'ஒரு மரம் ஒரு கோடி தீக்குச்சிகளை கொடுக்கும். ஆனால் ஒரு தீக்குச்சி ஒரு கோடி மரத்தையும் அழித்து விடும்' என்பது வனமொழி.
ஆனால், நெருப்புக்கு அஞ்சாத, தீப்பிடித்தாலும் எரியாத அதிசய மரம் ஒன்று இருக்கிறது!
நெருப்புக்கு அஞ்சாத ரோடோடென்ரான் மரங்கள் தனி சிறப்பு மிக்கவை. இம்மரத்தின் பட்டைகள் பல அடுக்குகளாக இருக்கும். தடித்த தோல் போன்ற இலை அமைப்புகளுடன் அழகிய வண்ண பூக்களை கொண்டவை. இவை சீனா, மியான்மர், நேபாளம், இலங்கை, மற்றும் தாய்லாந்து நாடுகளில் காணப்படுகின்றன. ரோடோடென்ரான் மரங்கள் அலிஞ்சி, காட்டு பூவரசு என்றும் அழைக்கப்படுகின்றன.
இதன் அருகில் நெருப்பு பிடிக்கும் சூழல் ஏற்படும் போது இதன் பட்டைகளில் இருந்து நீர் வடிய தொடங்கி விடும். இதனால் இந்த மரத்தில் தீ பிடிக்காது.
இந்தியாவில் இமயமலை, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே இம்மரம் காணப்படும். இங்கு குறிப்பாக 1500 மீட்டர் உயரத்துக்கு மேல் தான் வளரும்.
இமயமலையில் ரோடோ டென்ரான் ஆர்போரியம் என்றும், நீலகிரியில் ரோடோ டென்ரான் நீலகிரிக்கா என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் காட்டு பூவரசு என்றும், படுகர் இன மொழியில் பில்லி என்ற பெயரும் உண்டு.
இவை பரந்த புல்வெளிகளில் வளரும் தன்மை உடையவை. தமிழகத்தில் உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் புல்வெளிகளின் பரப்பு அதிகரிக்கும். இதனால் அழிகின்ற காலகட்டத்தில் இருக்கும் ரோடோடென்ரான் மரங்களும் மறுமலர்ச்சி பெறும்.
இவை குறைந்த பட்சம் 150 ஆண்டுகள் வரை வளரக் கூடியவை. மற்றும் வளர்ச்சி குறைவானவை. 10 ஆண்டுகள் வயதுடைய மரம் கூட 3 அடி உயரம் தான் வளர்ந்திருக்கும். இது எப்படிப் பட்ட பலமான காற்றையும் தாங்கி நிற்கும் மர வகை ஆகும்.
ரோடோடென்ரான் மலர் நேபாளத்தின் தேசிய மலர். நீலகிரியின் பூர்வீக குடிகளான தோடர் இனத்தாரின் வழிபாட்டில் இம்மரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களின் அனைத்து வகையான வழிபாட்டிலும் இம்மரத்தின் மலர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இம்மரத்தின் மலர்களுக்கு போரஸ் என்று பெயர். மலர்கள் சிவப்பு நிற ரோஜா மலர் போன்று பூக்கும். அடர் சிவப்பு மற்றும் வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இம்மரத்தின் மலர்கள் தனி வடிவம் கொண்டவை. கொத்து கொத்தாய் பூக்கும் இந்த மலர்களைப் போல வேறு எந்த மலர்களும் வனப்பகுதிகளில் இல்லை என்கிறார்கள். இந்த மலர்களை அருகில் சென்று பார்க்கும் போது மனதிற்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
இம்மரத்தின் மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இந்த மரங்களில் இருந்து உருவாக்கப்படும் சாறு மலச்சிக்கலையும், டயரியாவையும், கட்டுபடுத்தும் சக்தி கொண்டது.
இமயமலையில் உள்ள ரோடோடென்ரான் மரத்தின் இலைகளிலிருந்து அப்பகுதி மக்கள் தேநீர் தயாரிக்கின்றனர்.
நீலகிரி வனங்களை ஆக்ரமித்துள்ள அந்நிய தாவரங்களை அகற்றும் பணி நடந்து வருவதால் ரோடோடென்ரான் மரங்கள் மறுமலர்ச்சி பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
நாகலாந்து மாநிலம் கோகிமா மாவட்டத்தில் உள்ள ஜாப்பூ மலையில் 108 அடி உயரம் கொண்ட மரம் 1993_ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதுவே மிக உயரமான ரோடோ டென்ரான் மரம் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.