அழிந்துவரும் உயிரினப் பட்டியலில் முதலிடம் பெறும் புனுகுப் பூனைகள்!

Bunukup cat
Bunukup cat
Published on

புனுகுப் பூனைகளில் 12க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் ஆப்பிரிக்க புனுகு பூனைகள்தான் மிகவும் பிரபலமானவை. இந்தியாவிலும் பல வகையான புனுகுப் பூனைகள் உள்ளன. நம் நாட்டில் கேரளாவிலும், கர்நாடகத்திலும் மலபார் புனுகுப் பூனைகள் சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மலபார் வகை புனுகுப் பூனை ஆப்பிரிக்க வகையைப் போலவே பெரியது. இப்பூனைகள் காடுகளின் விதை பரவலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன.

சிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் நிறத்தில் காணப்படும் மலபார் புனுகுப் பூனைகள் அடர்த்தியான வாலுடன், பின்பக்கம் உள்ள முடிகள் சிலிர்த்து காணப்படுவது இவற்றின் தனி அடையாளமாக விளங்குகிறது. பூனை போன்ற தோற்றம் கொண்டவையானாலும் இவற்றின் மூக்கு, வாய் பகுதிகள் நீண்டு கீரிப்பிள்ளையைப் போல் காணப்படும்.

மலபார் வகை புனுகுப் பூனைகள் ஆப்பிரிக்க வகை புனுகுப் பூனையைப் போல பெரியது. சுமார் நான்கு அடி வரை காணப்படும் இதன் எடை நான்கரை கிலோ வரை இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள்தான் இவற்றின் வாழ்விடம். புனுகுப் பூனை தமிழகத்தில் மரநாய் என்கின்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

புனுகு என்பது அதன் கழிவிலிருந்து பெறப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் புனுகு என்பது அதன் வால் பகுதியில் இருக்கும் இரண்டு சுரப்பிகளில் சுரக்கும் ஒருவகையான வாசனை கலந்த திரவமே புனுகு. பிசின் போன்ற இந்த திரவம்தான் இவற்றின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது.

பூனை வகைகளில் மலபார் பூனைகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் முதல் இடம் பெறுகிறது. இவை இரவில் இரை தேடும். சின்னஞ்சிறு விலங்குகள், சிறிய பறவைகள், அவற்றின் முட்டைகள், வேர்க்கிழங்குகளை உணவாக இவை உண்ணும். தனிமை விரும்பிகளான இவை எதிரியைக் கண்டால் தாக்கும் இயல்புடையவை. இவற்றை வாசனை திரவியத்திற்காகவும், சிலர் உணவிற்காகவும், புகையிலை பொருட்களுக்கு வாசனை கூட்டவும், மருந்துக்காகவும்  வேட்டையாடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
விரல்களில் நெட்டி முறிப்பதில் உள்ள பிரச்னைகள் தெரியுமா?
Bunukup cat

அரிய வகை விலங்கான இந்த புனுகுப் பூனைகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். காடுகளை அழித்து கட்டடங்களை உருவாக்குவது இவற்றின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. எனவே. இவை சமவெளி பகுதிகளுக்கு வந்து அடர்ந்த முந்திரி தோப்புகள், நீர் நிலைகளின் ஓரம் உள்ள குறுங்காடுகளில் தஞ்சமடைகின்றன.

லூவா (Luwak) எனும் உலகின் விலை உயர்ந்த காபி புனுகு பூனைகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காபி பழங்களை சாப்பிடும் இந்தப் பூனைகள் அதன் கொட்டைகளை விழுங்கி விடுகின்றன. பிறகு அவை கழிவுகள் மூலம் வெளியேறும். அப்படி வெளியேறிய கொட்டைகளை சுத்தம் செய்து பதப்படுத்தி காபி தூளாக பயன்படுத்துகிறார்கள். வெளிநாடுகளில் இவ்வகை காபித்தூளின் விலை ஒரு கிலோ 20,000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com