அலையாத்திக் காடுகள் கடலின் கரையோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்பும் ஆற்றலைப் பெற்றுள்ளன. நிலமும் கடலும் சேரும் பகுதிகளில் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே சிறப்பாக வளர்கின்றன. இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அலையாத்தி காடுகளை ஆங்கிலத்தில், ‘மாங்குரோவ் காடுகள்’ (Mangrove forest) என்று அழைப்பார்கள். அலையாத்திக் காடுகளுக்கு அலையிடைக் காடுகள், தில்லைவனம், கடலோர மரக்காடுகள், கடலின் வேர்கள், சுரபுன்னைக் காடுகள் எனப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.
பொதுவாக, அலையாத்திக் காடுகள் கடலின் முகத்துவாரங்களில் அமைந்திருக்கும். இந்தக் காடுகள் சுமார் அறுபது வகை மரங்களால் ஆனவை. தமிழ்நாட்டில் உள்ள அலையாத்திக் காடுகளில், சுரபுன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், ஆட்டுமுள்ளி, பண்டிக்குச்சி, நரிக்கண்டல், சிறுகண்டல், காகண்டல், தில்லை, திப்பாரத்தை, உமிரி முதலான மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன. கடல் அலைகளின் சீற்றத்தை தடுத்து ஆற்றுப்படுத்தும் தன்மை இந்த மரங்களுக்கு உள்ளன.
அளவுக்கதிகமான உப்புத் தன்மை, ஆக்சிஜன் பற்றாக்குறை, நிலையற்ற பூமிப்பரப்பு முதலான சவால்களை அலையாத்தித் தாவரங்கள் சந்திக்கின்றன. நிலையற்ற பூமிப்பரப்பில் ஊன்றி நிற்பதற்கு ஏற்ற வகையில் அலையாத்தித் தாவரங்கள் அலையாத்தி மரங்களின் கிளைகள் மற்றும் தண்டுகளில் இருந்து வளரும் முட்டு வேர்களை பெற்றுள்ளன.
இந்தியாவில் சுமார் ஐயாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன. இவற்றில் அறுபத்தி ஆறு சதவீதம், மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளிலும் குஜராத் காடுகளிலும் ஆந்திராவிலும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் அலையாத்தி காடுகள் உள்ளன. இராமநாதபுரத்தில் இருந்து தொண்டி செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் சுமார் முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் உள்ள காரங்காடு கிராமத்தில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன.
இதுபோல அந்தமானிலும் ஏராளமான அளவில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. சுந்தரவன அலையாத்திக் காடே உலகின் மிகப்பெரிய காடாகக் கருதப்படுகிறது. திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ள முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும். இதன் மொத்தப் பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட பத்து மடங்கு பெரியது. இவை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகளாகும்.
அலையாத்திக் காடுகள் அதிக வெப்பம் அல்லது அதிக மழை பொழியும் இடங்களில் மட்டுமே வளரும் தன்மை படைத்தவை. கடலோர முகத்துவாரப் பகுதிகள், உப்பங்கழிகள் முதலான பகுதிகளில் இவை வளர்வதற்கு ஏற்ற இடமாக உள்ளன. அலையாத்தி மரங்களின் வேர்கள் நிலத்துக்கு அடியிலும், நிலத்திற்கு வெளியிலும் நிலைபெற்றிருக்கும். இந்த வேர்கள் மண்ணோடு பின்னிப் பிணைந்து காணப்படும்.
அலையாத்திக் காடுகள் அரிய வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன. அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள் மணலை இறுகச் செய்து கடல் சீற்றம் ஏற்படும் வேளையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. சுமார் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வரும் புயல் காற்றை தடுத்து நிறுத்தும் ஆற்றல் அலையாத்திக் காடுகளுக்கு உண்டு. 2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலைக்கு பின்னரே அலையாத்திக் காடுகளைப் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.