
பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஏனெனில், அது அதிக விஷத்தன்மை கொண்ட விலங்காக இருக்கிறது. அதிலும் உலகில் வாழும் பாம்புகளில் மிக அதிக விஷத்தன்மை கொண்டது ராஜநாகம். இதன் கடியில் உள்ள நச்சு எதிரிகளை அடியோடு சாய்க்கும் வல்லமை கொண்டது. அத்தகைய ராஜநாகத்தின் தாய்மை ரகசியம் குறித்து இந்தப் பதியில் காண்போம்.
முட்டைகளைப் பாதுகாக்கும் ஒரே பாம்பு இனம்: ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை. அதிலும் கூடு கட்டி முட்டைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை ராஜநாகம் மட்டுமே. இதுதான் உலகிலேயே முட்டையைக் காப்பாற்றும் விசித்திரமான ஊர்வனமாகும்.
ராஜநாகத்தின் கூடு கட்டும் நடைமுறை: முட்டைகளுக்குத் தேவையான வெப்பநிலையை உருவாக்கும் விதமாக முட்டைகள் இடுவதற்கு முன், ராஜநாகம் காய்ந்த இலைகள் மற்றும் குச்சிகள் கொண்டு சுமார் ஒரு அடி உயரமான கூடு கட்டும்.
முட்டைகள் மற்றும் பாதுகாப்பு காலம்: ராஜநாகம் ஒரு சமயத்தில் 20 முதல் 40 முட்டைகள் வரை இடும். அதன் பின்னர் முட்டைகளை மூடி வைத்து, மேலிருந்தோ அல்லது சுற்றி நின்றோ 60 முதல் 90 நாட்கள் வரை அதைப் பாதுகாக்கும்.
தாய் ராஜநாகம் குஞ்சுகளை சாப்பிடுமா?: ராஜநாகம் முட்டைகள் பொரியும் வரை கடுமையாகப் பாதுகாக்கும் இயல்பைக் கொண்டவை. யாரும் அருகில் வந்தாலும் சத்தமிட்டு விரட்டி விடும். ஆனால், ராஜநாகம் மட்டும் அந்த இடத்தை விட்டு கொஞ்சமும் நகராது. அடைகாக்கும் அந்தக் காலத்தில் உணவு ஏதும் உண்ணாமல், முழு கவனத்தையும் முட்டைகளின் மீதே செலுத்தி அவற்றைக் காக்கும் குணம் கொண்டவை ராஜநாகம்.
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் பிறந்த பிறகு அவை வெளியேறும் தருணத்தில், பசியால் அவற்றை உண்ணாதிருக்க தாய் ராஜநாகம் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்று விடும். பிறந்த குஞ்சுகள் உடனடியாக சுற்றுப்புறத்தை உணர்ந்து, தங்களை பாதுகாத்து உணவு தேடத் தொடங்குகின்றன.
ராஜநாகத்தின் இனப்பெருக்க முறை ஒரு சிறப்பான இயற்கை சுழற்சி. இந்த இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு நடைமுறை மற்ற ஊர்வனங்களில் இல்லாத தனித்துவத்தை ராஜநாகத்திற்கு வழங்குகிறது. இயற்கையில் இவ்வாறு ஒரு வகையான பாதுகாப்பும், திட்டமிட்ட செயல்பாடும் மிக அபூர்வமானவை.
அதிக விஷத்தன்மை கொண்ட ராஜநாகத்திலும் தாய்மை உணர்வு, தனது இனத்தைக் காக்கும் திறன், கடமை உணர்வு ஆகியவை அதிசயப்படும் வகையில் அமைந்துள்ளது.