விலை மதிப்பற்ற முட்டை ஓடும், பயன்படுத்திய காபி தூளும்!

Egg shells using for coffee
Egg shells using for coffee

- தா. சரவணா

இப்போது காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்கி வரும்போதே, எந்தெந்த காய்கறியில் எந்த அளவு பூச்சிக்கொல்லி மருந்து இருக்கும் என மனம் எடை பார்க்கத் தொடங்கிவிடுகிறது. ஏனெனில், அதிக விளைச்சலுக்காக அதிகளவு உயிர் கொல்லிகள் தெளிக்கப்பட்டு, காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. அதனால்தான் தக்காளி போன்றவை எத்தனை நாட்களானாலும், அழுகிப் போவதில்லை. ஆனால் நாமோ, நம்மை மெள்ளக் கொல்லும் காய்கறிகளை சூப்பர் தக்காளி என பாராட்டி சான்று மடல் வழங்கி வருகிறோம். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? என்றால் இருக்கிறது.

வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்கலாம். வீட்டின் பின்புறம் காலி இடம் இருந்தால், அங்கு வீட்டுக்குத் தினம்தோறும் தேவைப்படும் காய்கறிகளை நாமே விளைவித்துக்கொள்ளலாம். ஆனால், நாமோ, வாஸ்துபடி, வீட்டை இடித்துக்கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, இதற்கு காட்டுவதில்லை. அதனால் வாஸ்து சாஸ்திரம் சொல்பவர்கள் இனியாவது, வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் ஈசானிய மூலை, குபேரன் மூலை என அடையாளப்படுத்தும்போது, கண்டிப்பாக காலி இடத்தில் காய்கறித் தோட்டம் கண்டிப்பாக அமைக்க வேண்டும் எனக் கூறத் தொடங்கினால், மெள்ள, மெள்ள மாற்றம் உருவாகும்!

வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்க, அந்தந்த மாவட்டத்தில் இயங்கிவரும் தோட்டக் கலைத்துறையை அணுகலாம். அவர்கள் அதற்கான பொருட்களை மானியத்திலோ, இலவசமாகவோ வழங்குவார்கள். மேலும், மாடித் தோட்டம் அமைப்பதற்கான சிறந்த ஆலோசனைகளையும் வழங்குவார்கள். இது தவிர்த்து என்னென்ன காய்கறிகள் விளைவிக்கலாம்? அவற்றுக்காக நாம் செய்ய வேண்டியது என்னென்ன? என்பது உட்பட பல அருமையான ஆலோசனைகள் வழங்குவார்கள்.

இதையும் படியுங்கள்:
கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?
Egg shells using for coffee

நாமே வீட்டின் மாடியில் அல்லது பின்புறம் தோட்டம் அமைத்துவிட்டால், நம் வீட்டில் பயன்படுத்தும் சிறிய அளவிலான பொருட்களைக்கொண்டே உரம் தயாரிக்க முடியும்.

நாம் அன்றாடம் சாப்பிடும் வாழைப்பழத் தோலை, தூக்கி எறியாமல், அதை சிறிய துண்டுகளாக்கி, செடி நடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி புதைத்து விட வேண்டும். இதனால், அதில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் நுண் ஊட்டச் சத்துகள் செடிக்கு நல்ல உரமாகிப் போகும்.

அதேபோல கடைகளில் விற்பனை செய்யப்படும் எப்சம் உப்பை, தண்ணீரில் கலந்து, மாதத்துக்கு ஒரு முறை செடிகளுக்கு ஊற்றவேண்டும். அப்போது அதில் உள்ள மெக்னீசியம், செடிகளை நன்கு வளரச் செய்யும்.

பயன்படுத்திய காபி தூளை, தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். இதனால், அதில் உள்ள நைட்ரஜன், மண்ணை வளமாக்கி, செடிகள் நன்கு வளரும்படி செய்யும். அதே நேரம், அதிகளவு காபி தூள் தண்ணீரை ஊற்றினால், அந்த மண்ணில் அமிலத்தன்மை அதிகரித்து, செடியின் வளர்ச்சி பாதிக்கும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

மேலும், தூளாக்கப்பட்ட முட்டை ஓடு, எப்சம் உப்பு சம அளவு கலந்து மண்ணில் இடலாம்.

2 ஸ்பூன் கந்தகமற்ற வெல்லப்பாகை தண்ணீருடன் சேர்ந்து செடிகளுக்கு ஊற்றலாம். அதில் உள்ள கார்போஹைட்ரேட், செடிகளின் வளர்ச்சியைத் துாண்டும். இது ஆர்கானிக் உரக்கடைகளில் கிடைக்கும்.

இனி, வாழைப்பழத் தோல், காய்கறி தோல்கள், காபி பொடி, முட்டை ஓடு என எதையும் வீணாக விட்டெறியாமல் உரமாக்குவோம் மக்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com