ஆண்டு முழுவதும் லாபம் கிடைக்கும் முருங்கை இலை உற்பத்தி!

Drumstick Leaf
Drumstick Leaf
Published on

முருங்கைக் காய்க்கு இருக்கும் அதே டிமாண்ட் முருங்கை இலைக்கும் இருக்கிறது. ஆகையால் தான் கடந்த சில ஆண்டுகளாக முருங்கை இலை உற்பத்தியில் விவசாயிகள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முருங்கை இலையை உலர்த்தி, பொடி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் அதிக இலாபம் கிடைக்கும் முருங்கையை அடர் நடவு முறையில் விவசாயம் செய்து எப்படி இலாபம் பார்ப்பது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

தென்னிந்திய மாநிலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முருங்கையும் ஒன்று. இதன் இலை மற்றும் காய் உணவுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. முருங்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளின் நல்வாழ்விற்காக மதுரையில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் தொடங்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய் சீசனில் மட்டுமே கிடைக்கும். ஆனால் முருங்கை இலை அப்படி அல்ல. ஆண்டு முழுவதும் முருங்கை இலையை அறுவடை செய்து இலாபம் பார்க்க முடியும்.

வட ஆப்பிரிக்காவைத் தாயகமாக கொண்ட முருங்கை, இந்தியாவில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் முருங்கை பயிரிடப்படுகிறது. முருங்கை இலை உற்பத்திக்காக அடர் நடவு முறையில், ஓராண்டுப் பயிராக முருங்கை பயிரிடப்பட்டு வருகிறது. கிராமங்களில் பொதுவாக பலருடைய வீட்டுத் தோட்டங்களிலும் முருங்கை தவிர்க்க முடியாத பயிராக இருக்கிறது‌.

அடர் நடவு முறை:

முருங்கையில் இலை உற்பத்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடவு செய்யும் முறை தான் அடர் நடவு முறை. இதில் சாகுபடி செய்யும் நிலத்தினை 60 செ.மீ. ஆழத்திற்கு ரோட்டரி கலப்பையைக் கொண்டு உழுதல் வேண்டும்‌. இதன் காரணமாக அதிக வேர் வளர்ச்சி உண்டாவது மட்டுமின்றி, நீர் வடியும் தன்மையும் அதிகரிக்கும். இப்போது 45×45 செ.மீ. இடைவெளி விட்டு முருங்கை நாற்றுகளை நட வேண்டும். மேலும் இதற்குத் தேவையான உரங்களையும் இட வேண்டும். முருங்கைச் செடிகள் சுமார் 50 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்ததும், நிலத்திலிருந்து 15 முதல் 20 செ.மீ. வரை இலைகளை கவாத்து முறையில் வெட்டி விட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனிதன் வாழ முருங்கை மரமும் எருமையும் பசுவும் போதுமே!
Drumstick Leaf

முதல் ஆண்டில் மட்டும் 20% முதல் 30% வரையிலான நாற்றுகள் சேதமடைய வாய்ப்புண்டு. ஆனால், அதன் பிறகு செடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். ஒரு ஆண்டிற்கு 9 முறை அறுவடை செய்து முருங்கை இலைகளை விற்கலாம். அதாவது ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு 650 டன் முருங்கை இலையை நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.

முருங்கை இலைகளுக்கு உள்ளூர் சந்தையிலும், வெளிநாட்டுச் சந்தையிலும் நல்ல மவுசு இருப்பதால் நல்ல விலைக்குப் போகும். முருங்கை விவசாயிகள் இதோடு நிறுத்தி விடாமல், முருங்கையில் மதிப்புக் கூட்டுதலையும் தெரிந்து கொண்டு, அதனை பின்பற்றினால் மேலும் லாபம் காண முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com