'பிளாட்டிபஸ்' - முட்டையிடும் பாலூட்டி! இயற்கையின் அதிசயமா அல்லது பிழையா?

Platypus
Platypus
Published on

லகில் வாழும் லட்சக்கணக்கான உயிரினங்களில் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான உயிரினம் எதுவென்றால் அது 'பிளாட்டிபஸ்' என்ற உயிரினம்தான். ஏனெனில். உயிரினங்களை இரு வகையாகப் பிரித்தால், குட்டி போடுவது மற்றும் முட்டையிடுவது எனப் பிரிக்கலாம். இதில் குட்டி போடும் எல்லா உயிரினங்களும் பால் கொடுக்கும் தன்மை படைத்தவை. முட்டையிடும் உயிரினங்களால் பால் கொடுக்க முடியாது. ஆனால். முட்டையிட்டு குஞ்சு பொரித்து பால் கொடுக்கும் ஒரே உயிரினம் எதுவென்றால் அது 'வாத்தளகி' எனப்படும் பிளாட்டிபஸ்தான். இதுவரை விஞ்ஞானிகளால் இதன் மர்மத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது இயற்கையின் அதிசயமா? அல்லது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட பிழையா? என்ற கோணத்தில் விஞ்ஞானிகளையே அதிகம் யோசித்து மூளையை குழம்பச் செய்யும் விலங்கு இந்த பிளாட்டிபஸ். முதன் முதலில் இப்படி ஒரு உயிரினம் உள்ளதென்பது 1798ல்தான் உலகுக்குத் தெரிய வந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கிடைத்த பிளாட்டிபசின் எலும்புக்கூட்டை சோதித்துப் பார்த்தபோது, இது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே பூமியில் இருந்தது என்பது தெரிய வந்தது. பாலூட்டி இனங்களில் மோனோட்ரீம்ஸ் என்ற வகையைச் சேர்ந்த ஐந்து இனங்களில் இன்று உயிருடன் இருப்பவை வெறும் மூன்று இனங்கள்தான். இதிலும் இரண்டு வகை பிளாட்டிபஸ் இனங்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன.

இவை ஆற்றுப் படுகைகள் மற்றும் நன்னீர் ஏரிகளில் வளைதோண்டி வசிக்கும் இரவு நேர விலங்குகளாகும். இவற்றால் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். தன் இரவுப் பொழுதை முழுவதும் உணவு தேடுவதற்காகவே கழிக்கிறது. நீருக்கு அடியில் வாழும் புழுக்கள், இறால்கள், பூச்சிகள், கிளிஞ்சல்கள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கிறது. பிளாட்டிபஸ் விலங்கின் தோல் இரண்டு அடுக்குகளால் ஆனது. உடலை ஒட்டியபடி உள்ள முதல் அடுக்கு காற்றை தக்கவைத்துக் கொள்ளவும், இரண்டாவது அடுக்கு அவற்றை குளிர் தாக்காத வண்ணம் ஒரு உறை போல செயல்படுகிறது. இதன் ரோமம் மிகவும் அடர்த்தியானது.

பிளாட்டிபஸ் விலங்கின் ஆயுட்காலம் 12 ஆண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் பெண் விலங்கு முட்டையிடும் சமயத்தில், வெள்ள அபாயத்திலிருந்து அவற்றைக் காக்க, நீர் பரப்பிலிருந்து பல மீட்டர் உயரத்திற்குச் சென்று முட்டை இடுகிறது. பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரித்து வெளிவந்ததும் பாலூட்டி வளர்க்கிறது. இந்த விலங்குக்கு பாலூட்டும் மார்புக் காம்புகள் இல்லை என்றாலும், தனது தோல் துவாரங்கள் வழியே கசிந்து வரும் பாலை குட்டிகள் உறிஞ்சிக் குடித்து வாழ்கின்றன.

இதுமட்டுமின்றி, ஆண் பிளாட்டிபஸின் பின்னங்கால்களில் ஒன்றரை சென்டிமீட்டர் நீளத்துக்கு ஒரு விஷமுள்ள கொடுக்கு உள்ளது. இதிலிருந்து வரும் விஷம் ஒரு நாயையே கொல்லும் அளவுக்கு வீரியமானது. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்றாலும், கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடியதாகும். இந்த முள், இனப்பெருக்க காலத்தில் மற்ற ஆண் பிளாட்டிபஸ்களை எதிர்கொள்ளவும், தன் எதிரியைக் கொல்லவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நச்சுமுள் பிளாட்டிப்பஸின் பல்லாயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியில் கிடைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களின் பழங்கால கதைகளில் இடம்பெற்றுள்ள பிளாட்டிபஸ், அவர்களின் கூற்றுப்படி ஒரு நீர்வாழ் உயிரினத்துக்கும், வாத்துக்கும் பிறந்த பிள்ளைதான் பிளாட்டிபஸ் என அவர்கள் நம்புகிறார்கள். இத்தகைய அதிசயங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ள பிளாட்டிபஸ் என்ற உயிரினம், இன்றளவும் இயற்கையை மிஞ்சிய அற்புத விலங்காகப் பார்க்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com