
கரும்பு, மூங்கில், வாழை இவற்றை காணும்பொழுது மூங்கிலையும் வாழையும் மரம் என்று கூறிவிடுவோம். கரும்பை எதில் சேர்ப்பது என்று தெரியாமல் கரும்பு என்று சொல்லிவிட்டு விடுவோம். குழந்தைகள் கேட்டால் கூட அது புல்லா? மரமா? என்று நமக்கு சொல்லத்தெரியாது. அவற்றைப் பற்றி அது எந்த வகையை சார்ந்தது என்பதை இப்பதிவில் காணுவோம்.
கரும்பு:
கரும்பு இல்லை என்றால் நாம் இனிப்பின் சுவையைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க மாட்டோம். காலையில் எழுந்ததும் காபி, டீக்கு சுவை சேர்ப்பது கரும்பிலிருந்து பெறப்படும் வெல்லம், சர்க்கரை, போன்ற பொருட்கள்தான். அப்படிப்பட்ட கரும்பு புல் வகையை சார்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது கிராமினோ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கணுக்களிலிருந்து இலைகள் மேலெழுந்த சோலையாக வளரும் இயல்புடையது.
கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக்கூடியது. புல்லினத்தை சேர்ந்த தாவரமான கரும்பு மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப்பொருட்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பு ஒரு பணப்பயிர். கரும்பிலிருந்து பெறப்படும் முக்கிய பொருள் சுக்ரோஸ். இது கரும்பின் தண்டு பகுதியில் சேர்த்து வைக்கப்படுகிறது. உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா என்று அழைக்கப்படுகிறது.
மூங்கில்:
அதேபோல் மூங்கிலும் புல் வகையை சார்ந்த ஒரு மரம் என்று கூறப்படுகிறது. இது நீண்ட கூரான முனைகளை உடைய கரகரப்பான மெல்லிய இலைகளைக் கொண்ட முள்ளுள்ள உட் கோடான கூட்டமாக நீண்டு வளரும் மரம். தமிழகம் எங்கும் வளர்க்கப்படுகிறது. காடுகளிலும் தானே வளர்கிறது.
மிகவும் மென்மையும் கடினமும் கொண்ட ஒரு புல் மற்றும் மரம் என்றால் மூங்கில் என்றுதான் கூறமுடியும். இதன் தனித்துவமான பண்பு என்பது வேகமாக வளரக்கூடியதுதான். 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. ஒரே நாளில் 250 சென்டிமீட்டர் கூட வளரும் இயல்புடையது. இதன் வயது 60 என்று குறிப்பிடுகின்றனர் .ஆனால் அது 59 நாட்களிலேயே 60 அடி உயரம் வரை வளர்ந்து விடுகிறதாம்.
கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் வரை உள்ள பிரதேசங்களில் மூங்கில் நன்றாக வளரும் .ஆதலால் குத்து செடி, வறண்ட பிரதேசங்களில் மூங்கில் வளர்வது எளிதாக உள்ளது. கட்டுமான பணிகளுக்கு மிகவும் பலமான ஆயுதம் என்றால் அது மூங்கில்தான். இதன் இலை, கணு, வேர், விதை, உப்பு, அரிசி ஆகியவை மருத்துவ பயன் உடையவை.
வாழை:
வாழையை மரம் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் அது மரம் வகையை சார்ந்தது அல்ல. ஏனெனில் அதற்கு மரங்களைப்போல தண்டு பகுதி இல்லை. அது பூக்கும் மூலிகை வகையை சேர்ந்த தாவரம். அவற்றின் இலையை சூழ்ந்து இருக்கும் பகுதிகள் இறுக்கமாக வளர்ந்து தண்டு போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
ஆனால் உண்மையில் அதன் இலை தண்டுகளால் உருவான போலி தண்டுதான். வாழை வேகமாக வளரக்கூடியது. ஒரு நாளைக்கு சுமார் 1.5 மீட்டர் வரை வளரும். சுமார் 40 அடி உயரம் வரை நீண்ட வளர்ச்சியும் கொண்டது. பூமியில் வளரும் மிக உயரமான மூலிகை வகை தாவரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இதில் பேயன், மொந்தன், பூவன், ரஸ்தாளி முதலிய பல இனங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் இலை, காய், கனிகளுக்காக பயிரிடப்படுகின்றன. வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயனுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து பாகங்களும் பயன்படத்தக்கதும் ஆகும்.
ஆதலால் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வது நம் அறிவு வளர்ச்சிக்கு பயன்படும் செயல். நம் குழந்தைகளுக்கு இவைகளைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு சொல்லித்தர வேண்டியது நம் கடமையும் ஆகும். பசுமை சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் இயன்ற அளவு அவர்களுக்கு சொல்லி தருவோம்! அவர்களையும் கற்றுக்கொள்ள தூண்டிவிடுவோம்!