

பவளம் மனிதன் அணியும் நவரத்தினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அது வெறும் அலங்கார பொருள் மட்டும் இன்றி ஆரோக்கியம் காக்கவும் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. அது எப்படி உருவாகிறது பிறகு எப்படி பலன் தருகிறது என்பதனைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
அணிகலன்
மனிதன் இயற்கையான அழகுவுடன் செயற்கை அழகையும் சேர்த்து விரும்புகிறான். நவரத்தினங்களில் ஒன்றாக நமது முன்னோர்களால் மதிக்கப்பட்டுள்ள ஒரு வஸ்துவானது பார்வைக்கு கல் போலவும், எளிதில் ஒடிந்து நசுங்கி விடக்கூடியதாகவும் செந்நிறம் உடையதாகவும் உள்ளது. இந்த அரிய வியாபார சரக்குதான் மாலையாகக் கோர்க்கப்பட்டு நமது தாய்மார்களாலும், மனைவி, மக்களாலும், சகோதரிகளாலும் தம் கழுத்தில் அணியப்பெற்ற நற்பவளம்.
தோற்றம்
நற்பவளம் நவரத்தினங்களில் ஒன்றாக இருந்தாலும் வச்சிர பதுமராகம், மரகதம், நீலம், கோமேதகம், புஷ்பராகம், வைடூரியம் என்ற இந்த ஏழினையும்போல் கனிகளில் எடுக்கப்படும் கல்லாகாது. முத்துச்சிப்பிபோல் நீர்சரத்தினின்றும் முத்து உண்டாவத போல் அரிய ஒரு விலை உயர்ந்த பவளமும் ஒரு வகை பூச்சி யிலிருந்தே உண்டாகிறது.
வளர்ச்சி
தாம் வசிக்கும் சமுத்திரத்தின் அலைகள் தம்மீது பாதிக்காதபடி தற்காத்துக் கொள்ளுமாறு பல கோடி சிறுபூச்சிகள் கடலில் உண்டாக்கும் கடின பதார்த்தமே பவளம். பவளப் பூச்சிகள் பார்ப்பவர் கண்களுக்கு ஒரு செடி போலத் தோன்றும். அதனிடம் வேர்கள், தங்கள் தண்டில் பிரிந்த பல கிளைகள், கிளைகளில் உள்ள அரும்புகள், மலர்கள், பூவிதழ்கள் முதலியன இருப்பனபோல் தோன்றும். ஆயினும் சிறிது நுட்பமாய் ஆராய்பவருக்கு கருங்காலி போல் உறுதியாய் ஆழ்ந்த சமுத்திரத்தில் ஊன்றிக்கிடக்கும் இது ஒரு பிராணியே என்பது விளங்கும்.
அமைப்பு
பவளப் பூச்சியின் சரீரம் இரண்டு தோல் அடுக்ககளால் ஆக்கப்பட்டிருக்கின்றது. அவற்றில் புறத்தோல் கூச்சத்தை விளைவிக்கக் கூடியது. உள்தோல் வாய், ஆகாரக்குழாய், இறை குடல் உதரக்குழியில் ஜீரணிப்பு சுவாசம் ரத்த ஓட்டம், பிரதி உற்பாதனம் முதலியன நடந்தேறுகின்றன. பவளம் ஒரு அரிய வியாபார சரக்கு. பவளப்பாறைகள் இந்து மகா சமுத்திரத்திலும், பசிபிக் மகா சமுத்திரத்திலும் வளர்கின்றன.
கிடைக்கும் இடங்கள்
சிவப்பு பாறைகள் விசேஷமாய் மத்திய தரைக்கடலில் உள்ளன. இது அரிய வியாபார சரக்கு ஆதலால் மத்தியத் தரைக்கடலை சுற்றியுள்ள பல துறைமுகங்களிலும் எண்ணிலடங்கா மக்கள் பவள சம்பந்தப்பட்ட வேலைகளை செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் முத்து எடுப்பதுபோல் அல்ஜீரியா, மொராக்கோ முதலிய இடங்களிலும் நேப்பிள்சுக்கு அருகாமையிலும் சார்டினியா, காசிகா முதலிய தீவுகளின் கரையோரங்களிலும் மக்கள் தத்தம் படகு சாதனங்களுடன் முழுகி சதா பவளம் எடுப்பது முதற்கொண்டு வேலை செய்து வருகின்றனர்,
மெருகேற்றும் நாடுகள்
அவற்றை அழகுபடுத்த ரோம், ஜெனிவா, நேபிள்ஸ் முதலிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் செதுக்கப்பட்டு மெருகிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு பளபளப்பு கிடைக்கும். பின்னர் அங்கேயே மணி மணியாய் நறுக்கப்பட்டு உலகத்தில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
பயன்பாடுகள்
முன்பு பவளத்திற்கு ஐரோப்பியர்களில் ஒரு போட்டி இருந்தது. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இத்தாலியர் களாலேயே கையாளப்பட்டு வருகின்றது.
தங்கள் தலைக்கவசத்திற்கும் யுத்த யுத்தங்களுக்கும் சிறந்த அணிகளாக இதனை எகிப்தியரும், பிரஞ்சுக்காரர்களும் உபயோகப்படுத்தி வந்தனர்.
இன்று இந்தியாவில் நாம் மதிப்பதுபோல் அதனை ஒரு சிறந்த வைத்திய சரக்காக ரோமர் எண்ணி வந்தனர். நம்மவர்கள் இதனை பஸ்பம் ஆக்கி அப்பஸ்பத்தை இருமல், கக்குவான் முதலிய பல நோய்களை போக்க சிறந்த கை கண்ட ஔஷதவமாய் உபயோகிக்கின்றனர்.
தற்காலத்திலும் இத்தாலியர் இப்பவளத்துண்டத்தை மலடு நீக்கவும், கண்திருஷ்டி போக்கவும் கூடிய ஒரு சிறந்த ரட்சையாகக் கருதுகின்றனர். இந்தியர்கள் இதை நோய் போக்கும் பாதுகாப்பு கவசமாக கருதுவதுடன் ஒரு சிறந்த அணிகலனாகவும் இருப்பதால் அனைவரும் இதனை ஆவலுடன் அணிந்து வருகின்றோம்.