
ஜெர்டன் கோர்சர் (Jerdon's courser) என்பது உலகில் காணப்படும் அரிய பறவை இனங்களில் ஒன்று. 1900ம் ஆண்டு முதல் எவருடைய கண்ணுக்கும் தென்படாததால் இந்தப் பறவை முற்றிலும் அழிந்து விட்டதாகக் கருதப்பட்டு வந்தது. இருப்பினும் 1986ம் ஆண்டு ஆந்திராவில் இப்பறவை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திராவில் எஞ்சியிருக்கும் இந்தப் பறவைக்கு ‘கலிவிக்கோடி’ என்ற தெலுங்கு பெயர் இருந்தாலும் பறவையியலாளர் தாமஸ் சி.‘ஜெர்டன் கோர்சர்’ என்ற பெயரில் இயற்கையியலாளர்கள் மத்தியில் நிலைத்து உள்ளது. ஜெர்டானின் நினைவாக பெயர் வைக்கப்பட்ட இந்தப் பறவை இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் சில இடங்களில் மட்டுமே காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் கடப்பா பகுதியை மட்டும் வாழிடமாகக் கொண்டிருக்கும் இந்தப் பறவை உலகின் மிகவும் அரிதான பறவைகளில் ஒன்று. 1848ம் ஆண்டு டி.சி.ஜெர்டான் என்ற ஆங்கிலேய பல் மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலரால்தான் இந்தப் பறவை முதன் முதலில் விவரிக்கப்பட்டிருந்தது. அவர் நினைவாகவே இந்தப் பறவைக்கு அவர் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
1900ம் ஆண்டில் இந்தப் பறவை கடைசியாக பார்க்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு நிறைய தேடல்களுக்குப் பிறகு 1986ல் கடப்பா மாவட்டத்தில் மறுபடியும் இந்தப் பறவை கண்டுபிடிக்கப்பட்டது. 1988ம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை இதன் மறு கண்டுபிடிப்பை நினைவு கூறும் வகையில் ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.
இளம் சிவப்பான பழுப்பு வண்ண இறகுகளும், அகன்ற வெள்ளி மாலை சூட்டியது போன்ற கழுத்தும் கொண்டிருக்கும் இப்பறவை. இதன் முகவாய் கட்டையும், தொண்டையும் வெண்மையாகக் காணப்படும். வயிற்றுப் பகுதி சாம்பல் வெண்மையிலும், வால் இறகுகள் கருமை படிந்த வெண்ணிறத்திலும் காணப்படும். ஒரு கையளவே உள்ள இந்த சிறிய பறவை வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் ரைனோப்டிலஸ் பிடோர்குவாட்டஸ்(Rhinoptilus bitorquatus).
வாழ்விட இழப்பு காரணமாக இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பறவை இரவு நேரப் பழக்கம் கொண்டதாகவும், பூச்சிகளை உண்ணும் என்றும் கருதப்படுகிறது. இது ஒரு அரிய பறவை என்பதால் அதன் நடத்தை மற்றும் கூடு கட்டும் பழக்கம் பற்றி இன்னும் எதுவும் சரியாகத் தெரியவில்லை.
கலிவிக்கோடியின் வாழ்விடம் 464.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லங்கமல்லேஸ்வரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஸ்ரீ பெனுசிலா நரசிம்ம வனவிலங்கு சரணாலயத்திலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இது வெற்று நிலத் திட்டுகளுடன் கூடிய அரிதான புதர்க் காடுகளில் வாழ்கிறது.
இப்பறவை மரங்கள் இருக்கும் இடத்தில்தான் அதிகம் காணப்படுவதால் இதற்கு கலிவிக்கோடி என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இவை பொதுவாக கலிவி மரங்களின் புதர்களில் காணப்படும். இப்பறவை 1848ம் ஆண்டு ஜெர்டனால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த பறவை ஜெர்டன்ஸ் கோர்சர் என்றும் அழைக்கப்படுகிறது.