
காற்றே உனக்குத்தான்
கவினுலகில் எத்தனைபெயர்!
கொண்டலென்றும் கோடையென்றும்
வாடையென்றும் தென்றலென்றும்…
வகைவகையாய் உன்னை
வாழ்த்தும் இச்சமுதாயம்!
கதிரவன் உதிக்கும்
கிழக்கிலிருந்து நீ
கிளம்பி அடிக்கையில்
கொண்டல் ஆகின்றாய்!
சூரியன் மறையும்
மேற்கிலிருந்து நீ
மெலிதாய் வருகையில்
கோடை என்றே
கூப்பிடப் படுகிறாய்!
வடக்கிலிருந்து நீ
குளிருடன் கூட்டணி
அமைத்தே வருகையில்
வாடை ஆகிறாய்!
தெற்குத் திசையிலிருந்து…
இதமாய் மிதமாய்
இன்பந் தந்தே…
உடலை வருடி
உள்ளத்தைக் கிள்ளி…
தேனாய் மெல்ல
ஊர்ந்திடும் போது…
தென்றலாகி மகிழ்விக்கின்றாய்!
நதியில் விளையாடிக்
கொடியில் தலைசீவி
நடக்கும் இளந்தென்றெலென்று
உனக்கு இலக்கணம்
உரைத்தார் கவிஞர்!
நாட்டு நடப்பில்
நல்லது குறைகையில்
வெறுப்பாய் நீயும்
அடிக்கிறாய் புயலாய்!
கோபம் கொண்டால்
கொப்பளித்து நீயும்
சூறைக் காற்றாய்
மாறியே விடுகிறாய்!
உனது வேகம்
கணக்கிடப் பட்டே
உனக்குப் பலபெயர்
சூட்டினர் அறிஞர்!
காற்றாய் அவனும்
பறந்திட்டா னென்றே
உந்தன் சுறுசுறுப்பை
ஊரிங்கு மெச்சும்!
புயலாய் அவனும்
புகுந்தான் என்று
கூறலும் உண்டு!
மணலுடன் நீயும்
கூட்டணி போட்டால்
புழுதிக் காற்றென்றே
புகல்வார் உன்னை!
ஆடி மாதம்
ஆழமாய் நீயும்
அடித்தே நொறுக்க…
அம்மியைக் கூடப்
பறக்க வைத்திடும்
பலம் உனக்குண்டென்று
சொல்லியே வைத்தார்
எங்கள் முன்னோர்!
அந்த வேகத்தை
அடிக்கடி நீயும்…
ஆலமரங்களையும் அடியோடுசாய்த்து
மெய்ப்பித்துக் காட்டுவதுண்டு!
ஆண்கள் அனைவரும்
அன்புக் காதலியரை…
தென்றலே என்று
விளிப்பதே வாடிக்கை!
தென்றலாய் வருகையில் நீ
தெவிட்டுவதே இல்லை!
உந்தன் ஓட்டம்
உள்ளிருக்கும் வரைதான்…
உடலுக்கு இங்கு
உண்டு பெருமை!
இடத்தை நீயும்
காலி செய்தால்…
எல்லாம் முடிந்திடும்!
எலும்பும் எரிந்திடும்!
காற்றே உனக்குத்தான்…
உயிரை நிறைக்கவும்
உடலை வளர்க்கவும்
உண்டிங்கு சக்தி!