பூந்தொட்டியில் எறும்பு தொல்லையா! விரட்ட எளிய வழிமுறைகள்!

செடிகளுக்கு ஆபத்து தரும் எறும்புகளை இயற்கையான முறையில் விரட்டி செழிப்பாக வளர்க்கலாம்.
எறும்பு தொல்லை | plant ant problem
எறும்பு தொல்லை | plant ant problemImage credit: Gemini AI
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

வீட்டில் போதிய இடவசதி இல்லாதவர்கள் ஆசைக்காகவும், அழகுக்காகவும்,மன அழுத்தத்தை போக்கவும் பூந்தொட்டிகளில் செடிகள் வளர்க்கிறார்கள். அந்த தொட்டிகளில் எறும்புகள் வருவது இயற்கை தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக வந்தால் அது செடிக்கு பாதிப்பை உள்ளாக்கும். அந்த வகையில் எறும்பு வருவதற்கான காரணங்கள், இயற்கையாக அகற்றும் வழிகள் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

பூந்தொட்டியில் மொத்தமாக எறும்புகள் இருந்தாலும் செடிகளின் வேர்களை பாதிக்காது. ஆனால் மண்ணில் ஆழமாக எறும்புகள் கூடு கட்டும் போது வேர்களுக்கு செல்லும் காற்று மற்றும் நீரின் ஓட்டம் தடைபட்டு செடியின் வளர்ச்சியை பாதிக்கிறது. அஃபிட்ஸ் ( Aphids), மீலிபக்ஸ் ( Mealybugs) போன்ற செடிகளுக்கு தீமை விளைவிக்கும் சிறிய பூச்சிகளை எறும்புகள் பாதுகாப்பதோடு அவற்றுடன் இணைந்து வாழ்கின்றன. அதனால் பூந்தொட்டிகளில் எறும்புகள் தென்பட ஆரம்பித்ததும் அதனை அகற்றுவதற்கான வழிமுறைகளில் இறங்குவதே செடியை பாதுகாக்கும் வழிமுறையாகும்.

பூந்தொட்டிகளில் எறும்புகள் வர காரணங்கள்:

  • எறும்புகள் தளர்வான ஈரப்பதம் இல்லாத வறண்ட மண்ணில் எளிதாக கூடு கட்டுகின்றன.

  • செடிகளை தாக்கும் சிறிய பூச்சிகளான அஃபிட்ஸ், மீலிபக்ஸ் பூச்சிகள் வெளியேற்றும் இனிப்பான திரவத்தை (Honeydew) விரும்பி உட்கொள்வதாலேயே பூந்தொட்டிகளில் எறும்புகள் அதிகரிக்கின்றன. எறும்புகளை ஈர்க்கும் முக்கிய காந்த சக்தியாக இந்த திரவம் உள்ளது.

  • எறும்புகளுக்கு இருப்பிடமாக முறையற்ற உரங்களும் பூந்தொட்டியில் இருந்து விழும் காய்ந்த மற்றும் அழுகிய இலைகள் மற்றும் பூக்களும் இருக்கின்றன.

எறும்பு தொல்லை | plant ant problem
எறும்பு தொல்லை | plant ant problemImage credit: Gemini AI

எறும்புகளை அகற்றும் இயற்கை வழிகள்:

  • பூந்தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு சீரான கால இடைவெளியில் தண்ணீர் ஊற்றி மண்ணை முழுமையாக காய்ந்து போகாமல் ஈரப்பதமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான மண்ணில் எறும்புகள் வாழ விரும்புவதில்லை. மேலும் அதிகப்படியான நீர் செடியின் வேர் அழுகலுக்கு காரணமாகும் என்பதால் போதிய நீரை செடிகளுக்குஊற்றி பராமரிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இந்திய நாகம் vs எகிப்து நாகம்: இதில் எந்த பாம்பு மிகவும் கொடூரமானது!
எறும்பு தொல்லை | plant ant problem
  • செடிகளுக்கு தீங்கு விளைவிக்கும் அஃபிட்ஸ் மற்றும் மீலிபக்ஸ் போன்ற பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதி மற்றும் தண்டுகளில் இருக்கிறதா என பரிசோதித்து இருந்தால் வேப்ப எண்ணெய் கரைசலை செடிகளின் மீது தெளித்தால் அவை அழிந்து விடும். இதனால் எறும்புகளுக்கு உணவு கிடைக்காமல் தானாகவே வெளியேறிவிடும்.

  • பூந்தொட்டியை சுற்றி இருக்கும் தாவர கழிவுகளான காய்ந்த இலைகள், உதிர்ந்த பூக்கள், அழுகிய குப்பைகள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருந்தால் எறும்பு அடியோடு ஓடிவிடும்.

  • பூந்தொட்டிகளை தரையில் வைத்திருந்தால் எளிதாக எறும்புகள் மண்ணுக்குள் சென்று விடும் என்பதால் இரும்பு அல்லது மரத்தாலான ஸ்டாண்டுகள் அல்லது செங்கற்கள் மீது உயரமாக வைத்தால் எறும்புகள் எளிதில் அண்டாது.

  • மேற்கூறிய அனைத்தையும் செய்தும் எறும்புகள் குறையவில்லை என்றால் செடியை வேரோடு பத்திரமாக தனியாக எடுத்து பூந்தொட்டியில் இருக்கும் பழைய மண்ணை முழுவதுமாக அகற்றி புதிய ஊட்டச்சத்து மிகுந்த மண்ணில் செடியை நட்டு வளர்ப்பது எறும்பு தொல்லைக்கு சரியான தீர்வாகும்.

இதையும் படியுங்கள்:
கூக்கபரா: மனிதர்களைப் போல உரக்கச் சிரிக்கும் விசித்திரமான பறவை!
எறும்பு தொல்லை | plant ant problem

பூந்தொட்டியில் எறும்பு வராமல் தடுக்க பின்பற்ற வேண்டியது:

பூந்தொட்டியில் இருக்கும் செடியின் இலைகள் மற்றும் தண்டுகளில் பூச்சி தாக்குதல் இருக்கிறதா? என வாரத்திற்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

பூந்தொட்டியில் இருக்கும் மண் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நர்சரியிலிருந்து புதிய செடிகள் வாங்கி வரும் போது அதில் பூச்சி தாக்குதல் எறும்புகள் இருக்கிறதா? என்பதை கவனித்த பிறகே பூந்தொட்டியில் நட வேண்டும்.

உதிர்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றுவதோடு பூந்தொட்டியை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

வறண்டு போகாமல் மண்ணை ஈரமாகவும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி சுத்தமாகவும் பராமரித்தால் பூந்தொட்டியில் எறும்பு தொல்லை என்பதே இருக்காது.

logo
Kalki Online
kalkionline.com