
ஆக்சிஜனை அதிக அளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்தபடி புங்க மரம்தான். வெயில் காலத்தில் குளிர்ச்சி தரக்கூடியது. நிழல் தரும் மரங்களில் சிறந்தது. இவற்றின் இலைகள் சிறிதானவை. அடர்த்தியானவை. இம்மர இலைகள் ஊடுருவும் காற்றை தடுக்காமல் நன்றாக அசைத்து விடுவதால் அதன் சுற்றுச்சூழலை குளிர்ச்சியுடன் வைக்கிறது. இம்மரம் பருவ காலத்திற்கு ஏற்றவகையில் தன்னை வளர்த்துக் கொள்ளும் தன்மை உள்ளது.
இதன் கொத்து கொத்தாக பூக்கள் தேன் சொரிந்து இருப்பதால் இவை பூக்கும் காலங்களில் வண்டுகளுக்குக் கொண்டாட்டம் தான். பூக்கள் வெள்ளை நிறத்தில் மல்லிப் பூ போன்று காணப்படும். இதன் காய்களில் 2 விதைகள் காணப்படும். பச்சை நிறத்திலிருந்து முதிர்ந்த நிலையில் பொன்மஞ்சள் நிறத்திற்கு மாறி கீழே விழும். புங்கை விதை ஆமணக்கு போன்று எண்ணெய் தன்மை கொண்டவை. இவற்றின் எண்ணைகள் பயோ சக்தி கொண்டவை. இது பயோடீசல் ஆகவும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
புங்கை மரத்தின் இலைகள், வேர்கள் மட்டை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை.
புங்க வேர்
வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழு வைத்த புண்களை ஆற்றும். பற்களை சுத்தப்படுத்தவும், ஈறுகளை பலப்படுத்தவும் பயன்படும்.
புங்கை வேரை அரைத்து விதை வீக்கத்திற்கு பற்று போட வீக்கம் குறையும்.
புங்க வேரை பொடி செய்து மூன்று வேளைகள் உட்கொள்ள இருமல் குணமாகும்.
புங்கைவேர், மிளகு, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சமமாக அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலிக்கடியால் ஏற்படும் விஷம் முறியும்.
புங்க இலை
புங்க இலையை நீரில் இட்டு குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தம் சரியாகும்.
புங்க இலையை நீரில் கொதிக்கவைத்து அதில் குளிக்க கீல் வாத நோயாகும் கட்டுப்படும்.
புங்க இலை வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.
புங்க இலையை மஞ்சள் பொடியுடன் கொதிக்க வைத்து வடிகட்டி துணியில் வைத்து அரிப்பு உள்ள இடங்களில் தடவலாம்.
புங்க இலை அக்கி, புண் மற்றும் அம்மை கொப்பளங்கள் ஐ நீக்குகிறது.
புங்க இலையை மஞ்சள் சேர்த்து தேனீராக குடிக்க மூலம் சரியாகும்
புங்க இலையின் சாறைப்பிழிந்து குடிக்க அல்சர் சரியாகும்.
புங்க மரத்தின் பால் பொன் போன்ற நிறத்தைத் தரும்.
புங்கப் பூ
நீரிழிவு நோய்க்கு மருந்தாகும். புங்கப் பூ கஷாயம் செய்து குடிக்கலாம்.
புங்கைப் பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்தும் பொடி செய்து ஒரு சிட்டிகை காலை மாலைதேனில் கலந்து உட்கொள்ள மதுமேக ரணங்கள் தீரும்.
புங்க விதைகள் பொடி
இதை தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கக்குவான் இருமல் பாதிப்பின் போது 1முதல் 5அரிசி எடை கொடுக்க குணமாகும்.
புங்க எண்ணை சரும நோய்களுக்கு சிறந்த மருந்து.
காற்றில் வெப்பத்தையும் மாசுவையும் குறைக்கும் தன்மை உள்ளது புங்கை. நாம் அழகுக்காக மட்டுமல்லாமல் இது போன்ற ஆரோக்கியம் தரும் புங்கையையும் வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்.