நாம் முட்டையை சமைத்து நன்றாக சாப்பிட்டுவிட்டு ஓட்டை மட்டும் தேவையில்லை என்று தூக்கிப்போட்டு விடுகிறோம். நாம் முட்டைப் பயன்படுத்தி செய்யும் உணவில் தவறுதலாக சிறு அளவு முட்டை ஓடு விழுந்தால் கூட பதறிப்போய் அதனை எடுத்து தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அந்த முட்டை ஓடுகளில்தான் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. ஆகையால் நாம் அதனை தூக்கி எறியாமல் தாவரங்களுக்குப் பயன்படுத்தலாம்.
அதேபோல் வீட்டு நாய்கள் மற்றும் தெரு நாய்களுக்கு உணவில் சேர்த்து கொடுக்கலாம். முட்டை ஓடுகளை சிலர் தாவரங்களுக்குப் பயன்படுத்தி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், அது என்ன நாய்களுக்கு உணவாக? என்று பலருக்கும் சந்தேகமாக இருக்கும். ஆம்! உங்கள் வீட்டிலோ அல்லது உங்களின் தெருவிலோ நாய்கள் இருந்தால் உணவில் இனி முட்டை ஓட்டின் பவுடர் கலந்துக் கொடுத்து ஆரோக்கியமான நாய்களாக மாற்றுங்கள்.
சரி! இப்போது முட்டை ஓடுகளை எப்படி நாய்களின் உணவாக்குவது என்று பார்ப்போம்.
முதலில் முட்டை ஓடுகள் அனைத்தையும் சேகரித்து ஒன்றாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதனை நீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதனை ஒரு பகல் முழுவதும் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பின்னர் சிறிது சிறிதாக உடைத்து 2 முதல் 5 நிமிடங்கள் வரை வறுக்கவும். இப்போது அதனை எடுத்து பவுடராக அரைக்கவும்.
நீங்கள் உங்கள் நாய்களுக்கு கடையில் கால்சியம் சப்லிமென்ட் வாங்குவதற்கு பதிலாக, எளிதான முறையில் இதனை செய்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்யுங்கள்.
காலை உணவில் இதனை பாதி டீஸ்பூன் அளவு சேர்த்து கொடுத்தால், நாய்களின் விரல்கள், எலும்புகள், பற்கள் ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான கால்சியம் சத்து அடங்கியுள்ளதால் வாரம் மூன்று முறை மட்டுமே கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான கால்சியம் சத்து வயிற்று வலி உண்டாகக் காரணமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் குட்டி நாய்களுக்கு சற்று அதிகப்படியான கவனத்துடனே கொடுக்க வேண்டும். டாக்டரிடம் வாரம் எத்தனை முறை கொடுக்கலாம் என்று கேட்டறிந்து கொடுப்பது நல்லது.
அதேபோல் இந்த கால்சியம் பவுடரை நீங்கள் தாவரங்களுக்கும் உரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.