விவசாயத்தை செழிக்க வைக்கும் மழைநீர் அறுவடை!

Rainwater harvesting
Rainwater harvesting
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

விவசாயிகள் வியர்வையை நிலத்தில் சிந்தி உழைத்து பயிர்களை வளர்த்து, அறுத்துப் பயன் பெறும் காலகட்டத்தைத்தான் அறுவடைக் காலம் என்பார்கள். விவசாயிகளின் உழைப்புக்கு பலன் கிடைக்கும் நேரமும் இதுதான். பயிர் அறுவடையின்போது விற்பனைக்காக விளைபொருட்களை சேமித்து வைப்பார்கள். இதே நடைமுறையைப் பயன்படுத்தி நாம் மழை நீரிலும் அறுவடை செய்தால் விவசாயம் செழித்து வளர உதவும். எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

‘மழைநீர் அறுவடை’ என்ற சொல் கூட சிலருக்கு புதிதாக இருக்கலாம். மழைநீர் சேமிப்பு தெரியும்; அது என்ன மழைநீர் அறுவடை. இரண்டிற்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. ஏனெனில், இரண்டின் நோக்கமும் ஒன்றுதான். ஆனால், இந்த செயல்முறை எங்கு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் பலன்கள் மாறுகின்றன. எதிர்காலத் தண்ணீர் தட்டுப்பாட்டைக் குறைக்க அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மழைநீர் சேமிப்பு. வீட்டிற்கு வீடு மழைநீர் சேமிக்க வேண்டும் என அரசு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது, வருகிறது.

இதையும் படியுங்கள்:
இயற்கை துப்புரவுப் பணியாளர்கள் பிணந்தின்னிக் கழுகுகளின் மகத்துவம்!
Rainwater harvesting

மழைநீர் அறுவடை என்பது விவசாய நிலங்களில் மழைநீரைத் தேக்கி வைத்து, நிலத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதாகும். ஒரு சொட்டு மழை நீரையும் வீணாக்காமல் சேமிப்பதன் மூலம் நில வளத்தையும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும்.

மழைநீரை அறுவடை செய்யும் கட்டமைப்புகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பண்ணைக் குட்டை: விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் அரசு மானியத்துடன் பண்ணைக் குட்டைகளை அமைக்கலாம். நிலத்தில் தாழ்வானப் பகுதியைத் தேர்ந்தெடுத்து பண்ணைக் குட்டைகளை அமைப்பது சிறப்பாக இருக்கும். இதில் சேமிக்கப்படும் தண்ணீர் பயிர்களுக்கும், மரக்கன்றுகளுக்கும் உதவியாக இருக்கும். மேலும், இதில் மீன் குஞ்சுகளை வளர்த்து கூடுதல் வருமானத்தையும் பார்க்கலாம்.

சமமட்ட பள்ளம்: மண் அரிப்பைத் தடுக்க வேளாண் பொறியியல் வல்லுநர்களால் சமமட்ட பள்ளம் அமைக்கப்படுகிறது. இதில் சேமிக்கப்படும் நீரால் நிலத்தின் ஈரப்பதம் நெடுநாட்களுக்கு நீடித்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
மலைத் தேனீக்களின் ரகசிய வாழ்க்கை சுழற்சி முறை!
Rainwater harvesting

தண்ணீர் சேகரிப்பு குழி: நீளம் அகலம் இவ்வளவுதான் என்ற கணக்கெல்லாம் இதில் கிடையாது. ஆகையால், இம்முறையில் மழைநீரை அறுவடை செய்வது மிகவும் எளிதாக இருக்கும். இதன் நோக்கமே பெய்யும் மழை நீரை அதே இடத்தில் சேமிப்பதாகும்‌. சிறு குறு விவசாயிகள் தங்களது நிலங்களில் உரக்குழிகள் போல் தண்ணீர் சேகரிப்பு குழிகளை அமைக்கலாம்.

தடுப்பணைகள்: பொதுவாக, பெய்யும் மழைநீரில் 20 முதல் 30 சதவிகிதம் வரை ஓட்டமாகச் சென்றே வீணாகிறது. ஓடி வரும் நீரைத் தடுக்க ஓடைகளின் நடுவே தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். நீர் இங்கு நிறுத்தி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர் வளம் பெருக்கோடு, மண் அரிப்பும் தடுக்கப்படும்.

விவசாயிகள் அனைவரும் மேற்கண்ட முறைகளில் குறைந்தபட்சம் 20 சதவிகித மழை நீரை சேகரித்தால் கூட அதன் பலன் நிலத்திலும், மகசூலிலும் எதிரொலிக்கும். மேகங்கள் நமக்களிக்கும் அமிர்தமாக மழையை வீணாக்காமல் சேகரிப்போம். இளைய தலைமுறை விவசாயிகளுக்கும் இதனை சொல்லிக் கொடுப்போம்‌.

logo
Kalki Online
kalkionline.com