

மழை பெய்தால் போதும், ஈசல்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து நமது வீட்டை நோக்கி பறந்துவரும். அதிலும் லைட் வெளிச்சத்தில் ஈசல்கள் வட்டம் போட்டு பறக்கும். ஈசல்களின் வாழ்க்கை ஒருநாள் என்பது உண்மையா..? பொதுவாக ஈசல்கள் என்றால் என்ன..? எத்தனை வருடங்கள்தான் வாழும்..? இப்படி ஈசல்களைப் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.
ஈசல்களின் வாழ்க்கை முறை:
ஈசல்கள் என்பது கரையான்களின் மாறுபட்ட வடிவமே ஆகும். கரையான்களின் குடும்பத்திலிருந்துதான் ஈசல்கள் வருகின்றன. பொதுவாக கரையான் புற்றில் ஐந்து வகை கரையான்கள் காணப்படுகின்றன.
வேலைக்கார கரையான்: இந்த கரையான்கள்தான் உணவு தேடுவதில் இருந்து, பாதுகாப்பு, பராமரிப்பு, உணவுகளைப் பகிர்வது இப்படி பல வேலைகளை பார்க்கிறது. புற்றுகளில் 90% வேலைக்கார கரையான்கள் தான் இருக்கும். ராணி கரையான், போர் வீர கரையான், ராஜா கரையான் இந்த மூன்று கரையான்களுக்கும் பணிவிடை செய்வது வேலைக்கார கரையான்கள்தான்.
போர் வீர கரையான்கள்: இந்த கரையானுக்கு பெயரிலேயே அர்த்தம் உள்ளது. புற்றை பாதுகாப்பது, எதிரிகளிடமிருந்து கரையான்களை பாதுகாப்பதுதான் இதனுடைய வேலையாகும். போர் வீர கரையான்கள் வேலைக்கார கரையான்கள் உணவு தேடும்போது, ஏதாவது ஆபத்து வருகிறதா என்பதை கண்காணித்துக் கொண்டிருக்கும்! ஆபத்து ஏற்படும் பட்சத்தில் தனது தலையை காய்ந்த இலைகள் அல்லது குச்சிகள் மீது அடித்து ஒலியை எழுப்பி எச்சரிக்கும். அதேபோல் இந்த கரையானுக்கு தலையில் இரண்டு கொடுக்குகளும் இருக்கிறது.
இராஜா கரையான்: இந்த ராஜா கரையான் புற்றில் ஒன்றே ஒன்று தான் இருக்கும். எப்படி தேன் கூட்டில் ஒரே ஒரு இராணி தேனீ இருக்கிறதோ! அதேபோல்தான் கரையான் புற்றிலும் ஒரே ஒரு ராஜா கரையான்தான் காணப்படும். இதனுடைய வேலை முழுக்க முழுக்க இராணி கரையானுடன் சேர்ந்து இனச்சேர்க்கையில் ஈடுபடுவதுதான்.
இராணி கரையான்: இந்த ராணி கரையான்தான் கரையான்களின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20,000 இருந்து 30,000 முட்டைகளை இடுகிறது. உடலமைப்பு 10 சென்டிமீட்டர் அளவில்,உருளை வடிவில் ஒரு பெரிய புழு போல் காணப்படும். இதனால் இந்தக் கரையானால் நகர முடியாது. இதற்கு எல்லா வேலைகளையும் வேலைக்கார கரையான்களே உணவை ஊட்டுவதிலிருந்து, உடலை சுத்தம் செய்வது வரை என்று பார்த்துக் கொள்கிறது.
பறக்கும் கரையான்கள் (ஈசல்): பொதுவாக ஒரு கரையான் புற்றானது முதிர்ச்சி அடைவதற்கு இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். அதாவது அந்த புற்றில் இதற்குமேல் கரையான்கள் தங்க முடியாது என்ற சூழ்நிலை வரும் பொழுது. முட்டையிலிருந்து வெளிவரும் குறிப்பிட்ட லார்வா கரையான்களுக்கு இயற்கையாகவே இறக்கைகள் முளைக்கத் தொடங்குகிறது. அதுதான் பிற்காலத்தில் இராணியாகவோ அல்லது இராஜாவாகவோ மாறுகிறது. இதனால் புற்றில் இருக்கும் கரையான் இனத்தை மற்றொரு இடத்திற்கு கடத்துவதற்காக, இந்த ஈசல்கள் உருவாகிறது. ஈரப்பதமான சூழல் நிலவும்போது ஈசல்கள் புற்றிலிருந்து வெளிவருகின்றன.
ஈசலின் வாழ்க்கை எத்தனை நாள்?
புற்றிலிருந்து வெளிவரும் ஈசல்கள் பொதுவாக வெளிச்சத்தை நோக்கி வருகின்றன. மழை பெய்த அன்றிரவே ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கும். இதில் முக்கால்வாசி ஈசல்கள் மற்ற உயிரினங்களுக்கு இரையாகி விடுகின்றன. அதேபோல் கீழே விழுந்தவுடன் அதன் இறக்கைகள் தானாகவே உதிர்ந்து விடுகின்றன. அதன் மூலமும் பறக்க முடியாமல் இறக்க நேரிடுகின்றன. எனவேதான் ஈசல்கள் புற்றிலிருந்து வெளிவந்த ஒன்றோ இரண்டோ நாள்களில் இறந்துவிடுகிறது.
அதையும் மீறி ஆயிரத்தில் இரண்டு என்ற வீதத்தில் ஈசல்கள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டு, அதில் ஒன்று இராணி கரையானாகவும், இராஜா கரையான் ஆகவும் மாறி மண்ணிற்குள் சென்று வாழ தொடங்கும். பிறகு எப்பவும்போல் இராணி கரையானானது முட்டைகளை போடத்தொடங்கும் அப்படியே படிப்படியாக அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் கரையான்கள் வேலைக்கார கரையான், போர்வீர கரையான், ஈசல்கள் என்று உருமாற்றம் அடைகிறது.
இப்படியே கரையான்களின் இந்த வாழ்க்கை சுழற்சியானது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
ஈசல் வாழ்க்கையில் இருந்து தப்பித்து இராணி கரையானாக மாறும் சூப்பர் பவர் கொண்ட கரையான்கள் சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
"அடுத்தமுறை உங்கள் வீட்டு விளக்கின் கீழ் ஈசல்களைப் பார்க்கும்போது, அவை ஒருநாள் விருந்தாளிகள் அல்ல; வருங்கால கரையான் பேரரசின் இராஜாக்கள் மற்றும் இராணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!"