
சமீபத்தில் கோவையில் உள்ள மருதமலை அடிவாரத்தில் இறந்த ஒரு பெண் காட்டு யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அதன் வயிற்றில் சுமார் 5 கிலோ எடையுள்ள ஒரு முறை மட்டுமே உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் அலுமினிய ஃபாயில்கள் உள்ளிட்ட கணிசமான அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. மேலும். அது 12 முதல் 15 மாத ஆண் யானைக் கன்றை கருவில் சுமந்திருந்ததும் தெரிய வந்தது.
யானையின் இறப்புக்குக் காரணம்: ஆய்வக சோதனைகள் மூலம் பிளாஸ்டிக் நுகர்வு காரணமாக யானை பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம். அது யானையின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளைக் கடுமையாக பாதித்து இறுதியில் பல உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு வழி வகுத்திருக்கலாம். என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மனிதர்களின் அலட்சியம்: ஒரு பாவமும் அறியாத ஒரு பெண் யானையும் அதன் வயிற்றிலேயே மறித்துப் போன பச்சிளம் ஆண் யானைக் கன்றும் என்ன தவறு செய்தன? இதற்கெல்லாம் மூல காரணம் மனிதர்கள் செய்யும் தவறுதானே? மருதமலை அடிவாரத்திற்கு உணவு தேடி வரும் யானைகள் குப்பைக் கிடங்குகளில் வீசப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை உண்ணும்போது பிளாஸ்டிக் நுகர்வையும் உட்கொண்டிருக்கலாம். யானை மட்டுமல்ல, கால்நடைகள் மற்றும் பிற உயிரினங்கள் பலவும் மனிதர்களின் அலட்சியத்தாலும் அக்கறையின்மையாலும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி இறப்பை சந்திக்கின்றன.
நெகிழிப் பொருள்களை உண்பதால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவுகள்:
செரிமான அமைப்பில் அடைப்பு: பிளாஸ்டிக் பைகள் மற்றும் நெகிழிக் குப்பைகள் விலங்குகளின் செரிமான பாதைகளில் சென்று சேர்வதனால் செரிமான பாதைகளில் அடைப்பு ஏற்படுகின்றன. இதனால் அவற்றுக்கு மேற்கொண்டு உணவு உள்ளே செல்வது தடைபடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் வயிறு நிரம்பியதாக உணரும் விலங்குகள் பசியை இழக்கின்றன. மேலும், கடுமையான அஜீரணம், வயிற்று வலி மற்றும் நாள்பட்ட வீக்கம் ஆகிவற்றால் பாதிக்கப்படுகின்றன.
காலப்போக்கில் பிளாஸ்டிக் ஒரு கடினமான கட்டியை உருவாக்கி விலங்குகளை பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்று போன்றவற்றுக்கு வழிவகுத்து இறுதியாக மரணத்தை தழுவக் காரணமாக அமைகின்றன. வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகளுடன் பசுக்கள் இறந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கூர்மையான அல்லது கடினமான பிளாஸ்டிக் துண்டுகள் செரிமான மண்டலத்தில் சிராய்ப்புகளையும் துளைகளையும் ஏற்படுத்தலாம். இதனால் உட்புற ரத்தப்போக்கு, தொற்றுகள் மற்றும் வயிற்றுப் புறணிகளில் வீக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள பல்வேறு ரசாயனங்கள் விலங்குகளின் உடலில் கசிகின்றன. இந்த ரசாயனங்கள் அவற்றின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து கல்லீரல் போன்ற உறுப்புகளை சேதப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து இனப்பெருக்க பிரச்னைகளுக்கு இட்டுச் செல்கின்றன.
மனிதர்கள் செய்ய வேண்டியது என்ன?
மனிதர்கள் செல்லும் இடமெல்லாம் பிளாஸ்டிக் பைகளையும், பாட்டில்களையும், அலுமினிய ஃபாயில்களில் உணவுப் பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அவற்றை உண்டுவிட்டு முறையாக அப்புறப்படுத்தாமல் அப்படியே குப்பையில் வீசுகிறார்கள். உணவு தேடி வரும் விலங்குகள் குப்பைகளில் உணவைத் தேடும்போது அவை பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றன. இயற்கை மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையின் காரணமாக விலங்குகள் பிளாஸ்டிக்கை உண்ணத் தூண்டப்படுகின்றன.
பிளாஸ்டிக்கை உண்ணும் பசு, ஆடு போன்ற விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்கள், அதாவது இறைச்சி மற்றும் பால் ஆகியவற்றை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படலாம். இவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மனிதர்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்வது மிகவும் அவசியமாகும். வெளியே செல்லும்போது கண்டிப்பாக மஞ்சள் பைகளை எடுத்துச் சென்று அவற்றில் பொருட்களை வாங்கி வர வேண்டும். மனிதர்கள் மனது வைத்தால் மட்டுமே விலங்குகளும் மனிதர்களும் ஆரோக்கியமாக இருக்க முடியும். பூமியும் சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருக்கும்.