PM கிசான் திட்டம்: ஒரே குடும்பத்தில் எத்தனை விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்கும்?

PM Kisan
PM Kisan

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் பிஎம் கிசான் நிதித் திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் விண்ணப்பிக்க முடியுமா என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் (PM Kisan). இத்திட்டத்தின் படி, விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 16 தவணைகளில் ரூ.2,000 என, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இம்முறையில் பயன்பெற விவசாயிகள் eKYC செய்வது கட்டாயமாகும். இந்நிலையில் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருந்தால், இவர்கள் அனைவருக்கும் பிஎம் கிசான் நிதி கிடைக்குமா என விவசாயிகள் பலருக்கும் சந்தேகமாக உள்ளது.

விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் விண்ணப்பிக்கவும், ஆண்டுதோறும் நிதியுதவி பெறுவதற்கும் சில தகுதிகளை மத்திய அரசு வரையறை செய்துள்ளது. ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது. மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், குடும்பத்தினர் அனைவரும் பயன் பெறலாம் என்ற சலுகையை வழங்கி உள்ளது. இருப்பினும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதியானது கணவன் அல்லது மனைவி ஆகிய இரண்டு பேரில் ஒருவருக்கு மட்டுமே உள்ளது.

குடும்பத்தில் உள்ள இருவருமே பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தனித்தனியாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவியைப் பெற முடியாது. இந்த 6,000 ரூபாய் நிதி என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய அனைவரும் உள்ளடங்கிய முழுக் குடும்பத்திற்கும் சேர்த்து தான் வழங்கப்படுகிறது. இதில் கணவன் விண்ணப்பித்து நிதியுதவி பெற்று வந்தால், மனைவிக்குத் தனியாக நிதியுதவி கிடைக்காது. இருப்பினும் சில குடும்பங்களில் கணவன் இன்றி மனைவியே குடும்பத் தலைவராக இருப்பார். இப்படியான சூழலில் மனைவியே விண்ணப்பித்து பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெறலாம்.

இதையும் படியுங்கள்:
சைக்கிளை ஏர்க்கலப்பையாக மாற்றிய புதுமை விவசாயி ரமேஷ்!
PM Kisan

இணையதளம்:

pmkisan.gov.in என்ற இணையதளத்தில் பிஎம் கிசான் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்:

1. பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் நிலப் பட்டாதாரராக இருக்க வேண்டும்.

2. அரசுப் பணியாளராக இருக்கக் கூடாது.

3. மாத ஓய்வூதியம் வாங்குபவராக இருக்கக் கூடாது.

4. தொகுதி IV ஆம் பணியில் இருந்து ஓய்வு பெற்று ரூ.10,000-க்கும் குறைவாக ஓய்வூதியம் வாங்குபவர்கள், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

5. மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் வழக்குறைஞர்கள் போன்ற தொழில் செய்பவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

6. விண்ணப்பிக்கும் விவசாயிகள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக் கூடாது.

7. அரசுக்கு வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.

தகுதிகள் இன்றி தவறுதலாக பதிவு செய்யும் விவசாயிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com