகை ஒன்று மற்றும் மூன்றுக்கு பயனளிக்கும். வழக்கமான உடல் பரிசோதனைகள் மற்றும் எலும்பு அடர்த்தி திரையிடல், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இரத்த மாற்றம், மண்ணீரலின் முழு அல்லது பகுதியை அகற்ற அறுவை சிகிச்சை போன்றவை தரப்படும்.

இதையும் படியுங்கள்:
காபி கண்டுபிடிக்கப்பட்ட கதை மற்றும் காபி நாள் கொண்டாட்டங்கள்!
 International Gaucher day

கௌச்சர் நோய் தரும் சிக்கல்கள்: இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு தாமதமான வளர்ச்சி, தாமதமான பருவமடைதல், பலவிதமான எலும்பு வலி, மூளை பாதிப்பு, மூட்டு வலி, நடப்பதில் சிக்கல், போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாமல் இரத்த சோகை, சோர்வு போன்றவை ஏற்படும்.

இன்று அக்டோபர் 1ம் தேதியன்று சர்வதேச கௌச்சர் நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் நோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தரப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com