‘பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்’ - இந்தியாவின் 'பறவை மனிதர்' சலீம் அலி

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலியின் நினைவு தினமான இன்று (ஜூன் 20) அவரை பற்றி இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!
Salim Ali
Salim Aliimg credit -Deccan Herald
Published on

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது" என்று அடிக்கடி சொல்லி வந்த இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலியின் நினைவு தினமான இன்று (ஜூன் 20) அவரை பற்றி இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று பிரபலமாக அறியப்படுகிறார். சலிம் அலியின் முழுப்பெயர் சலிம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். அவர் ஒரு புகழ்பெற்ற இந்திய பறவையியல் நிபுணர் மற்றும் இயற்கை ஆர்வலர். அவர் பறவைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார் மற்றும் பல புத்தகங்களை எழுதினார். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் இவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை. இவர் அனைவராலும் ‘பறவை மனிதர்’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

சலீம் மொய்சுதீன் அப்துல் அலி 1896-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி மும்பையில் உள்ள கேத்வாடியில் பிறந்தார்.

அவருடைய சிறுவயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டனர். அவரது மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். பறவைகளை வேட்டையாடுவதையும், அவற்றை பதப்படுத்தி வீட்டில் தொங்கவிடுவதையும் ஒரு கவுரவ செயலாக பின்பற்றி வந்தார் சலீமின் மாமா. அதை பின்பற்றியே சலீம் அலியும் வேட்டையாட தொடங்கினார். அப்படி ஒரு முறை சலீம் ஒரு சிறிய குருவியை சுட்டுப் பிடித்தார்.

அந்தக் குருவி பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. அதை பார்த்ததும் அந்த பறவையை பற்றிய கேள்விகளை தனது மாமாவிடம் கேட்டார். அவர் சலீமை பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையை மாற்றிய தருணம் ஆகும். அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த பறவைகளையும் அதன் விவரங்களையும் பார்த்தார். அதிலிருந்து பறவைகளை ஆய்வு செய்யும் செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:
அழிந்துவிட்டதாக அறியப்பட்ட அரிய வகை பறவை இனம் கண்டுபிடிப்பு!
Salim Ali

இந்தியாவில் முதன்முதலாக பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியவர் என்ற பெருமை இவரையே சாரும். தூக்கணாங்குருவி பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பறவைகளை தொகுத்து கையேடு ஒன்றினை உருவாக்கினார். அது இன்று வரை பறவையியல் பற்றி ஆராய்ச்சி செய்யும் அனைவருக்கும் உதவியாக இருக்கிறது. வலசை போகும் பறவைகளின் தகவல்களை அறிந்து கொள்ள பறவைகளின் காலில் வளையம் இடும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பறவையியல் வளர்ச்சியில் அவரது ஆராய்ச்சிப் பணி மிகவும் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படுகிறது. 1930-ம் ஆண்டில் நெசவாளர் பறவையின் (weaver bird) இயல்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரையை அவர் வெளியிட்டார். இது அவரை அந்தத் துறையில் பிரபலமாக்கியது.

இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கும், நாகை மாவட்டம் கோடியக்கரைக்கும் வந்து பறவைகளை பார்த்து இருக்கிறார். இவரது பறவைகள் குறித்த ஆய்வுகளுக்காக இந்திய அரசு1958-ல் பத்ம பூஷண் மற்றும் 1976-ல் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இவர் தனது சுயசரிதையை 'ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் எழுதினார். பறவைகள் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் சலீம் அலியின் புத்தகங்கள் பேருதவி புரிகின்றன.

Salim Ali
Salim Aliimg credit -Wikipedia

சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

மக்கள் இவரை, ‘பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்’ என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலிம் அலிக்கு இப்பட்டம் மிகவும் பொருத்தமே.

சிறந்த தொலைநோக்கு பார்வையாளரும் உலகப் புகழ்பெற்ற பறவையியலாளருமான சலீம் அலியை பற்றிய சில உண்மைகள் இங்கே:

* மும்பையின் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகத்தின் இயற்கை வரலாற்றுப் பிரிவில் 1926-ல் வழிகாட்டி விரிவுரையாளராக பணியாற்றினார் சலீம் அலி.

* இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முறையான பறவை ஆய்வுகளை மேற்கொண்ட முதல் விஞ்ஞானிகளில் ஒருவராக அவர் இருந்தார்.

* சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் வட்டாரங்களில் அலி ஒரு செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.

* சலீம் பறவைகள் பற்றி ஆராய்ச்சி செய்தது மட்டுமல்லாமல், இயற்கையைப் பாதுகாக்கும் அரங்கிற்கும் பங்களித்தார்.

* அவரது அசாதாரண முயற்சிகளுக்காக, அவருக்கு ரூ.5 லட்சம் சர்வதேச விருது வழங்கப்பட்டது, ஆனால் அவர் முழுப் பணத்தையும் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

புரோஸ்டேட் புற்றுநோயுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, டாக்டர் சலீம் அலி 1987-ம் ஆண்டு தனது 91 வயதில் காலமானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com