
உலகில் பல அதிசயங்கள் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இயற்கையாக நிகழும் விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அது அதிசயங்களாகத்தான் தெரிகின்றன. அந்த வகையில், இந்த பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் சில பிறக்கும்போதே அதிசய உருவத்தைக் கொண்டுள்ளன. அப்படி அதிசிய உருவத்தை கொண்ட உலகின் மிக சிறிய பசு எது தெரியுமா? அதைப் பற்றிய பதிவுதான் இது.
பொதுவாகவே, பறவைகள் மற்றும் விலங்குகள் பிறக்கும்போது அதன் இனத்தின் தோற்றத்தில்தான் பிறக்கும். எடுத்துக்காட்டாக உலகில் மிக சிறிய பறவை, பீ ஹம்மிங் (Bee Hummingbird) பறவையாகும். கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. இந்த பீ ஹம்மிங் பறவை இனங்கள் அனைத்துமே சிறியதாகத்தான் இருக்கும்.
பசுக்களை விலங்குகளாக மட்டுமல்ல, தெய்வங்களாகவும் நாம் நேசிக்கிறோம். அப்படிப்பட்ட பசுக்களில், புங்கனூர் மாடுகள் உலகின் மிகச் சிறிய பசுக்களாகக் கருதப்படுகின்றன. இதன் சராசரி உயரம் 70 - 90 செ.மீ, சராசரி எடை 150 - 200 கிலோ வரை இருக்கும்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாடுகள் நாடு முழுவதும் பிரபலமடைந்தவை. புங்கனூர் மாடுகள் முதலில் புங்கனூர் ராஜாக்களால் (அரசர்களால்) பாலுக்காகவும் சிறிய விவசாயப் பணிகளைச் செய்யவும் வளர்க்கப்பட்டன. 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட ஓங்கோல் கால்நடைகளின் வழித்தோன்றல்கள் என்று நம்பப்படுகிறது.
ஆனால் வங்காள தேசத் தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவரின் வேளாண் பண்ணையில் கடந்த 2021-ல் பிறந்த ஒரு பசுவின் பெயர் 'ராணி'. இந்த பசு வளர்ந்த பின்பும், 66 சென்டிமீட்டர் நீளமும் 26 கிலோ கிராம் எடையுமே கொண்டு புங்கனூர் பசுவின் உயரம் மற்றும் எடையைவிட மிக குறைவாகவே இருக்கிறது. அதனால் உலகின் மிக சிறிய பசு என்றும் சொல்லப்பட்டது. கொரோனா அலை தாக்கப்பட்டக் காலத்திலும், இந்த 'ராணி' பசுவைக் காண கிட்டத்தட்ட 15,000 பேர் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது 'ராணி'.