நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேடலில் பெட்ரோல், டீசல் போன்ற புதைப்படிவ எரிபொருட்களுக்கு மாற்றாக சிறந்து விளங்குகிறது சூரிய ஆற்றல் மூலங்கள். இந்த சூரிய ஆற்றலை உருவாக்குவதில் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து முன்னேறி வருவதால், அதன் நன்மை தீமைகள் இரண்டையும் நாம் ஆராய்வது மிக முக்கியம்.
சூரிய சக்தியின் நன்மைகள்:
சூரிய ஆற்றல் முழுவதும் சூரியனின் கதிர்வீச்சில் இருந்து பெறப்படுவதால் இதன் மூலமாக ஒரு எல்லையற்ற மற்றும் நிலையான ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது. பெட்ரோல் டீசல் போலில்லாமல் சூரிய ஆற்றல் உற்பத்தியில் தீங்கு விளைவிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளியேறுவதில்லை.
சூரியன் ஒரு மிகப்பெரிய ஆற்றல் வளமாகும். இது நாம் நம்ப முடியாத அளவிலான ஆற்றலை தொடர்ந்து வழங்குகிறது. சரியான உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மூலமாக இந்த வரம்பற்ற ஆற்றல் மூலத்தை நாம் நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சூரிய ஆற்றலானது தனிநபர், ஒரு சமூகம் மற்றும் முழு நாட்டுக்கே தேவையான ஆற்றலை பூர்த்தி செய்ய உதவுகிறது. நாம் ஒவ்வொருவரும் வீட்டின் மேற்கூரைகளிலும் சோலார் பேனல்கள் அமைப்பது மூலமாக மின் கட்டணங்களை சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும். குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இதன் மூலமாக மின்சாரம் கிடைக்கும்.
சோலார் பேனல்களை நிறுவுவதற்கான ஆரம்ப முதலீடு அதிகமாக இருந்தாலும், இது நீண்ட கால அடிப்படையில் நிதி நன்மைகளை வழங்குகிறது. சோலார் பேனல்கள் குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்டதாகும், மேலும் அதன் மூலமாக நாம் உற்பத்தி செய்யும் கூடுதல் மின்சாரத்தை விற்பனை செய்து பயன்பெறலாம்.
சூரிய சக்தியின் தீமைகள்:
சூரிய மின் உற்பத்தி, எந்த அளவுக்கு சூரிய ஒளி கிடைக்கிறது என்கிற தன்மையைக் கொடுத்து செயல்படும். அதாவது பகல் நேரங்களில் சூரிய ஒளி அதிகம் இருக்கும் என்பதால், அதன் உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும். இரவு நேரங்கள், மேகமூட்டமான நாட்கள் மற்றும் பருவ கால மாற்றத்தில் அதிக சூரிய வெளி இல்லாத நேரங்களில், அதன் ஆற்றல் குறைகிறது.
குறிப்பாக இதை நிறுவுவதற்கு ஆரம்ப கால செலவுகள் அதிகமாக இருப்பதால், பலருக்கு சோலார் பேனல்களை நிறுவுவது தடையாக இருக்கிறது. இருப்பினும் இத்தகைய சோலார் பேனல்களை ஒருமுறை நிறுவிவிட்டால் காலம் செல்லச்செல்ல அதன் பலனை நீங்கள் அனுபவிக்கலாம்.
சோலார் பேனல்களை நிறுவுவதற்கு குறிப்பிடத்தக்க நிலம் அல்லது மேற்கூரை தேவைப்படுகிறது. பெரிய அளவிலான சோலார் பேனல்கள் விவசாயப் பணிகளை ஆக்கிரமித்து நிலப் பயன்பாட்டை மோசமாக்கி வாழ்விடத்தை சீர்குலையச் செய்யும்.
செயல்பாட்டின் அடிப்படையில் சூரிய ஆற்றல் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுதான் என்றாலும் சோலார் பேனல்களை உற்பத்தி செய்தல் மற்றும் அதன் கழிவுகள் எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தும். சோலார் பேனல்களை உற்பத்தி செய்யும்போது பல்வேறு வகையான ரசாயனங்கள் மற்றும் பூமியில் இருந்து கிடைக்கும் அரிய உலோகங்கள் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும். இதனால் பூமியின் வலம் குறைந்து மாசுபாட்டை உண்டாக்கும் கவலையை அதிகரிக்கிறது.