மாம்பழம்
மாம்பழம்https://www.herzindagi.com

பூர்ணகும்பத்தில் மாவிலை வைக்கப்படுவதன் காரணம் தெரியுமா?

ஜூலை 22, தேசிய மாம்பழ தினம்
Published on

1987ம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் டெல்லியில் இந்திய தேசிய தோட்டக்கலை வாரியத்தின் சார்பாக சர்வதேச மாம்பழத் திருவிழா ஜூலை 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது வெறும் பழம் மட்டுமல்ல, கலாசாரம் மற்றும் வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளது.

மாம்பழங்கள் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. தமிழில் வழங்கும், ‘மாங்காய்"’ என்ற சொல்லில் இருந்துதான் ‘மாங்கோ’ (Mango) என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. இது தவிர, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலும் இந்த தமிழ்ச் சொல்லை தழுவியே இப்பழம் அழைக்கப்படுகிறது.

பௌத்த துறவிகள் மாம்பழத்தை மலேசியா, கிழக்கு ஆசியாவில் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. புத்தர் ஒரு மா மரத்தின் குளிர்ந்த நிழலில் தியானம் செய்ததாகப் புராணக்கதை கூறுகிறது. இதனால்தானோ என்னவோ பெளத்தர்கள் மாம்பழத்தை விரும்பி உண்ணுகிறார்கள்.

இந்தியாவை ஆண்டு வந்த மொகலாயர்கள் மாம்பழப் பிரியர்கள். பாபருக்கு  மாம்பழம் தவிர வேறு எந்த இந்திய பழங்களும் பிடிக்காது. அக்பர் தனது நாட்டு பிரஜைகள் மாம்பழ மரங்கள் வளர்க்க ஊக்குவித்தார். அதோடு, தனது அரண்மனையில் ஆயிரக்கணக்கான மாமரங்களை வளர்த்தார். இந்திய தேசிய கீதம் தந்த இரவீந்திரநாத் தாகூர் ஒரு மாம்பழ பிரியர். தனது பிரசித்தி பெற்ற சாந்திநிகேதனில் வகுப்புகளை மா மரங்களின் கீழேதான் நடத்தினார்.

இந்தியாவில் வணிகம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்களை மாம்பழங்கள் கவர்ந்தன. அவர்கள் பல புதிய வகைகளை உருவாக்கினார்கள். அதில் புகழ் பெற்ற ஒன்றுதான். ‘கோவா’ மாம்பழம். அதேபோல், பிரெஞ்சுக்காரர்கள் உருவாக்கியதுதான் ‘அல்போன்சா,’ இதை மாம்பழ மன்னன் என்கிறார்கள். இந்தியாவின் தேசிய மாம்பழம் கூட அல்போன்சா மாம்பழம்தான்.

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற மாம்பழ வகையான மல்கோவா, நீலம் வகை மாம்பழங்கள் பற்றிய குறிப்புகள் இராமாயணத்தில் உள்ளது. மாம்பழங்களில் ஏறத்தாழ 1500 வகைகள் உள்ளன. அவற்றில் 1200 வகைகள் நம் நாட்டில் உள்ளன. இந்தியாவில் மாம்பழங்கள் அதிகம் விளைவது உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான், தாஷேரி வகை மாம்பழ மரம் ஒன்று லக்னோவில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக மாங்கனிகளை வழங்கி வருகிறது.

பூரண கும்ப கலசம்
பூரண கும்ப கலசம்

இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ள மாம்பழங்கள் உலகப்புகழ் பெற்றவை. அவற்றில் சில தமிழ்நாடு - மல்கோவா, ஆந்திரா - பங்கனபள்ளி, கர்நாடகா - பாதாமி, நீலம், மகாராஷ்டிரா - அல்போன்சா, குஜராத் - கேசர், மேற்கு வங்காளம் - கோகினூர், உத்தரப்பிரதேசம் - சேசா.

மாமரம் 35 முதல் 40 மீட்டர் உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாக இருக்கும். இவை 15 முதல் 35 செ.மீ நீளமும், 6 முதல் 16 செ.மீ. அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. மிதமான இனிய மணத்தையும் கொண்டது. பூ பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் கிடைக்கின்றன. மாமரம் காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
உடலில் கால்சியம் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்! 
மாம்பழம்

புதுமனை புகு விழா மற்றும் திருமண விழாவில், மாவிலையைப் பூரண கும்பத்தில் வைத்து வழிபடுவதை பார்த்திருப்பீர்கள். மற்ற எல்லாவற்றையும் விட மாவிலைக்கு ஏன் இந்த மரியாதை? தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி மாவிலைக்கு அதிகம். ஒரே ஒரு மாவிலையை நோய்க்கிருமிகள் இருக்கும் தண்ணீரில் ஊற வைத்து, அரைமணி நேரம் கழித்து தண்ணீரை சோதித்துப் பார்த்தால் எண்பது சதவீத நோய்க்கிருமிகள் இறந்து போயிருப்பதைக் காணலாம். மாவிலையில் ஊறவைத்த கலசத்திலுள்ள தண்ணீரை தெளித்தால் தண்ணீர் தெளித்த இடம் கிருமி இல்லாமல் சுத்தமாகி விடும்.

மாவிலை கொழுந்தை எடுத்து, காய வைத்து பொடி செய்து, 3 விரல் அளவு உணவுக்கு முன்னால சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மாவிலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் கலந்து குடிக்க தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும். மாவிலையை தீயிலிட்டு அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தால் தொண்டைக் கமறல், விக்கல் சரியாகும். மாவிலைய சுட்டு சாம்பலாக்கி வெண்ணெயில் குழைத்து தீப்புண் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் புண் குணமாகும்.

மாவிலைச் சாறுடன் தேன், பால் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து அருந்தினால் இரத்தத்துடன் பேதியாவது நிற்கும். மாவிலையை மென்று வந்தால் ஈறுகள் பலமாகும். மாவிலையின் நடுநரம்பை மைபோல் அரைத்து இமை மேல் வரும் பருக்கள் மீது தடவினால் அவை குணமாகும். உலர்ந்த  மாம்பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும்.

logo
Kalki Online
kalkionline.com