நீளவால் தாமரைக் கோழி அல்லது தாழைக் கோழி, இலைக் கோழி என்பது நீர்நிலைகளிலும், நன்னீர் குளங்களிலும், அல்லிக் குளங்களிலும், தாமரை தடாகங்களிலும், நதித் துவாரங்களிலும் காணப்படும் ஒரு தாமரைக் கோழி இனமாகும். இது ஹைட்ரோபாசியானஸ் என்ற பேரினத்தில் உள்ள ஒரே இனமாகும். ஆங்கிலத்தில் இதன் பெயர் Pheasant tailed Jacana.
இவை தாமரை மற்றும் அல்லிகள் நிறைந்த ஏரிகளில் காணப்படுவதால், தாமரைக் கோழி பறவைகள் என்றும் அல்லி பறவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மயில்வால் தாமரைக் கோழி, கருப்பு தாமரைக் கோழி, ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க தாமரைக் கோழி என்பன சில வகைகளாகும். இவை தாவரங்களின் மீது நடப்பதற்கு ஏற்ற நீண்ட விரல்களையும், கூர் நகங்களையும் பெற்றுள்ளன.
மிக நீண்ட கால் விரல்களைக் கொண்ட இவை, மிதக்கும் இலைகளின் மேல் நடக்கும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக இவை ஓடும் நதிகளை தவிர்த்து விடுகின்றன. இவற்றால் நன்றாக நீந்தவும் முடியும்.
இவற்றில் ஆண் பெண் என்ற இரு பாலினங்களும் வேறுபாடின்றி ஒத்த நிறத்துடன் காணப்படுகின்றன. ஆண் பறவைகளுக்கு அழகான நீண்ட ஒற்றை இறகினைக் கொண்ட கருப்பு நிற வால் உண்டு. அவற்றின் இறக்கைகளின் மேல்புறமும் அடிப்புறமும் ஆழ்ந்த தேன் கலரிலும் நடுவில் வெண்நிறத்தில் அமைந்த உள் இறக்கைகளும் இருக்கின்றன.
பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட அளவில் பெரியவை. பெண் பறவைகள் நீண்ட வாலின்றி காணப்படுகின்றன. முட்டையிடுவது மட்டுமே பெண் பறவைகளின் வேலையாக உள்ளது. முட்டைகளை பாதுகாப்பதற்கான கூடுகளைக் கட்டி ஆண்பறவைகள் காத்திருக்கின்றன. முட்டைகளை அடைகாப்பது தொடங்கி குஞ்சுகளை வளர்த்தெடுப்பது வரை ஆண் பறவைகளின் வேலை தான்.
நீர்த் தாவரங்களின் மேல் பேழை போல் மிதக்கும் கூடுகளை கட்டி அதில் சராசரியாக நான்கு முட்டைகளை இடும். கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் முட்டைகள் சாதாரண கோழி முட்டைகள் போல் தான் இருக்கும். இந்த முட்டைகளை நீர் உடும்புகள், பருந்துகள், கழுகுகள், காகங்கள் போன்றவை விரும்பி உண்ணும். கூட்டுக்கு அருகில் பெண் பறவை நின்று கொண்டிருக்கும் பொழுது எதிரிகள் வந்தால் இவை மூர்க்கமாக தாக்கி விரட்டுவது உண்டு.
குஞ்சுகள் வெளிவந்த சில நிமிடங்களிலேயே தனியாக வேட்டையாடத் தொடங்கி விடுகின்றன. ஆனால் தந்தையின் பார்வையைத் தாண்டி இவை செல்வதில்லை. 45 - 60 நாட்கள் வரை தந்தைக் கோழியின் பராமரிப்பில் இருக்கும் குஞ்சுகள் வளரும் வரை அவற்றை பாதுகாப்பாக ஏந்தி செல்வதற்கு ஆண் பறவைகளின் சிறகில் கூடுதல் தகவமைப்புகள் உண்டு.
இவை இந்தியா, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. பூச்சி உண்ணிகளான இவை, வெட்டுக்கிளி, வண்டுகள், கிரிகெட்டுகள் போன்ற பூச்சிகளையும், முதுகெலும்பில்லாத சிறு உயிரினங்களையும் நீரின் மேல் மிதக்கும் தாவரங்களின் மீது அமரும்போது வேட்டையாடுகின்றன. இவை பூச்சிகளை அதிகமாக உட்கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்கின்றன.