அணுவை சிதைக்க மற்றும் அறிவியல் ஆய்விற்காக ஆய்வுக்கூடங்களில் ஏராளமான கதிரியக்க ஓரகத் தனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் கழிவுகள் வெளியேற்றப்படும்பொழுது அவை உணவு சங்கிலி வழியே சென்று என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை இப்பதிவில் காண்போம்.
கதிரியக்க மாசு: வெப்ப அலைகளை பூமியில் உமிழும் தன்மை வாய்ந்த அணுக்களால் ஏற்படுவது 'கதிரியக்க மாசு' எனப்படுகிறது. ரேடியம், யுரேனியும் போன்ற மூலங்களிலிருந்து தானாகவே வெளிப்படும் வெப்ப கதிர்கள் ஆல்பா பீட்டா மற்றும் காமா என்று அழைக்கப்படுகின்றன. அணுக்களில் இருந்து வெளியேறும் வெப்ப கதிர்கள் பௌதீக ரசாயனம் மற்றும் உயிரியல் முறைகளால் அழிக்கப்பட முடியாதவை.
மாசுவின் மூலங்கள்: வானிலிருந்து வரும் மின்காந்த நுண் அலைகளின் கதிர்வீச்சும், பூமிக்கு அடியில் உள்ள ரேடியம், யுரேனியம், தோரியம், பொட்டாசியம், கார்பன் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சும் இயற்கையான கதிர்வீச்சு மாசுகள் ஆகும். ப்ளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றை சுரங்கங்களின்றும் தோண்டி எடுத்து மெருகூட்டும்பொழுதும், அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்யும்பொழுதும், அணு ஆற்றல் தொழில் கூடங்களை இயக்கும் பொழுதும் கதிரியக்க ஒரகத் தனிமங்களை தயாரிக்கும் பொழுதும் கதிரியக்க மாசு பரவுகிறது .
அணு ஆயுதங்களை சோதித்துப் பார்க்க அணுகுண்டுகள் வெடிக்கப்படும் பொழுது வெளியேறும் கதிரியக்க பொருட்கள் துகள்களாகி மேலே தொலைதூரத்திற்கு சென்று காற்றோடு கலக்கின்றன. அவை காற்று அல்லது மழை மூலமாகவும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு பூமியின் மேற்பரப்பில் படிகின்றன. இவை உணவு சங்கிலி வழியாக தாவரங்களாலும், விலங்குகளாலும், மனிதர்களாலும் கிரகிக்கப்படுவதால் அவற்றின் அழிவுக்குக் காரணமாகின்றன.
இதேபோல், அறிவியல் ஆய்விற்காக ஆய்வுக்கூடங்களில் கதிரியக்க ஓரகத் தனிமங்களூம் அவற்றின் கூட்டுப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கழிவுகள் வெளியேற்றப்படும்போது அயோடின், பாஸ்பரஸ் போன்ற கதிர் இயக்கப் பொருள்களும் சேர்ந்து வெளியேறி நீர் நிலைகளில் உள்ள நீருடன் கலந்து உணவு சங்கிலியின் வழியே மனித உடலுக்குள் சென்று கேடு விளைவிக்கின்றன.
கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி: தற்போது இக்கழிவுகள் பூமிக்கு அடியில் பாதுகாப்பாகப் புதைக்கப்படுகின்றன. இவை எதிர்பாராதவிதமாக கசிந்து வெளியேறினால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி மனித உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் ஆற்றல் படைத்தவை. இந்த மாசுகள் மழையுடன் சேர்ந்து நிலத்தின் நீரிலும் பூமிக்கு மேற்பரப்பில் உள்ள நீர் நிலைகளிலும் கலந்து அதை பருகுவோருக்கு பலவித உடல் நலக் குறைகளையும் உண்டுபண்ணுகின்றன.
மக்கள் நோய்க்குறி அறிய எக்ஸ்ரே எடுக்கும்பொழுதும் புற்று நோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுக்கும்பொழுதும் கதிர்வீச்சு ஆற்றல் தாக்கத்தைப் பெறுகிறார்கள்.
அணுசக்தி விபத்துக்கள்: உக்ரேனிலுள்ள செர்நோபிலில் 1986ம் ஆண்டு நடந்த அனுமின் உற்பத்தி சாலையில் நடந்த விபத்துதான் உலகின் மிக மோசமான அணு உலை விபத்து. அதனைக் கட்டுப்படுத்த பத்து நாட்கள் ஆயின. அந்த மின் உற்பத்திசாலைக்கு அருகில் வசித்து வந்த மக்கள் 1,16 000 பேர் வெளியேற்றப்பட்டனர். அந்த விபத்து நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் அதன் பின் விளைவால் பாதிப்புகள் பலவும் இன்றும் தொடர்கின்றன.
இதேபோன்ற நிலை வந்து விடுமோ என்று சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கம் அனுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் பய உணர்வு நிலவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி அருகில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிடத்திலும் விபத்து பீதி நிலைகொண்டு உள்ளது.
விளைவுகள்: ஊடு கதிர்கள், மின்காந்த நுண் அலைக்கதிர்கள், அலைக்கதிர் வீச்சலைகள் ஆகியவை மனிதர்களின் செயல்களையும் மாலிக் கூல்களையும் சேதப்படுத்தி குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
வளர்ச்சிதை மாற்றம் பாதிப்பு, திசுக்கள் இழப்பு, உயிரினங்களின் இறப்பு போன்ற குறுகிய கால பாதிப்புகளையும், மரபு மாற்றங்கள், கட்டிகள், புற்றுநோய், குறை வாழ்நாள், சரும வியாதிகள், உணவு குழாய்கள், குடல் எலும்பு, மச்சை, கரு உருவாகி பாதிப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகளையும் அணுக்கதிர்கள் ஏற்படுத்துகின்றன. விலங்குகளும் தாவரங்களும் கதிரியக்க நாசினிகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
கட்டுப்படுத்தும் முறைகள்: அணுகுண்டு சோதனைகளை நன்மைக்காக பயன்படுத்துவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவது உலகப் போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டு வெடிப்பில் இன்று வரை தொடரும் நிலையை மனதில் கொண்டு உலக நாடுகள் முழுவதும் ஒருங்கிணைந்து அணு ஆயுத தயாரிப்பை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
அணுசக்தி ஆய்வுக்கூடங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு சரியான அளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். கதிரியக்க கழிவுகளை அகற்றும்போது அது யாவருக்கும் தீங்கு நேராத வகையில் அழிக்கப்பட வேண்டும். கதிரியக்கப் பொருள்களை பயன்படுத்தும் இடங்களில் அவை வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.