உங்களில் பலர் நிச்சயமாக விரல் சொடுக்குவதை (நெட்டி முறிப்பதை) வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு விரல்களின் முனையை நீட்டி இழுத்து சிலர் சொடுக்கு எடுக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் முட்டியை இறுக்கமாக மூடி அல்லது ஐந்து விரல்களையும் பின்னோக்கி வளைத்தோ நெட்டி முறிக்கிறார்கள். இன்னும் சிலர் மனக்கலக்கம் அல்லது அமைதியின்றி இருக்கும்பொழுது சொடுக்குவதை அதிகமாகச் செய்து, இதனால் அவர்களுக்கு அமைதி ஏற்படுகின்றது என்று கூறுகின்றார்கள். 25 முதல் 54 சதவீத மக்கள், அதிலும் குறிப்பாகப் பெண்களை விட, ஆண்களே அதிகமாக நெட்டி முறிக்கின்றார்கள். சரி, அதெல்லாம் இருக்கட்டும், நெட்டி முறிக்கும்போது சத்தம் எதனால் ஏற்படுகின்றது என்பதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?
எந்த முறையைப் பயன்படுத்தினாலும், சொடுக்குதலின்போது ஏற்படும் அந்த நொறுங்குதல் போன்ற சத்தம் ஒரே முறையில்தான் உருவாகின்றது. விரல்களை மடக்கியோ அல்லது இழுத்தோ சொடுக்கும்பொழுது, மூட்டு இணைப்புகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி அதிகரிக்கிறது. இதன் காரணமாக முட்டிகளில் உருவாகும் synovial fluid எனப்படும் மூட்டுறை திரவத்தில் கரைந்திருக்கும் வாயுக்களில் நுண்ணிய குமிழிகள் (bubbles) உருவாகும்.
இந்த நுண்ணிய குமிழிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய குமிழிகள் உருவாக, இதன் காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வெளியிலிருந்து கூடுதல் மூட்டுறை திரவம் விரைந்து வரும். இந்தக் கூடுதலாக வரும் திரவம், இடத்தை நிரப்பும் முன்னர் உருவான குமிழிகள் அனைத்தையும் உடைத்து விடுகின்றது. அப்படி உடையும்போது ஏற்படும் அந்தச் சத்தம்தான் உங்களுக்கு விரல்களைச் சொடுக்குதலின்போது கேட்கிறது.
ஒரு முறை உங்கள் விரல்களை சொடுக்கியதும், ஏறத்தாழ அடுத்த பதினைந்து நிமிடத்திற்கு மீண்டும் சொடுக்க முடியாது. இது, விரல் முட்டிகள் மீண்டும் அதன் முந்தைய சீரான அளவுக்கு மூட்டுறை திரவ வாயுக்களில் குமிழி உருவாகவும் வழி செய்கிறது. பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும் மறுபடி சொடுக்கி, மீண்டும் குமிழி உடையும் சத்தத்தைக் கேட்கலாம். இதுதான் நெட்டி முறிக்கும்போது ஏற்படும் சத்தத்தின் ரகசியம்!
பொதுவாக, நெட்டி முறிப்பதால் எந்த ஒரு பிரச்னைகளுமில்லை. ஆனால், அடிக்கடி நெட்டி முறிப்பதால் மூட்டு இணைப்புகளைச் சுற்றி இருக்கும் மெல்லிய சதைகளுக்கு பாதிப்பு இருக்கும். மேலும் இந்தப் பழக்கம் கை வீக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், கையின் பிடிமான தன்மையையும் குறைக்கும். விரல்களில் நெட்டி எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நெட்டி எடுக்கும் நேரத்தில் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.