
“அடடா! இதை விட பெரிய பனிப்படி அடுக்கு ஒன்றை இனிமேல் பார்க்கவே முடியாது” என்று 1841ம் ஆண்டு ரோஸ் பனிப்படி அடுக்கைப் (Ross Ice Shelf) பார்த்த ஜேம்ஸ் க்ளார்க் ரோஸ் (Captain James Clark) Ross வியந்தார்.
அவர் பெயராலேயே உலகின் மிகப்பெரிய பனிப்படி அடுக்கு பின்னால் அழைக்கப்படலாயிற்று!
பிரிட்டிஷ் அரசால் தென் துருவப் பகுதியை ஆராயப் பணிக்கப்பட்டார் ஜேம்ஸ் க்ளார்க் ரோஸ்.
குறிப்பாக தெற்கில் உள்ள காந்த துருவத்தை (South Magnetic Pole) ஆராய வேண்டும் என்பது அவரது லட்சியம்.
1773-ல் ஜேம்ஸ் குக் அட்லாண்டிக் பகுதியை முதன் முதலில் ஆராய்ந்தார். தொடர்ந்து 1823-ல் ஜேம்ஸ் வெடல் என்பவர் ஆராய்ந்தார்.
1840 நவம்பரில் சிறிய ஆனால் வலிமை மிக்க கப்பல்களான டெர்ரர் மற்றும் எர்பஸ் (Terror and Erebus) ஆகிய இரண்டும் அந்த பனிப்படி அடுக்குப் பகுதிகளுக்குச் சென்றன.
மெதுவாக ஆனால் கவனமாக அந்த படுபயங்கரமான பகுதிக்குள் சென்று கொண்டிருந்தார் ரோஸ். திடீரென்று அவரது பணியாளர்களுள் ஒருவன் ‘ஆஹா’ என்று கத்தினான்.
உடனே டெலஸ்கோப் மூலம் அந்தக் பகுதியைப் பார்த்த ரோஸ் வியந்தார். அந்தப் பகுதிக்குள் கப்பலில் செல்வது சாத்தியம் தானா?
முன்னே சென்ற போது தான் அந்தப் பனிப்படி அடுக்கை நெருங்கிப் பார்க்க முடிந்தது.
இந்தப் பனிப்படி அடுக்கைத் தாண்டி, இனி தென் காந்த துருவத்திற்குச் செல்வதற்கு வழியே இல்லை என்று அவர் உணர்ந்தார். இரண்டு வருடம் அந்தப் பகுதியில் சுற்றி ஆராய்ந்த ரோஸ் ஏராளமான குறிப்புகளை எடுத்தார்.
மிதக்கின்ற உலகின் மிகப் பெரும் பனிப்படி அடுக்கு என்ற ரோஸ் ஐஸ் ஷெல்ப் 500 மைல் நீளம் உள்ளது.
அது கடலிலிருந்து தென் துருவத்திற்கு உள்ளே 600 மைல் பரந்து விரிந்திருந்தது. அதன் மேல் பரப்பு மட்டும் இரண்டு லட்சம் சதுர மைல் என்ற பிரம்மாண்ட பரப்பைக் கொண்டிருந்தது. ஒரு கன்வேயர் பெல்ட் போல 25 மைல் நீளத்திற்கு உயர்ந்தும் சரிந்தும் இருந்த அது கண்கொள்ளாக் காட்சியைத் தந்தது!
தென்பகுதியில் இந்த ஐஸ்கட்டியின் கனம் 2400 அடியாகவும் வடக்கில் இதில் பாதியாகவும் இருந்தது.
மிகத் தொலைவில் இருந்த ட்ரான்ஸாண்டார்டிக் மலைகளிலிருந்து வந்த க்ளேஸியர் எனப்படும் பிரமாண்டமான பனிப்பாறைகள் இந்தப் பனிப்படி அடுக்கின் பின்னால் வந்து சேர்ந்தன.
இந்தப் பனிப்பாறைகளுள் மிகப் பெரியதான பியர்ட்மோர் பனிப்பாறை உள்ளிட்டவை அடங்கியிருந்தன.
அடுக்கு அடுக்காக இவை சேரவே ரோஸ் பனிப்படி அடுக்கு மிக பிரம்மாண்டமாக ஆனது!
ஆனால் இந்த பனிப்படி அடுக்கின் மேல் பரப்பு வியக்கத்தக்க அளவில் சம பரப்பைக் கொண்டிருக்கவே பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இங்கு முகாம் அமைத்து ஆராய ஆரம்பித்தனர்.
1908-ல் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரான எர்னஸ்ட் ஷாக்கில்டன் (Ernent Shackleton) இதன் மேற்குப் பகுதியில் தனது முகாமை அமைத்து தென் துருவத்தை அடைந்தே ஆவது என்று கங்கணம் கட்டிக் கொண்டார்.
அவரது மூன்று பணியாளர்கள் தென்காந்த துருவத்தை அடைந்து சாதனையைப் படைத்தனர்.
1908, அக்டோபர் 29ம் தேதியன்று நான்கு மட்டக்குதிரைகள் பூட்டிய பனிச்சறுக்கு வண்டிகளில் ஏறி முதன்முதலாக பியர்ட்மோர் க்ளேஸியர் மீது ஏறினார் ஷாக்கில்டன்.
துருவத்தின் உச்சி இன்னும் 100 மைல் இருக்கும் போது குதிரைகள் இறந்தன. உணவும் தீர்ந்து விட்டது. வேறு வழியின்றி அவர் குழு கீழே இறங்க வேண்டியதாயிற்று.
1911 ஜனவரியில் இன்னொறு ஆய்வாளரான காப்டன் ராபர்ட் ஸ்காட் ஷாக்கில்டன் இறங்கிய பகுதியை அடைந்தார். அதே சமயம் நார்வேயிலிருந்து வந்த இன்னொரு ஆய்வாளரான ரோல்ட் அமுண்ட்சென் என்பவர் கிழக்குப் பகுதியில் இறங்கினார். இருவருக்கும் இடையே போட்டி – முதலில் யார் சிகரத்தை அடைவது என்று!
வெயில் அதிகமாக இருந்த சமயம் பார்த்து அமுண்ட்சென் தொடர்ந்து முன்னேறி 1911 டிசம்பர் 14ம் தேதியன்று துருவத்தை அடைந்தார். அடுத்த மாதம் தான் ராபர்ட் ஸ்காட் அங்கு சென்றார்.
திரும்பும் போது ஸ்காட்டின் மிருகங்கள் இறக்கவே அவர் படாத பாடுபட்டார். பலர் இறந்தனர்.
கடைசியில் ஒருவழியாக குழுவினரில் உயிர் பிழைத்தவர்களில் மீதிப் பேர் தரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
ஸ்காட் தனது டயரில் இப்படி எழுதினார்:
“அட, கடவுளே! இது ஒரு மோசமான பகுதி தான்!”
Antarctic Region எனப்படும் தென் துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் எம்ப்ரர் பெங்குயின் இந்தப் பனிப்படி அடுக்கில் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பது அதிசயமான செய்தி தான்!
இங்குள்ள பெண் பெங்குயின் முட்டை இடும்போது ஆண் பெங்குயின் அதன் மீது இருந்து முட்டைக்கு உஷ்ணத்தைக் கொடுத்து குஞ்சு வெளி வரும் வரை காக்கிறது!
இப்படி பல அதிசயங்கள் இந்த தென் துருவப் பகுதியில் உள்ளன!