
தென் ஆப்ரிக்காவில் காணப்படும் ஹென்றி என்ற முதலை 2024 ம் ஆண்டு 124 வயதை கடந்தது.
இது போட்ஸ்வானாவில் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் 1903 ம் வருடம் பிடிக்கப்பட்டது. Crocworld எனுமிடத்தில் பாதுகாப்பான சூழலில் வைக்கப்பட்டுள்ளது. வயதானதாக இருந்தாலும் 10,000 குட்டிகளை இதுவரை ஈன்றுள்ளது. இதனால் முதலை இனம் காக்கப்படுகின்றது. இந்த முதலையின் எடை 700 கிலோவாகும். மேலும் இது ஐந்து மீட்டர் நீளமானது. உலகிலேயே மிகப் பெரிய முதலையாகக் கருதப்படுகிறது.
அது சரி, முதலைகள் ஏன் அதிக காலம் வாழ்கின்றன என்பது பற்றித் தெரியுமா?
முதலைகளின் உடம்பில் இருக்கும் குளிர்ச்சியான இரத்தம்தான் இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் அவைகளின் வாழும் காலம் அதிகமாகிறது.
முதலைகளின் நோயெதிர்ப்பு சக்தி மிக வலிமையாக இருப்பதாலும் மேலும் இதன் உடலில் உள்ள ஒருவித தனித்தன்மை வாய்ந்த புரதம் இதற்கு தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாப்பதாலும் முதலைகள் நீண்ட காலம் வாழ முடிகிறது. மேலும் இவைகள் வாழும் சுற்றுச் சூழலும் முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. ஹென்றி முதலையின் நீண்ட ஆயுளின் ரகசியம் இதுதான்.
எந்தவித எதிரி தாக்குதல் இல்லாமலும் நோய்களின் பாதிப்பு இல்லாமலும் இருப்பதே நீண்ட ஆயுளுக்குக் காரணமாகிறது. விஞ்ஞானிகளால் கூட முதலைகளின் நீண்ட ஆயுளுக்கான முழுமையான காரணங்கள் இன்னமும் அறியமுடியவில்லை. ஏனென்றால் விஞ்ஞானியின் காலத்தைவிட நீண்டகாலம் முதலையின் ஆயுட்காலம்!
ஹென்றி 124 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பது குறித்து விஞ்ஞானிகளும் ஆச்சர்யம் அடைகிறார்கள். விலங்கு பிரியர்கள் இதை ஒரு அதிசயமாக கருதுகிறார்கள். பார்வையாளர்களும் இதை அதிக அளவு கண்டு அதிசயிக்கிறார்கள்.