
வீடுகளில் வளர்க்கப்படும் மீன்கள் (Aquarium Fish) அழகு, பராமரிப்பு, எளிமை மற்றும் பிற மீன்களுடன் நல்ல ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன. சிறந்த வளர்ப்பு மீன்களின் வகைகள், அளவில் சிறந்த மீன்கள் மற்றும் மீன் தொட்டி பராமரிப்பு குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கப்பி மீன் (Guppy): இது நிறமிகுந்த, அழகான மீன். பராமரிக்க எளிது. குறைந்த அளவு உணவு மற்றும் நீர் பராமரிப்பால் இவற்றை எளிதில் வளர்க்க முடியும்.
2. மோல்லி மீன் (Molly): அமைதியான இயல்பு கொண்ட இவ்வகை மீன்கள் தாவரங்களுடன் நல்ல ஒத்துழைப்பு, பாச மிகுந்த நிறங்களில் கிடைக்கும்.
3. ப்லாட்டி (Platy): நிறமிகுந்த இவை, குழுவாக வாழ விரும்பும் மீன்கள் ஆகும். இனப்பெருக்கம் செய்ய எளிது. இவை பல்வேறு வெப்பநிலைகளிலும் வசிக்கும் திறன் கொண்டவை.
4. சொர்ட்டெயில் (Swordtail): வாள் போன்ற வால்களைக் கொண்ட மீன்கள் இவை. ஆண் மீன்களுக்கு போட்டி தன்மை இருக்கலாம். இவற்றை குழுவாக வளர்த்தால் நல்லது.
5. டெட்ரா (Tetra): சிறிய, கூட்டமாக நன்கு வாழும் மீன் இனம் இவை. நியான் டெட்ரா, கார்டினல் டெட்ரா போன்றவை இவற்றல் பிரபலமானவை.
6. பெட்டா மீன் (Betta / Fighting Fish): மிகவும் அழகான, வண்ணம் மிகுந்த மீன்கள் இவை. ஆண் மீன்கள் ஒன்றோடொன்று சண்டையிடலாம். தனித்து வைக்க வேண்டும். இவற்றை வளர்க்க குறைந்த பராமரிப்பே தேவைப்படும்.
7. கோல்ட் ஃபிஷ் (Gold fish): இது மிகவும் பழைமையான வளர்ப்பு மீன் வகை. அதிக பராமரிப்பு தேவைப்படும் (வெப்பநிலை, நீர் சுத்தம் முக்கியம்). இவற்றை பெரிய தொட்டியில் வளர்ப்பதே நல்லது.
8. ஏஞ்சல் மீன் (Angel fish): இவை அழகான, வெட்கமாக நடக்கும் தன்மை கொண்டவை. இவற்றுக்கு நடுத்தர அளவிலான பராமரிப்பே தேவைப்படும். இவற்றை சிறிய மீன்களுடன் வளர்க்க வேண்டாம்.
9. ஆல்கி ஈட்டர் (Algae Eater): இந்த வகை மீன்கள் பாசியை சாப்பிட்டு தொட்டியை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
10. கோரி கேட் ஃபிஷ் (Cory Cat fish): தொட்டியின் அடியில் தங்கும் உணவுக் கழிவுகளை சாப்பிட்டு அமைதியாக வாழும் இயல்பு கொண்டவை இவ்வகை மீன்கள்.
மீன் தொட்டி பராமரிப்பு வழிகள்:
1. வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை நீரை மாற்றவும். பழைய நீரை முழுவதுமாக மாற்ற வேண்டாம். அதனால் பயனுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, மீன்கள் பாதிக்கப்படலாம். குளிர்ந்த, குளோரின் இல்லாத தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும்.
2. மீன்களின் வகைக்கு ஏற்ப வெப்பநிலையை 24°C முதல் 28°C (75°F - 82°F)க்கு இடைப்பட்ட அளவில் வைத்திருக்கவும். ஹீட்டர் மற்றும் தெர்மா மீட்டர் (thermo meter) பயன்படுத்தவும்.
3. ஃபில்டர் ஒழுங்காக வேலை செய்யும் வகையில், அதனை வாரம் ஒருமுறை சுத்தம் செய்யவும். ஃபில்டரின் ஸ்பஞ்ச் அல்லது கார்பன் பகுதியை சுத்தம் செய்யும்போது, தொட்டியின் நீரிலேயே கழுவவும்.
4. அதிகமாக உணவு இடக் கூடாது. இது தண்ணீரைக் கழிவுகளால் மாசுபடுத்தும். ஒரு நாளுக்கு இரு முறை, மீன்கள் 2 முதல் 3 நிமிடங்களில் சாப்பிடக்கூடிய அளவு மட்டுமே கொடுக்கவும்.
5. நீரின் pH அளவு பொதுவாக 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். நீரின் இரசாயன நிலைகளை மீன் தாங்கக்கூடிய அளவில் வைத்திருக்கவும். இதற்காக water test kit பயன்படுத்தலாம்.
6. இயற்கை அல்லது செயற்கை தாவரங்களை தூய்மையாக வைத்திருக்கவும். மாசடைந்த அழகுக் கற்கள், அலங்காரங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.
7. Gravel Vacuum பயன்படுத்தி, தொட்டியின் அடியில் சேர்ந்த கழிவுகளை வாரம் ஒரு முறை சுத்தம் செய்யவும்.
8. ஒளியைக் கட்டுப்படுத்த வேண்டும். நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் விளக்கு வைத்தால் போதும். அதிக ஒளி பாசி வளர்ச்சிக்குக் காரணமாகிறது.
இந்த பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் மீன் தொட்டி சுத்தமாகவும், மீன்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.